இந்திய தங்கத்தை விட துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக தோன்றுவது ஏன்? இரண்டில் எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா மியாபுரம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
துபையிலிருந்து உறவினர்களோ அல்லது நண்பர்களோ இந்தியாவிற்கு வரும்போது, அவர்களிடம் தங்கம் வாங்கி வரச் சொல்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து வேலைக்காக துபை சென்றவர்கள் நாடு திரும்பும்போது, தங்கள் வசதிக்கு ஏற்ப தங்கம் வாங்கி வருவது பொதுவான ஒன்று.
"துபையில் தங்கம் விலை குறைவு, அது பச்சை நிறத்தில் மின்னும், தரம் நன்றாக இருக்கும்" என்று பலரும் கூறுவதுண்டு. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது?
உண்மையிலேயே தங்கத்தின் தரத்தில் வித்தியாசம் உள்ளதா? விலை வித்தியாசம் அவ்வளவு அதிகமாக இருக்குமா?
மறுபுறம், தற்போது இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது.
இந்திய பொக்கிஷ உலோகங்கள் மற்றும் நகைகள் அமைப்பு (இந்தியன் புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன்) ஒவ்வொரு நாளும் இரண்டு முறை தங்கம் விலையை அறிவிக்கிறது.
ஜனவரி 25-ஆம் தேதி இரவு 09:10 மணியளவில் 24 காரட் தரத்திலான10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1,56,710-ஐ எட்டியுள்ளது.
இந்திய தங்கம்-துபை தங்கம் இரண்டில் எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images
தற்போது துபை தங்கத்திற்கும், இந்தியாவில் கிடைக்கும் தங்கத்திற்கும் தரத்தின் அடிப்படையில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று ஹைதராபாத் பாட் மார்க்கெட் நகைக்கடைகள் அமைப்பின் இணைச் செயலாளர் சுனில் குமார் ஜெயின் பிபிசியிடம் தெரிவித்தார்.
"1990-களில் இந்தியாவில் 18 கேரட் தங்கம்தான் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தது. அப்போது 22 கேரட் தங்கம் நமக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கும் அது குறித்த விழிப்புணர்வு இல்லை. நகை வியாபாரிகளாலும் அந்தத் தரத்தை வழங்க முடியவில்லை. ஆனால், இந்தியாவில் ஹால்மார்க் (Hallmark) முறை கொண்டு வரப்பட்ட பிறகு, துபை தங்கம் மற்றும் இந்திய தங்கத்தின் தூய்மை சமமாகவே உள்ளது," என்று அவர் விளக்கினார்.
காரட் கணக்கீடு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் மிகவும் கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவதாக அவர் கூறினார்.
இருப்பினும், ஆபரணங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு முறையில் இரு நாடுகளுக்கிடையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"துபையில் பெரும்பாலும் இயந்திரங்கள் மூலம் நகைகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் பாரம்பரிய நகைகளை மக்கள் விரும்புவதால், அவை கைவேலைப்பாடுகள் மூலம் உருவாக்கப்படுகின்றன," என்றார்.
காரட் கணக்கீடு முறை இரு நாடுகளிலும் ஒன்றா?

பட மூலாதாரம், Getty Images
ஆபரணங்கள் தயாரிக்க இரு இடங்களிலும் 22 கேரட் (91.6% தங்கம்), 18 காரட் போன்ற அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன. காரட் ஒன்றாக இருந்தால் தூய்மையும் ஒன்றாகவே இருக்கும் என்று பொற்கொல்லர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாகச் சொல்வதென்றால், உலகில் எங்கு வாங்கினாலும் 22 காரட் தங்கத்தின் தூய்மை 91.6 சதவீதமாகவே இருக்கும் என்று சுனில் ஜெயின் உறுதிப்படுத்தினார்.
"தங்கத்தை ஆபரணமாக மாற்றும்போது அதன் தூய்மை 100 சதவீதம் இருக்காது. தங்கத்துடன் மற்ற உலோகங்களைக் கலந்தால்தான் ஆபரணங்களைத் தயாரிக்க முடியும். இவ்வாறு இதர உலோகங்கள் கலந்த தங்கத்தின் தூய்மை 91.6 சதவீதமாக இருக்கும். இதையே நாம் 22 காரட் தங்கம் அல்லது 916 தங்கம் என்கிறோம். இதில் மீதமுள்ள 8.4 சதவீதம் தாமிரம், துத்தநாகம், வெள்ளி போன்ற உலோகங்கள் கலந்திருக்கும். அதேபோல் 18 காரட் தங்கத்தின் (75% தூய்மை) தரமும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்," என்று அவர் விளக்கினார்.
எனவே, நீங்கள் துபையில் வாங்கினாலும் சரி, இந்தியாவில் வாங்கினாலும் சரி, தங்கத்தின் தரம் ஒன்றுதான்.
ஆனால், நகைகள் செய்யும்போது தங்கத்துடன் கலக்கப்படும் உலோகத்தைப் பொறுத்து நிறத்தில் சிறு மாற்றம் ஏற்படும் என்று பொற்கொல்லர்கள் கூறுகின்றனர்.
துபை தங்கம் அதிக மஞ்சள் நிறத்தில் தோன்றுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக துபையில் தங்க ஆபரணங்கள் தயாரிப்பில் துத்தநாகம் மற்றும் வெள்ளி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாகச் சுனில் ஜெயின் கூறினார்.
இது குறித்து 20 ஆண்டுகளாக பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட்டுள்ள ராவ்லா பிரம்மம் மற்றும் சீனிவாஸ் விளக்கினர்.
"தங்கத்தில் துத்தநாகம் அதிகமாகச் சேர்க்கப்படும்போது அது அதிக மஞ்சள் நிறத்தைக் கொடுக்கும். அதனால்தான் அது அவ்வளவு பளபளப்பாகத் தெரிகிறது."
இந்தியாவில் பெரும்பாலும் வெள்ளி மற்றும் தாமிரம் கலந்து ஆபரணங்கள் செய்யப்படுகின்றன. தங்கத்துடன் தாமிரம் சேரும்போது அது சற்றே சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். இவ்வாறு வெள்ளி மற்றும் தாமிரம் கலக்கும் அளவைப் பொறுத்து நிறம் மாறும். ஆனால், நிறம் மாறுவதாலேயே தங்கத்தின் தரம் மாறிவிடாது' என்று அவர்கள் விவரித்தனர்.
தங்கத்தின் தரத்தை நிர்ணயிப்பது யார்?

பட மூலாதாரம், BIS
முன்பு இந்தியாவில் தங்கத்தின் தரம் குறித்துச் சந்தேகங்கள் இருந்ததாக உள்ளூர் பொற்கொல்லர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தங்க நகைகளுக்கு 2021 ஜூன் 15 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. 2023 ஏப்ரல் முதல் நகைகளில் ஆறு இலக்க தனித்துவமான ஹால்மார்க் அடையாள எண்( HUID- Hallmark Unique Identification) இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. 'BIS CARE' செயலி மூலம் வாடிக்கையாளர்கள் இந்த எண்ணை உள்ளிட்டு நகையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஹால்மார்க் முறை கொண்டுவரப்பட்ட பிறகு, தங்கத்தின் தரம் குறித்த அனைவரது சந்தேகங்களும் நீங்கிவிட்டதாகக் கரீம்நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் கந்துகூரி நாகராஜு தெரிவித்தார்.
விலைமதிப்பு மிக்க உலோகத்தால் செய்யப்படும் ஒரு பொருளில், அந்த உலோகம் எத்தனை சதவீதம் உள்ளது என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக முத்திரை இடுவதே ஹால்மார்க்கிங் ஆகும். இது பல நாடுகளில் விலைமதிப்பு மிக்க உலோகப் பொருட்களின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
கலப்படம் செய்யப்படுவதைத் தடுப்பதும், உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதும் இதன் முதன்மை நோக்கங்களாகும்.
சென்னையிலுள்ள இந்தியத் தர நிர்ணய ஆணையம் (BIS) ஹால்மார்க் உரிமத்தை வழங்குகிறது.
இந்த உரிமம் பெற்ற நகைக்கடைக்காரர்கள் அனைவரும் ஹால்மார்க் முத்திரையைப் பயன்படுத்தலாம். ஹால்மார்க் இல்லாமல் எந்த நகையை விற்றாலும் அது குற்றமாகும்.
பிஐஎஸ் அங்கீகாரம் பெற்ற மதிப்பீடு மற்றும் முத்திரை மையங்களில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளைப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களின் தூய்மையை உறுதிப்படுத்த துபையில் 'பரீக்' என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
துபையில் தங்கத்தின் விலை குறைவா?

பட மூலாதாரம், Getty Images
விலையைப் பொறுத்தவரை இந்தியாவிற்கும் துபையிற்கும் வித்தியாசம் இருப்பதாக சுனில் ஜெயின் கூறினார். துபையில் சுங்க வரி இல்லாததால் விலை சற்றே குறைவாக இருக்கும்.
"துபையில் விலை குறைவாக இருந்தாலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இந்தியாவிற்குத் தங்கம் கொண்டு வந்தால் சுங்க வரி செலுத்த வேண்டும். அந்த வரியையும் சேர்த்துக் கணக்கிட்டால், துபை தங்கத்தின் விலை இந்திய விலைக்குச் சமமாகிவிடும். இதனால் விலையில் பெரிய வித்தியாசம் தெரியாது," என்பது சுனில் ஜெயினின் கருத்து.
வெளிநாடுகளில் ஆறு மாதங்களுக்குக் குறைவாகத் தங்கிவிட்டுத் திரும்புபவர்கள் தங்கம் கொண்டு வந்தால் 38.5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று ஹைதராபாத் சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'ஆறு மாதங்கள் முதல் ஒரு வருட காலத்திற்குள் அங்கிருந்து திரும்புபவர்கள் 13.75 சதவீதம் சுங்க வரி செலுத்த வேண்டும். ஆனால், சிலர் சுங்க வரியைத் தவிர்ப்பதற்காகச் சட்டவிரோத முறைகளில் தங்கம் கொண்டு வருகின்றனர்.
குறுகிய காலம் அங்கு தங்கிவிட்டு, கால் கிலோ முதல் ஒரு கிலோ வரை தங்கம் கொண்டு வருகின்றனர். அத்தகைய நேரங்களில் 38.5 சதவீதம் சுங்க வரி செலுத்தவில்லை என்றால் தங்கம் பறிமுதல் செய்யப்படும். ஒரு கிலோவிற்கும் மேல் தங்கம் கொண்டு வந்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்' என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












