விஜயை திடீரென 'தாக்கிய' அதிமுக – கூட்டணி விவகாரத்தில் விஜய் உணர்ந்தது என்ன?

விஜயை திடீரென 'தாக்கிய' அதிமுக – கூட்டணி விவகாரத்தில் விஜய் உணர்ந்தது என்ன?

பட மூலாதாரம், X/TVK

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதியாகிவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.கவையும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார். மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அ.தி.மு.கவும் பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று மாமல்லபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், வழக்கத்தைப் போல தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்தார்.

அதே நேரத்தில், அ.தி.மு.க. மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது, பலரது புருவங்களையும் உயர்த்தியது. இதையடுத்து, அ.தி.மு.கவும் பதிலடி கொடுக்கத் துவங்கியிருக்கிறது.

விஜய் பேசியது என்ன?

மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய், தனது பேச்சின் துவக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பா.ஜ.க. அழுத்தம் தருவதாக வெளிவரும் யூகங்கள் குறித்துப் பேசினார். இதற்கடுத்ததாக தி.மு.க. - அ.தி.மு.க. குறித்து பேச ஆரம்பித்தார்.

"தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பா.ஜ.கவுக்கு நேரடியாக 'சரண்டர்' ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் 'சரண்டர்' ஆகியிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி ஆகிய இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது" என்று குறிப்பிட்டார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் துவங்கிய பிறகு, தி.மு.கவை அரசியல் எதிரி என்றும் பா.ஜ.கவை கொள்கை எதிரி என்று குறிப்பிட்டாலும், தி.மு.கவையே தொடர்ந்து தனது முதன்மை எதிரியாக முன்வைத்துவந்தார்.

தேர்தல் களத்தில் தி.மு.கவுக்கும் த.வெ.கவுக்கும்தான் போட்டி என்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து பேசிவந்தார்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, சில தருணங்களில் தற்போதைய தலைமையை விமர்சித்தாலும் அக்கட்சியின் மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா குறித்து தொடர்ந்து நேர்மறையாகவே பேசிவந்தார் .

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், @EPSTamilNadu

விஜய் கருத்துக்கு இபிஎஸ் பதிலடி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது "சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்ட விஜய் தற்போதைய அ.தி.மு.க. தலைமை குறித்து விமர்சித்தார்.

"எம்.ஜி.ஆர்னா யாரு தெரியும்ல, அவர் மாஸ்னா என்னானு தெரியும்ல, அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். ஆனால், இப்போ அவர் ஆரம்பித்த அந்தக் கட்சியை கட்டிக் காப்பது யாரு? இன்று அந்தக் கட்சி எப்படியிருக்குது? அப்பாவித் தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாம வேதனையில் தவிக்கிறார்கள். 2026ல சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடனும்னு, எப்படிப்பட்ட ஆட்சி இங்க அமையனும்னு அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும். பொருந்தாத கூட்டணியாக பா.ஜ.க. கூட்டணி இருக்கிறது. தி.மு.க. அவர்களோடு மறைமுக உறவுவைத்துக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டார் விஜய்.

இந்தத் தருணத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

"யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் கட்சியைத் துவங்க முடியும். சிலர், அ.தி.மு.க. யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதுகூடத் தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால், உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?" என்றார்.

தவெக விஜய்

பட மூலாதாரம், X/ TVK

கரூர் சம்பவத்திற்குப் பின் மாறிய காட்சிகள்

கரூர் நெரிசல் சம்பவம் நடந்த தினத்தில், கரூருக்கு முன்பாக நாமக்கல்லில் விஜய் பேசும்போது மீண்டும் அ.தி.மு.கவை விமர்சித்தார்.

"மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மானு சொல்லிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துட்டு, பொருந்தாத கூட்டணிய அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணினு சொல்லிட்டு இருக்காங்களே அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம். நீட் ஒழிக்கப்பட்டதா? கல்வி நிதி வழங்கப்பட்டதா? ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என எம்.ஜி.ஆர். தொண்டர்கள் கேட்கிறார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. நேரடி உறவுக்காரர்கள். அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" என்றார்.

ஆனால், கரூர் சம்பவத்திற்குப் பிறகு காட்சிகள் மாறின. கரூர் சம்பவம் குறித்துப் பேட்டியளித்த எடப்பாடி கே. பழனிசாமி, கரூர் சம்பவத்திற்கு தி.மு.க. அரசைக் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சியின் கூட்டங்களுக்கு காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்குவதில்லை என்றார்.

இதற்குப் பிறகு நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க கொடியை சிலர் ஏந்தியபடி நின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'இதோ பாருங்கள்...கொடி பறக்கிறது...பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார்கள்" எனக் கூறினார்.

இதற்குப் பிறகு, அக்டோபர் 15ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் மரணத்தை முன்வைத்து விவாதம் நடந்த போது, "தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூரில் விஜய் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பதைக் காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்குத் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்." என்றார்.

X/ TVK

பட மூலாதாரம், X/ TVK

த.வெ.க.விற்கு அழைப்பு

இவையெல்லாம், அ.தி.மு.க கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கொண்டு வரும் முயற்சிகளாகவே பார்க்கப்பட்டன.

இதற்குப் பிறகு ஒரு கட்டத்தில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளிப்படையாகவே த.வெ.கவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 21ஆம் தேதி அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அ.தி.மு.கவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஆர்.பி. உதயகுமார் "உங்கள் வாக்கு பொன்னாக மாறட்டும். தி.மு.கவை வீழ்த்தும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகவும் தொண்டர்களின் விருப்பமாகவும் உள்ளது. தி.மு.க என்ற வலிமை வாய்ந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், அதை வீழ்த்துவதையே லட்சியமாகக் கொண்டு கட்சியைத் தொடங்கி உள்ள த.வெ.க தலைவர், இதுதொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

ஆனால், அ.தி.மு.க. மட்டும்தான் கூட்டணிக்காக வெளிப்படையாக அழைப்பு விடுத்துவந்ததே தவிர, விஜய் தரப்பிலிருந்து எந்த நேர்மறையான சலனமும் இல்லை.

தற்போதைய அ.தி.மு.கவைத் தவிர்த்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நேர்மறையாக முன்வைப்பதை தொடர்ந்து செய்தார் விஜய்.

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய், "அண்ணாவிடமிருந்தும் எம்.ஜி.ஆரிடமிருந்தும் தேர்தல் அணுகுமுறையை எடுத்துக்கொண்டோம். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. இவர்கள் இருவரையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களை எடுத்துக்கொள்ளக்கூடாது என யாரும் அழுதுக்கொண்டிருக்கக் கூடாது" என்றார்.

மேலும், "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சொன்னதை நானும் இப்போது சொல்கிறேன். தி.மு.க ஒரு தீயசக்தி" எனக் குறிப்பிட்டார்.

அதிமுகவின் கடும் விமர்சனம்

பட மூலாதாரம், X/ADMK

அதிமுகவின் கடும் விமர்சனம்

இந்த நிலையில்தான் தற்போது, மீண்டும் அ.தி.மு.க. எனக் குறிப்பிடாமல் அக்கட்சியை விமர்சித்திருக்கிறார் விஜய். விஜயின் இந்தப் பேச்சிற்கு அ.தி.மு.கவின் தலைமை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையென்றாலும் விஜயின் பேச்சை அக்கட்சியின் ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

விஜய்யை 'பனையூர் பண்ணையார்' என்று அழைத்து, "தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி" குற்றம்சாட்டியிருக்கிறது.

மேலும், "தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து, வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..? இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகிறீர்களா..? அண்ணா தி.மு.கவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்த ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறது அக்கட்சி.

மேலும், கரூர் சம்பவத்தை முன்வைத்தும் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தது ஐடி விங்.

"கருரில் 41 பேரின் மரணத்திற்கு நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல், என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களே, அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை! உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொல்லாமல், நேரில் வரவழைத்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் பண்ணையார்த்தனம்." என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

கரூர் கூட்ட நெரிசல், உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images

விமர்சிக்காமல் இருந்ததற்கான காரணம் என்ன?

விஜயின் இந்த விமர்சனம் குறித்து பிபிசியிடம் பேசிய அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செம்மலை, ''தமிழ்நாட்டில் எங்கள் இடத்தை விஜய் பிடிக்க விரும்பினால், அதில் அவர் நிச்சயம் தோற்றுவிடுவார்'' என்றார்.

இத்தனை நாட்கள் த.வெ.கவை விமர்சிக்காமல் இருந்ததற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டார்.

"அவர் எங்களைப் பற்றி இதுவரை விமர்சிக்கவில்லை என்பதால்தான் நாங்களும் விமர்சிப்பதை தவிர்த்தோம். தி.மு.கவை அகற்ற வேண்டுமென நினைக்கும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என எடப்பாடி கே. பழனிசாமி அழைப்பு விடுத்தார். அது ஒரு பொதுவான அழைப்பு. அரசியல் எதிரியாக தி.மு.கவைக் கருதும் த.வெ.கவுக்கும் இந்த அழைப்பு பொருந்தும்.

ஆனால், தங்களுக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்றுகூடத் தெரிந்துகொள்ளாமல் 'நாங்கள்தான் கூட்டணிக்கு தலைமை தாங்குவோம்' என்கிறார்கள். 'விஜய்தான் முதலமைச்சர் என்றும் அவருக்குக் கீழேதான் நாங்கள் கூட்டணி சேர வேண்டும்' என்றும் சொல்லிவருகிறார்கள். இதனால்தான் அவருடன் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.'' என்றார்

''எங்களைப் பார்த்து அவர் அடிமைக் கட்சி என்கிறார். ஊழல் கட்சி என்கிறார். கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் எதிர்க்கட்சி. நாங்கள் எந்த ஊழலைச் செய்தோம்? மேலும், எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்த நான்கரை ஆண்டு காலத்தில் செய்ததாக எந்த ஊழல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது? ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம் என்பவர்கள் செங்கோட்டையனையும் ஆதவ் அர்ஜுனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொல்கிறார்கள். அவர்களுடைய பின்னணி என்ன என்பதெல்லாம் பொது மக்கள் நன்றாக அறிவார்கள். விஜய் திரைத்துறையில் இருந்தவர். அவர் தன் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும். திரைத்துறையில் வாங்கிய சம்பளத்திற்கு சரியாக வருமான வரி செலுத்தியிருக்கிறாரா அவர்?" என்கிறார் செம்மலை.

கரூர் கூட்ட நெரிசல், உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணை

பட மூலாதாரம், TVK IT Wing Official/X

விஜய் நிலைப்பாடு என்ன?

ஆனால், அ.தி.மு.க. இந்த நிலைப்பாட்டை முன்பே மேற்கொண்டிருக்க வேண்டுமென்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.

"இப்போது அ.தி.மு.க. நடந்துகொள்வதெல்லாம் இதெல்லாம் சீச்சீ.. இந்த பழம் புளிக்கும் என்ற கதைதான். எப்படியாவது த.வெ.க. தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுமென அவர்கள் கருதினார்கள். ஆனால், விஜய்யைப் பொறுத்தவரை, அவர் அ.தி.மு.க. மிகப் பலவீனமாக இருப்பதாகவே கருதி, அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது வெளிப்படையாகவே அ.தி.மு.கவைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். அதனால், முந்தைய ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து மாறி தாக்கத் துவங்கியிருக்கிறது அ.தி.மு.க." என்கிறார் மணி.

ஆனால், கரூர் சம்பவம் நடந்த பிறகு த.வெ.கவுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நடந்துகொண்ட நிலையில், விஜய் அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகச் சொல்கிறார் அவர்.

"கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக சட்டமன்றத்தில் அதைப் பற்றி விவாதம் வந்தபோது, த.வெ.கவைப் பாதுகாப்பதைப் போல பேசினார்கள். அ.தி.மு.க. மட்டும் அப்படி செய்யாவிட்டால், த.வெ.க. மீதுதான் எல்லாத் தவறும் என்ற வகையில் சட்டமன்றத்தில் பதிவாகியிருக்கும். அதற்கு த.வெ.க. தரப்பிலிருந்து எவ்வித நன்றியும் தெரிவிக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க. அதனைப் பொறுத்துக் கொண்டது. காரணம், எப்படியாவது அக்கட்சி தங்கள் கூட்டணிக்கு வரும் என்று கருதியதுதான். ஆனால், அப்படி நடக்கவில்லை" என்கிறார் ஆர். மணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், விஜயின் விமர்சனமும் அ.தி.மு.கவின் பதிலடியும் ஒரே ஒரு முறை நிகழ்ந்திருப்பதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"விஜய் திடீரென அ.தி.மு.கவைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பதும் அ.தி.மு.க. அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றியிருப்பதும் ஆச்சயரியத்தையே அளிக்கிறது. இத்தனை நாட்களாக தி.மு.கதான் ஆளும் கட்சி என்பதால் அதனை மட்டும் விமர்சிக்கிறோம் எனக் கூறி வந்த த.வெ.க. இப்போது திடீரென அ.தி.மு.கவையும் அதே அளவுக்கு விமர்சிப்பதற்கான காரணம் புரியவில்லை. அதே போல, அ.தி.மு.கவின் ஐடி விங் இவ்வளவு துரிதமாக அதற்கு எதிர்வினை ஆற்றியிருப்பதும் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது. ஆகவே, விஜய் தொடர்ந்து பிரசாரத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அதனை வைத்துத்தான் அவரது இலக்கு புரியும். இப்போது ஒரே ஒரு தடவை அ.தி.மு.கவை விமர்சிப்பதைவைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது" என்கிறார் ப்ரியன்.

ஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை இதனை அப்படியே விடுவதாக இல்லை.

"சொகுசு கார் ஒன்றை வாங்கி, அதற்கு வரி கட்டுவது தொடர்பாக வழக்கைச் சந்தித்தவர் அவர். இப்படிப்பட்டவர், தான் ஆட்சிக்கு வந்தால் ஊழலே இருக்காது என்கிறார். மற்றவர்களைக் குறைசொல்லி மட்டுமே யாரும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.கதான். அதை யாரும் மாற்றிவிட முடியாது" என்கிறார் செம்மலை.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு