இந்திய மருத்துவமனைகளை நாடி வெளிநாட்டு நோயாளிகள் அதிகம் வருவது ஏன்?

ஜுவான் ஃபிரான்சிஸ்கோ பலாதினெஸ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது

பட மூலாதாரம், J PALADINES

படக்குறிப்பு, ஜுவான் ஃபிரான்சிஸ்கோ பலாதினெஸ் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது
    • எழுதியவர், ப்ரீத்தி குப்தா & பென் மோரிஸ்
    • பதவி, மும்பை

ஜுவான் ஃபிரான்சிஸ்கோ பலாதினெஸ் என்பவர் கண்களுக்கு எல்லாம் இரண்டு இரண்டாகத் தெரியத் தொடங்கியபோதே தனது உடலில் ஏதோ பிரச்னை எனப் புரிந்துகொண்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் தோன்றிய இரட்டைப் பார்வை உட்பட, மூளைக் கட்டியால் ஏற்பட்ட அறிகுறிகளை மருத்துவர்கள் அவரிடம் கூறினார்கள்.

சிலியின் சான்டியாகோவைச் சேர்ந்த 56 வயதான தொழிற்சாலை பொறியாளரான அவர், "இது என் வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணம். அதிர்ஷ்டவசமாக, எனக்குப் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்," என்கிறார்.

அவருடைய கட்டியின் அசாதாரண வடிவம் காரணமாக அதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவரிடம் கூறினார்கள். ஆனால், கதிர்வீச்சு சிகிச்சையின் முதல் கட்டம் முடிந்த பிறகு அவருக்கு இருந்த அறிகுறிகள் மறைந்துவிட்டன.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன்கள், மூளையில் இருந்த கட்டி வளரவில்லை என்பதைக் காட்டின. "எல்லாம் நன்றாக நடந்தது. நான் இதை முழுமையாக மறந்துவிட்டேன்," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும் 2019-இல் இரட்டை பார்வை மீண்டும் வந்தது. "அது என்னவென்று எனக்குத் தெரியும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு மாற்றாக வேறு சிகிச்சை வழிகளைத் தேடத் தொடங்கினேன்."

சமீபத்திய ஆண்டுகளில், ப்ரோட்டான் பீம் தெரபி எனப்படும் புதிய புற்றுநோய் சிகிச்சை, வீரியம் மிக்க கட்டிகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது கதிர்வீச்சு சிகிச்சையின் மற்றொரு வடிவம்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் ப்ரோட்டான் பீம் சிகிச்சை

இது உயர் ஆற்றல் x-கதிர்களுக்குப் பதிலாக, அணுக்களின் சிறிய உட்துகளான உயர் ஆற்றல் ப்ரோட்டான்களைப் பயன்படுத்துகிறது.

புற்றுநோய்க்குக் காரணமான கட்டிக்குச் செல்லும் வழியில் இருக்கும் உடலின் மற்ற பகுதிகளை ப்ரோட்டான் கற்றைகள் எளிதில் கடந்து செல்கின்றன. மேலும், அவை கட்டிகளை அடைந்தவுடன் அவற்றை அழிப்பதில் திறம்மிக்கவையாகவும் இருக்கின்றன.

கட்டிகள் மிகவும் துல்லியமாகக் குறிவைக்கப்படலாம். மூளை, கழுத்து மற்றும் முதுகெலும்பு உள்ளிட்ட உடலின் உணர்திறன் பகுதிகளுக்கு சிகிச்சையளிக்க ப்ரோட்டான் பீம் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

ப்ரோட்டான் பீம் சிகிச்சை மூலம் கட்டிகள் மிகவும் துல்லியமாகக் குறிவைக்கப்படலாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ரோட்டான் பீம் சிகிச்சை மூலம் கட்டிகள் மிகவும் துல்லியமாகக் குறிவைக்கப்படலாம்

சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, பலாதினெஸ் இதுதான் அவருக்கான சிகிச்சை என்று முடிவு செய்தார். ஆனால், ப்ரோட்டான் பீம் சிகிச்சை சிலியிலோ அல்லது அதன் அண்டை நாடுகளிலோ கிடைக்கவில்லை.

"இந்த ப்ரோட்டான் சிகிச்சையை வழங்கக்கூடிய பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவமனைகளைக் கண்டறிய நான் விரிவான ஆராய்ச்சி செய்தேன்," என்று அவர் விளக்குகிறார்.

அதில் பலவும் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன அல்லது அவருக்கு ஏற்றவையாக இல்லாமல் இருந்தன. தொடர்ச்சியான தேடலின் இறுதியில் அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையைக் கண்டுபிடித்தார்.

"மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவான விலையில், நவீன தொழில்நுட்பங்கள் இங்கே உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

நவம்பர் 2021-இல் அவருடைய பயணத்திற்கான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றையும் கண்டறிய மருத்துவமனை அவருக்கு உதவியது.

"இந்த காரணிகள் மனதளவில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நான் பயத்துடன் வீட்டிலிருந்து பல ஆயிரம் மைல்கள் தொலைவில் கலாசாரம் மற்றும் மொழி என முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய நாட்டில் இருந்தேன்," என்று பலாதினெஸ் கூறுகிறார்.

இந்தியாவைத் தேடி வரும் உலக நோயாளிகள்

மருத்துவ சிகிச்சைக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்களில் பலாதினெஸும் ஒருவர்.

2016 - 2019 காலகட்டத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்த வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 4,30,000 என்ற அளவிலிருந்து 7,00,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் துறை 2019-ஆம் ஆண்டளவில் 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது என மதிப்பிடப்பட்டது.

இந்தியாவிலுள்ள அதிக அளவிலான மருத்துவர்கள் அதன் ஒரு முக்கியமான சிறப்பு என்கிறார் தினேஷ் மாதவன்

பட மூலாதாரம், APOLLO HOSPITAL ENTERPRISES

படக்குறிப்பு, இந்தியாவிலுள்ள அதிக அளவிலான மருத்துவர்கள் அதன் ஒரு முக்கியமான சிறப்பு என்கிறார் தினேஷ் மாதவன்

ஆனால், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகளால் இந்தச் செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஸ்தம்பித்தன. சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் மருத்துவ காரணங்களுக்காக கிட்டத்தட்ட 183,000 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 2019-ஆம் ஆண்டை விட 73% குறைவு.

தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற மருத்துவ சுற்றுலாவிற்குப் பிரபலமான உலகின் பிற நாடுகளிலும் நிலைமை இதை ஒத்திருக்கிறது.

"தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளனர்," என சர்வதேச அப்பல்லோ மருத்துவமனை நிறுவனங்கள் குழுவின் புற்றுநோயியல் தலைவர் மருத்துவர் தினேஷ் மாதவன் விளக்குகிறார்.

மேலும் அவர், "அதி நவீன முறை மற்றும் வழக்கமான மருத்துவ முறையிலான சிகிச்சையுடன், எங்கள் விருந்தோம்பல் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றால் நாங்கள் தனித்துவமாக நிற்கிறோம்," என்கிறார்.

மேலும் இது புற்றுநோய் போன்ற மருத்துவ நிலைகளுக்கான சிகிச்சை மட்டுமல்ல. லிபோசக்ஷன் எனப்படும் உடல் கொழுப்பை அகற்றும் சிகிச்சை, முடியற்ற தலையில் முடி ஒட்டுதல் சிகிச்சை போன்றவற்றுக்காக இந்தியா வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

மும்பையில் உள்ள தோல் மருத்துவரும் தோல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சதீஷ் பாட்டியா, "நாங்கள் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா பகுதிகளில் இருந்து நோயாளிகளைப் பார்க்கிறோம். டெர்மல் ஃபில்லர்ஸ் அல்லது போடோக்ஸ் போன்ற விரைவான, தோல் பகுதிக்குள்ளே செல்ல வேண்டிய தேவையற்ற ஒப்பனை சிகிச்சைகளைத் தேடும் பல விமானப் பணிப்பெண்களைப் பார்க்கிறேன்," என்று கூறுகிறார்.

மருத்துவர் சதீஷ் பாட்டியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறார்

பட மூலாதாரம், S BHATIA

படக்குறிப்பு, மருத்துவர் சதீஷ் பாட்டியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் நோயாளிகளுக்குக் கூட சிகிச்சையளிக்கிறார்.

தொடர்ந்து வளரும் மருத்துவ சுற்றுலா வணிகம்

சராசரியாக, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள பெரும்பாலான ஒப்பனை சிகிச்சைகளின் விலை இந்தியாவில் செய்யப்படுவதை விட குறைந்தது 50% அதிகமாக இருப்பதாக மருத்துவர் பாட்டியா கூறுகிறார்.

பெரும்பாலான பயணங்களைப் போலவே, தொற்றுநோய் பேரிடரின் போது மருத்துவ சுற்றுலாவும் நிறுத்தப்பட்டது. ஆனால், வணிகம் மீண்டும் உயர்ந்து வருவதாகவும் அது தொடர்ந்து வளரும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இருப்பினும், வெளிநாட்டு நோயாளிகளின் அதிகரிப்பில் சில சிக்கல்களும் இருக்கின்றன.

"இந்தியா முழுவதும் புதிய அழகியல் மருத்துவமனைகள் காளான்களாக வளர்ந்து வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இது எளிதில் பணம் சம்பாதிக்க விரும்பும் தகுதியற்ற மற்றும் பயிற்சி பெறாத மருத்துவர்களையும் ஈர்க்கிறது," என்கிறார் மருத்துவர் பாட்டியா.

மருத்துவரின் நற்சான்றிதழ்கள் மற்றும் அனுபவத்தை ஆராய்ந்த பிறகு அவரை சந்தியுங்கள் என்று மருத்துவர் பாட்டியா அறிவுறுத்துகிறார்.

சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பிற்கும் போதுமான ஏற்பாடுகள் உள்ளனவா என்பதை நோயாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்கிறார் சென்னை அப்பல்லோ புற்றுநோய் மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் சங்கர் வங்கிபுரம்.

"இந்தியாவில் சிகிச்சைக்குப் பின், சில நேரங்களில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பிரச்னையைக் கண்டறியும் கருவிகள் இல்லாததால், நச்சுத்தன்மையைக் கண்காணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

சிகிச்சைகளுக்கான கட்டண நிர்ணயம் சீராக இல்லை

இதற்கிடையில், இந்தத் துறைக்கு கடுமையான கட்டுப்பாடு தேவை என்பதையும் அரசு ஒப்புக் கொள்கிறது.

"இந்திய மருத்துவ சுற்றுலா துறையை நிர்வகிக்க பயனுள்ள ஒழுங்குமுறைகள் இல்லாததால், இந்தத் துறை ஒழுங்கமைக்கப்படாமலும் கண்காணிப்புப் பற்றாக்குறையோடும் உள்ளது," என்று இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராகேஷ் குமார் வர்மா கூறுகிறார்.

மருத்துவர்கள் கல்லூரியில் பல ஆண்டுகள் பயிற்சி முடித்திருந்தாலும், வெளிநாட்டு நோயாளிகளுடன் மருத்துவர்களை இணைக்கும் ஏற்பாடுகளைக் கையாளும் இடைத்தரகர்களுக்கு இது பொருந்தாது என்கிறார்.

இடைத்தரகர்கள் அல்லது வசதிகளைச் செய்து கொடுப்பவர்கள், மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கான பயண முகவர்களாகக் கருதப்படலாம். "அவர்களுக்கு இந்தத் துறையில் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. ஆனால், அது சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை," என்கிறார் ராகேஷ் குமார் வர்மா.

மேலும், மருத்துவமனைகள் முழுவதும் விலை நிர்ணயம் சீராக இல்லை. இது சில முகவர்கள் நோயாளிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிப்பதை எளிதாக்குகிறார்கள்.

இந்தத் தொழில் உள்ள சிலர் இன்னும் அதிக மேற்பார்வைகளை வரவேற்பார்கள்.

உலக மக்கள் பலரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவைத் தேடி வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

"மருத்துவ மதிப்பு சுற்றுலாவில் தொழில்முறையைக் கொண்டுவர, மருத்துவமனைகள், வசதி செய்வோர், மற்றும் பிற ஆதரவு சேவைகளை வழங்குவோர் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்கிறார், மருத்துவ சுற்றுலா ஏஜென்சியான மெட்சர்ஜின் இயக்குநர் கரிமா மாகு.

மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, ஒரு தொடர்ச்சியான பிரச்னை என்னவெனில், நோயாளிகள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு, இந்தியாவிற்கு வந்தவுடன் மற்றொரு மலிவான மருத்துவமனைக்கு மாறிவிடுகிறார்கள். இது அவர்களின் நேரத்தை வளங்களையும் வீணாக்குகிறது.

சிகிச்சைகளுக்கான நிலையான கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதன் மூலமும் நோயாளிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு மருத்துவமனைக்கு வைப்புத் தொகையைக் கட்டுவதன் மூலமும் இதை எளிதில் தீர்க்க முடியும் என்று மாகு கூறுகிறார்.

சான்டியாகோவிற்குத் திரும்பினாலும், பலாதினெஸ் சிகிச்சையில் திருப்தி அடைந்தார். மேலும் சென்னையில் இருக்கும் அவருடைய மருத்துவராலும் அவர் கண்காணிக்கப்படுகிறார்.

"இப்போது நான் நன்றாக உள்ளேன். ஓரளவிற்கு நான் நன்றாக உணர்கிறேன்," என்கிறார் பலாதினெஸ்.

காணொளிக் குறிப்பு, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு இனி பொது நுழைவுத்தேர்வு - என்ன விளைவு?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: