யுக்ரேனில் வளர்ப்பு சிறுத்தைகளை பிரிந்து தாயகம் வர மறுக்கும் இந்திய மருத்துவர்

கிரிகுமார் பாட்டீல்

பட மூலாதாரம், Girikumar Patil

படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல்

ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை.

சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்ரேனை விட்டு வெளியேற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரமான செவெரோடொன்யட்ஸ்கில் அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.

இந்தப் போர் தொடங்கிய பிறகு கிரி, தனது செல்லப்பிராணிகளுக்கு உணவு வாங்குவதற்காக மட்டுமே தான் பதுங்கியிருக்கும் அடித்தளத்தை விட்டு வெளியே வருகிறார். இவரிடம் இருக்கும் ஆண் ஜாகுவாரின் வயது 20 மாதங்கள். பெண் சிறுத்தை ஒரு ஆறு மாத குட்டி. (ஜாகுவார், ஆண் சிறுத்தை மற்றும் ஒரு பெண் ஜாகுவார் இடையே உருவான ஒரு அரிய கலப்பினம் என்கிறார் கிரி. )

இதுவரை, செம்மறி ஆடு, வான்கோழி, கோழி இறைச்சிகளை மொத்தம் 23 கிலோ அளவில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து இருந்து இயல்பை விட நான்கு மடங்கு அதிக விலையில் வாங்கியதாக கூறுகிறார் கிரி.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

மேலும், "எனது செல்லப் பிராணிகள் என்னுடன்தான் அடித்தளத்தில் இரவுகளைக் கழிக்கின்றன. எங்களைச் சுற்றி நிறைய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனால் அவை பயந்து, குறைவாகவே சாப்பிடுகின்றன. இந்த நிலையில், என்னால் அவற்றை விட்டுவிட முடியாது," என்கிறார்.

'இது எனக்கு இரண்டாவது போர்'

"இது நான் காணும் இரண்டாவது போர். ஆனால் இதுகுறித்து மிகவும் அச்சமாகவுள்ளது," என்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் போர்நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் யுக்ரேன் படையினருடன் சண்டையிட்டு வரும் லுஹான்ஸ்கில், தான் முன்பு வசித்து வந்ததாக கூறுகிறார் கிரி. அந்த பகுதியில் நடந்த சண்டையின் போது, அவரது வீடும், அவர் நடத்திவந்த ஒரு இந்திய உணவகமும் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

யுக்ரேன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன்

அந்த தாக்குதலுக்குப் பிறகே, அங்கிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ஒரு புதிய இடத்துக்கு மாறினார். அங்கு மருத்துவராக தனது பணியை தொடங்கினார். இந்த புதிய செல்லப்பிராணிகளையும் வாங்கியுள்ளார்.

"இப்போது நான் ஒரு போர் மண்டலத்தில் சிக்கிக்கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நான் வீட்டுக்கு வர வேண்டும் என்று எனது பெற்றோர் தொடர்ந்து அழைத்து வருகின்றனர் ஆனால் என் செல்லப்பிராணிகளை விட்டுவிட்டு என்னால் வெளியேற முடியாது," என்கிறார் கிரி.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரி, சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் உயிரியல் பூங்காவில் இருந்து இந்த சிறுத்தை மற்றும் ஜாகுவாரை சுமார் 35,000 அமெரிக்க டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் 26 லட்சத்து 92 ஆயிரத்து 910 ரூபாய்க்கு) மதிப்பில் வாங்கியுள்ளார்.

இந்த விலங்குகளை வைத்திருக்க உரிமையாளருக்கு போதுமான இடம் இருந்ததால், அவற்றை தனிப்பட்ட முறையில் விற்க அந்த விலங்கியல் பூங்கா அனுமதித்ததாக கூறிய அவர், விலங்கியல் பூங்காவில் வழங்கப்பட்ட, விலங்குகளின் பிறப்புச் சான்றிதழ்களையும் காட்டினார்.

2007 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக யுக்ரேனுக்கு வந்த இவர், 2014 ஆம் ஆண்டு முதல், எலும்பியல் மருத்துவராக இருந்து வருகிறார், இப்போது செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அரசு மருத்துவமனையில் இவர் பணிபுரிகிறார். யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் இந்த மருத்துவமனை மூடப்பட்டது.

கிரிகுமார் பாட்டீல்

பட மூலாதாரம், Girikumar Patil

படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல்

செவரோடோனெட்ஸ்கில், ஆறு அறைகள் கொண்ட இரண்டு மாடிக்கட்டடத்தில் வசிக்கிறார் கிரி அதில் விலங்குகளுக்கான இடமும் உண்டு. இவரிடம் மூன்று நாய்களும் உள்ளன. தனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை தனது செல்லப்பிராணிகளுக்காகச் செலவிட்டதாகக் கூறிய அவர், தனது YouTube சேனல்கள் மூலம் இதற்காக கூடுதல் நிதி திரட்ட முயற்சிப்பதாகவும் கூறுகிறார்.

ஏன் இந்த ஆர்வம்?

"எனக்கு பிடித்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சிரஞ்சீவியை சிறுத்தைகள் உள்ள படத்தில் பார்த்ததில் இருந்து எனக்கு இதுபோன்ற செல்லப்பிராணிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது," என்கிறார்.

வங்கி மேலாளராக இருக்கும் தந்தை மற்றும் பள்ளி ஆசிரியராக இருக்கும் தாயின் மகனான கிரி, தான் எப்போதும் ஒரு "விலங்கு பிரியர்" என்றும், நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளை தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

கிரிகுமார் பாட்டீல்
படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல்

உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, தெலுங்கு சீரியல்களில் சிறிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் கிரி. யுக்ரேனில் உள்ள படங்கள் மற்றும் தொடர்களில் "வெளிநாட்டு" கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான எல்லை, இவரது யுக்ரேன் வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் அப்பகுதியில் ரஷ்யப் படைகள் இருப்பதால் அங்கு செல்வது கடினம் என்றும் கூறுகிறார்.

அத்துடன், "நான் இங்குள்ள ஒரே இந்தியன். இரவில் நான் தனியாகவே இருக்கிறேன். எனது பக்கத்து வீட்டுக்காரர்களில் பெரும்பாலோர் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும், நான் காத்திருக்கப் போகிறேன்," என்கிறார் கிரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: