'குறட்டை விடுகிறேன்; தூக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 முறை சுவாசம் தடைபடுவதை அறியாதிருக்கிறேன்'

தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை
    • எழுதியவர், ரூத் கிளெக்
    • பதவி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு செய்தியாளர்

இது லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கிறது, ஆனால் நம்மில் சிலருக்கே நமக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியும். எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

'தூக்கத்தில் மூச்சுத்திணறல்' (Sleep Apnoea) என்பது நீங்கள் தூங்கும்போது உங்கள் சுவாசம் அவ்வப்போது நின்று பின் தொடங்கும் ஒரு தீவிரமான கோளாறு ஆகும். மிகவும் கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு நிமிடமும் 10 விநாடிகளுக்கு மேல் சுவாசம் நிற்கக்கூடும்.

இரவில் என்ன நடந்தது என்று தெரியாமலேயே அவர்கள் காலையில் விழிப்பார்கள், ஆனால் பகல் நேரத்தில் விவரிக்க முடியாத அளவுக்கு சோர்வாக உணர்வார்கள்.

'தி லான்செட்' இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரிட்டனில் சுமார் 80 லட்சம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் அவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கே இது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இளைஞர்களிடையே இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதற்கு உடல் பருமன் அதிகரிப்பதும் ஒரு காரணம். கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத மூச்சுத்திணறல் உங்கள் ஆயுட்காலத்தை பத்து ஆண்டுகள் வரை குறைக்கலாம். மேலும் இது டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

"இந்த நிலை குறித்து நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்," என்று லண்டனில் உள்ள செயின்ட் பார்தலோமிவ் மருத்துவமனையின் சுவாச ஆலோசகர் மருத்துவர் பிரினா ருபரெலியா கூறுகிறார். "நாம் ஏன் ஒரு 'தூக்க ஆய்வு' செய்து என்ன நடக்கிறது என்று பார்க்கக்கூடாது?" என்று அவர் என்னிடம் கேட்டார்.

நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். எனக்குத் தேவையான கருவிகளை ருபரெலியா கொடுத்து அனுப்பினார். அதில் எனது காற்றோட்டத்தைக் கண்காணிக்க ஒரு நாசி நுண்குழாய், நான் சுவாசிக்க எடுக்கும் முயற்சியைக் கணக்கிட மார்பு மற்றும் வயிற்றுப் பட்டைகள், மற்றும் இதயம் மற்றும் ஆக்ஸிஜன் அளவை அளவிட விரலில் மாட்டப்படும் ஒரு சிறிய கிளிப் ஆகியவை இருந்தன.

நாடு முழுவதும் இது போன்ற தூக்க ஆய்வுகளில் பங்கேற்க மக்கள் மாதக் கணக்கிலும், சில சமயங்களில் ஒர் ஆண்டு வரையிலும் காத்திருக்கிறார்கள். எனவே காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, நோயாளிகள் இந்தக் கருவிகளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது வயதான, அதிக எடை கொண்ட ஆண்களை மட்டுமே பாதிக்கும் என்பது பொதுவாக நம்பப்படும் தவறான கருத்து. அவர்களுக்கு ஆபத்து அதிகம் என்பது உண்மைதான், ஆனால் இது அனைத்து வயதினர், பாலினம் மற்றும் உடல் வகை கொண்டவர்களையும் பாதிக்கும் - என்னைப் போன்ற 40-களில் இருக்கும் மெலிந்த பெண்களையும் கூட.

தூக்கத்தில் சத்தம் எழுப்புபவள் (மற்றவர்கள் என்னை சத்தமாக குறட்டை விடுபவள் என்பார்கள்) மற்றும் மதியத் தூக்கத்தை விரும்புபவள் என்ற முறையில், மூச்சுத்திணறலைக் கண்டறியும் மூன்று முக்கிய அறிகுறிகளில் இரண்டை நான் ஏற்கனவே கொண்டிருந்தேன். என் அருகில் படுத்து தூங்குபவர்களிடம் பேசியபோது, மூன்றாவது அறிகுறியும் (தூக்கத்தில் மூச்சு விடத் திணறுவது) எனக்கு இருப்பதை அறிந்து கொண்டேன்.

நான் படுக்கையில் படுத்தபோது, சென்சார்கள் மற்றும் அகச்சிவப்பு கேமராக்கள் என்னை நோக்கி இருந்தன. டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படத்திற்காகப் படம்பிடிக்கப்படும் ஒரு விலங்கைப் போல நான் உணர்ந்தேன்.

ஆனால் இந்தச் சோதனை எனக்கு மூச்சுத்திணறல் உள்ளதா என்பதைக் காட்டும், இருந்தால் அது எந்த வகை என்பதையும் விளக்கும்.

தடைபடும் தூக்க மூச்சுத்திணறல் (Obstructive Sleep Apnoea - OSA) என்பது மிகவும் பொதுவானது. நாக்கு மற்றும் தொண்டை தசைகள் அளவுக்கு அதிகமாகத் தளர்வடைவதால் காற்றோட்டப் பாதை குறுகி அல்லது அடைபட்டு இது ஏற்படுகிறது.

மத்திய தூக்க மூச்சுத்திணறல் (Central Sleep Apnoea): இதில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் தசைகளுக்கு மூளை சமிக்ஞைகளை அனுப்பத் தவறுகிறது, இதனால் இரவில் சுவாசம் குறைந்து ஆக்சிஜனும் குறைகிறது.

மூச்சுத்திணறல் ஏற்படும்போது, நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் அளவு 90% குறைகிறது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்குகிறது.

உடல் காற்றைப் பெறப் போராடுவதால் இதயம் வேகமாகத் துடிக்கிறது, ரத்த அழுத்தம் உயர்கிறது.

மூளை இந்த சிக்கலைக் கண்டறிந்து உங்களை ஒரு கணம் விழிக்கச் செய்கிறது. நீங்கள் ஒரு குறட்டை சத்தத்துடனோ அல்லது மூச்சுத் திணறலுடனோ விழிப்பீர்கள். அப்போது அடைப்பு நீங்கி சுவாசம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாமலேயே நடக்கக்கூடும். எனவே இரவில் என்ன நடந்தது என்ற எந்த நினைவும் இல்லாமல் நீங்கள் காலையில் விழிக்கக்கூடும்.

மறுநாள் காலையில் நான் கருவியைத் திருப்பிக் கொடுத்தபோது, ருபரெலியா எனது முடிவுகளை ஆய்வு செய்தார். "நீங்கள் ஒரு கட்டையைப் போலத் தூங்கியதாகச் சொன்னீர்கள், ஆனால் தரவுகள் வேறொன்றைக் கூறுகின்றன," என்றார்.

தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை

நான் தூங்கும்போது என் சுவாசம் நின்ற நிகழ்வுகளை சென்சார்கள் பதிவு செய்திருந்தன. ஒரு மணி நேரத்தில் 10 முறை என் சுவாசம் நின்றது கண்டறியப்பட்டது, ஒவ்வொன்றும் சுமார் 30 வினாடிகள் நீடித்தன.

"மறுநாள் காலையில் நான் பரிசோதனைக் கருவியைத் திரும்பக் கொடுத்தபோது, 'குட் மார்னிங்' என்று ருபரெலியா கூறினார்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் மிகவும் ஆர்வமாக இருப்பதால், தனது பணி நேரத்தைத் தாண்டியும் எனது முடிவுகளை ஆய்வு செய்ய முன்வந்தார். முக்கியமாக, நான் எந்த முன்னுரிமையும் பெறவில்லை என்பதைக் குறிப்பிடுவது அவசியம்.

'எப்படித் தூங்கினீர்கள்?' என்று அவர் கேட்டார்.

'ஒரு கட்டையைப் போல (நன்றாகத்) தூங்கினேன்' என்று நான் பதிலளித்தேன்.

'உண்மையில் அப்படி இல்லை' என்று கூறிய அவர், நான் தூங்கிக் கொண்டிருந்தபோது சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வை என்னிடம் காட்டினார்.

சென்சார்கள் எனது தூக்க மூச்சுத்திணறல் நிகழ்வுகளைப் பதிவு செய்திருந்தன. எனது உடலுக்குள் செல்லும் காற்றின் அளவு 90 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்த இடங்களை வரைபடங்கள் காட்டின - இது நான் சுவாசிப்பதை நிறுத்திவிட்டேன் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

திரையைச் சுட்டிக்காட்டியபடி, 'உங்கள் ஆக்ஸிஜன் அளவுகள் குறைந்திருப்பதையும், இதயத் துடிப்பு அதிகரித்திருப்பதையும் உங்களால் பார்க்க முடிகிறது' என்றார் ருபரெலியா.

ஒரே ஒரு மணி நேர இடைவெளியில், நான் 10 முறை சுவாசிப்பதை நிறுத்தியிருந்தேன், ஒவ்வொன்றும் சுமார் 30 வினாடிகள் நீடித்தன.

"கவலைப்படாதீர்கள்," என்று அவர் கூறுகிறார்.

'கவலைப்பட வேண்டாமா?' – இதை கிட்டத்தட்ட சத்தமாகவே சொல்லியிருப்பேன்.

"உங்கள் உடல் தானாகவே விழித்துக்கொள்ளும்," என்று தொடர்ந்த ருபரெலியா, "முடிவில் நீங்கள் சுவாசித்துவிடுகிறீர்கள்," என்றார்.

நான் மல்லாக்கப் படுத்துத் தூங்கும்போது மட்டுமே எனது சுவாசம் நிற்கிறது – இதற்கு சற்றே குறுகலான சுவாசப்பாதை மற்றும் தசைகள் தேவையற்ற அளவுக்குத் தளர்வடைவதுமே காரணம் என்று அவர் விளக்கினார்.

ஆனால் எனக்கு இதைப் பற்றி எந்த நினைவும் இல்லை.

"பெரும்பாலும் மக்கள் இதை உணர்வதில்லை, அவர்களுடைய துணை தான் இதைக் கவனிக்கக்கூடும்," என்று ருபரெலியா விளக்குகிறார். "குறட்டை விடுவதும், மூச்சு விடத் திணறுவதும் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகளாகும்."

என்னை நான் ஒரு ஆரோக்கியமான, 'டிரையத்லான்' போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீராங்கனையாகவே பார்க்கிறேன்; நள்ளிரவில் சுவாசம் நின்று போகும் ஒரு நபராக அல்ல. எனவே, எனக்கு லேசான 'தடைபடும் தூக்க மூச்சுத்திணறல்' இருப்பது கண்டறியப்பட்டது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை

தூக்க மூச்சுத்திணறலின் அறிகுறிகள் யாவை?

இரவு நேரத்தில், உங்கள் சுவாசப்பாதை அடைபடுவதால் உங்கள் சுவாசம் நின்று நின்று தொடங்கும். உங்களுக்கு அருகில் யாராவது உறங்கினால், நீங்கள் மூச்சு வாங்க திணறுவதையோ அல்லது திடீரென குறட்டை போன்ற சத்தங்களை எழுப்புவதையோ அவர்கள் கேட்கக்கூடும்.

உங்கள் சுவாசப்பாதை பகுதியளவு தடைபடுவதாலும் அதன் வழியாகக் காற்று செல்லும்போது திசுக்கள் அதிர்வடைவதாலும், நீங்கள் பெரும்பாலும் அதிகமாக குறட்டை விடுவீர்கள். தூக்கத்தில் நீங்கள் அவ்வப்போது சிறிது நேரம் விழிப்பீர்கள், ஆனால் காலையில் அது உங்களுக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம்.

ஆழ்ந்த உறக்கம் இல்லாத காரணத்தால், இதன் அறிகுறிகளில் ஒன்றாக தலைவலியுடன் விழிப்பீர்கள் மற்றும் நாள் முழுவதும் உங்களுக்கு மனநிலை மாற்றங்கள் (Mood swings) ஏற்படக்கூடும்.

நீங்கள் எப்போதும் தூக்க கலக்கத்துடனும், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போட வேண்டும் என்ற தேவையுடனும் இருக்கலாம். எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

ஸோ டாட்ஸ் என்பவருக்குத் தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்தம் - சிபிஏபி (CPAP -Continuous Positive Airway Pressure) இயந்திரத்தைப் பெற ஓராண்டு காலம் ஆனது. இந்த சாதனம், அவர் ஒவ்வொரு இரவும் தூங்கும் போது வாயின் மேல் அணியும் ஒரு முகக்கவசம் வழியாகக் காற்றைச் செலுத்துகிறது.

ஒரு சிபிஏபி இயந்திரம் ஸோ டாட்ஸின் தூக்கத்தை மேம்படுத்த உதவியது, ஆனால் சிலருக்கு இது அசெளகரியமாக இருக்கிறது.

பர்மிங்காம் நகரைச் சேர்ந்த 27 வயதான ஸோவுக்கு, 2024 ஜனவரியில் கடுமையான தூக்க மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தூங்கும் போது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒருமுறை சுவாசம் நின்று போவதை அவர் கண்டறிந்தார்.

தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை

'வாழ்க்கை மிகவும் சோர்வாக இருந்தது, ஆனால் நான் இவ்வளவு சோர்வாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கவே இல்லை,' என்கிறார் ஸோ. தனது நோய் கண்டறியப்பட்ட கடிதத்தைப் பார்த்தபோது தான் அழுததாகக் கூறும் அவர், 'உடல் எடை அதிகமுள்ள, வயதான ஆண்களுக்குத்தான் இது வரும் என்று நான் உண்மையில் நினைத்திருந்தேன் - எனக்கு அல்ல,' என்கிறார்.

சிபிஏபி இயந்திரம் ஸோ நன்றாகத் தூங்குவதை உறுதி செய்கிறது, இப்போது அவர் தனது குழந்தைகள் மற்றும் வேலைக்காக அதிக ஆற்றலுடன் இருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்யத் தொடங்கி, ஐந்து ஸ்டோன் (32 கிலோ) உடல் எடையைக் குறைத்துள்ளார்.

ஸோ சமீபத்தில் மற்றொரு தூக்க ஆய்வில் பங்கேற்றார். அதில் அவர் தூக்கத்தில் சுவாசம் நிற்கும் எண்ணிக்கை ஒரு மணி நேரத்திற்கு 31-லிருந்து வெறும் 4-ஆகக் குறைந்துள்ளது. இது சாதாரண அளவாகும்.

இப்போது அவருக்கு சிபிஏபி இயந்திரம் தேவைப்படுவதில்லை. 'அந்த நோயைக் கண்டறிந்தது என் உயிரைக் காப்பாற்றியது,' என்கிறார் அவர்.

இந்தச் சாதனங்கள் என்.எச்.எஸ் அமைப்பால் மிகச்சிறந்த சிகிச்சை முறையாகக் கருதப்பட்டாலும், அவை அனைத்து நோயாளிகளுக்கும் வேலை செய்வதில்லை. இதைப் பின்பற்றுபவர்களின் விகிதம் குறித்த பல ஆய்வுகள், சிபிஏபி பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஓராண்டுக்குப் பிறகும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் வெறும் 40 சதவீதத்தினர் மட்டுமே எனக் கூறுகின்றன.

இரவு முழுவதும் அவ்வளவு பெரிய முகக்கவசத்தை அணிந்து தூங்குவதற்குச் சிலர் சிரமப்படுகிறார்கள். மற்றவர்கள் இது ஒரு மூச்சுத் திணறல் உணர்வை ஏற்படுத்துவதாகக் கருதுகிறார்கள். சிலருக்கு இந்த இயந்திரத்தை ஒவ்வொரு இரவும் இயக்குவதற்கான செலவு ஒரு தடையாக இருக்கிறது.

தூக்கம், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்னை

லேசான அல்லது நடுத்தர அளவிலான தூக்க மூச்சுத்திணறல் உள்ள என்னைப் போன்றவர்களுக்கு, தற்போது என்.எச்.எஸ்-ஸில் பரவலாகக் கிடைக்காத மற்றொரு சிகிச்சை முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சில தூக்க நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதுதான் 'மேண்டிபுலர் அட்வான்ஸ்மென்ட் டிவைஸ்' (MAD) எனப்படும் வாய் கவசம் (Mouthguard). நோயாளிகள் தூங்கும் போது இதை வாயில் பொருத்திக் கொள்ளலாம். இது கீழ் தாடையைச் சற்றே மென்மையாக முன்னோக்கி இழுத்து, இரவு முழுவதும் சுவாசப்பாதை திறந்து இருக்க உதவுகிறது.

பார்ட்ஸ் ஹெல்த் என்.எச்.எஸ் டிரஸ்டில் பல் மருத்துவத் தூக்க மருத்துவத்தில் சிறப்பு ஆர்வம் கொண்ட ஆலோசகர் மற்றும் பல் சீரமைப்பு நிபுணரான பேராசிரியர் ஆமா ஜோஹல், மற்ற பல் மருத்துவர்களுக்கு இந்தச் சாதனங்களைப் பொருத்தப் பயிற்சி அளிக்கிறார். ஆனால், இவை பரவலாகக் கிடைக்காத காரணத்தால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த வாய்ப்பை இழக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

"எத்தனையோ நோயாளிகள் எந்தத் தீர்வும் இல்லாமல் தவிக்கிறார்கள்," என்று ஜோஹல் கூறுகிறார். "இதுபோன்ற ஒரு சாதனம் பரவலாகக் கிடைப்பதோடு, என்.எச்.எஸ் (NHS) மூலம் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற வேண்டும்."

இந்தச் சாதனங்களில் நிபுணத்துவம் பெற்ற '32co' என்ற தனியார் நிறுவனத்தின் மருத்துவத் தலைவராக இருப்பதால், இதில் அவருக்கு வணிக ரீதியான ஆர்வம் இருக்கிறது. இருப்பினும், என்.எச்.எஸ் அமைப்பில் 30 ஆண்டுகால மருத்துவ மற்றும் ஆராய்ச்சி அனுபவத்திற்குப் பிறகு, நோயாளிகளுக்கு இந்த மாற்று சிகிச்சை எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் நேரில் கண்டுள்ளார். பல ஆய்வுகள் இவை பயனுள்ளவை என்றும், சிபிஏபி இயந்திரங்களை விட நோயாளிகளால் எளிதாக பயன்படுத்தக் கூடியவை என்றும் ஒப்புக்கொள்கின்றன.

ஒரு பொது மருத்துவர் அல்லது சுவாச ஆலோசகர் இந்த எம்ஏடி கருவியைப் பரிந்துரைக்கலாம் மற்றும் நோயாளியின் பராமரிப்பைக் கண்காணிக்கலாம். ஆனால், சிறப்புப் பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே இதனைப் பொருத்த முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள வால்க்டன் நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில், எனது வாயின் ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு, எனக்கான எம்ஏடி கருவி பொருத்தப்படவிருந்தது.

"ஆவ்," என்று நான் மெல்லிய குரலில் முனகினேன். பல் மருத்துவர் சைமன் பெட்ஸ் அந்தச் சாதனத்தை எனக்குப் பொருத்தினார். அது என் தாடையை முன்னோக்கி இழுப்பதை என்னால் உடனே உணர முடிந்தது.

நல்ல உறக்கத்தைப் பெறப்போகும் ஒரு பெண்ணைப் போலத் தெரியாமல், ஏதோ ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட வில்லியைப் போலத் தெரிந்தாலும், அது எனது தூக்கத்தை மேம்படுத்துமா என்பதை அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நான் இப்போது சற்றே அதிக ஆற்றலுடன் இருக்கிறேன். தினமும் மதியத் தூக்கம் போட வேண்டும் என்ற உந்துதல் இப்போது இல்லை, எனது குறட்டைச் சத்தமும் குறைந்துவிட்டது - எனது கணவர் இது குறித்துப் புகார் செய்வதை இப்போது குறைத்துக் கொண்டுள்ளார்.

தற்போதைக்கு, நான் இதைத் தொடர்ந்து அணிவேன்.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு, 'தூக்க மூச்சுத்திணறல்' இருக்கலாம் என்று தோன்றினால், உங்கள் பொது மருத்துவரிடம் பேசுங்கள். உங்கள் அறிகுறிகள் லேசானதாக இருந்தால், அவர்கள் சில வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். இதில் உடல் எடையைக் குறைத்தல், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஒருக்களித்துப் படுத்தல் போன்றவை அடங்கும்.

தூங்குவதற்கு முன் மது அருந்துவதைக் குறைப்பதும், புகைப்பிடிப்பதை நிறுத்துவதும் கூட இதற்கு உதவும்.

தீவிரமான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, நான் மேற்கொண்டதைப் போன்ற ஒரு தூக்க ஆய்வில் பங்கேற்குமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு