அலெக்ஸாண்டர் லூகஷென்கோ: புதினின் நண்பர், 'ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி' - யார் இவர்?

லூகஷென்கோ

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலின்போது அடிக்கடி பேசப்படும் பெயர்களுள் ஒன்று அலெக்ஸாண்டர் லூகஷென்கோ. ரஷ்யாவின் நட்பு நாடுகளுள் ஒன்றான பெலாரூஸின் அதிபர் இவர்.

ரஷ்ய படைகள் தங்கள் மண்ணில் தங்கியிருக்க அனுமதி அளித்ததுடன், யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்து செல்வதற்கும் உதவியவர் என்று இவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கமான நட்பு கொண்டிருக்கும் லூகஷென்கோ, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகமாகச் சார்ந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகச் இந்தச் சார்புநிலை அதிகரித்திருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

யுக்ரேனில் ரஷ்யைப் படையெடுப்புக்குத் தூண்டுகோலாகவும், ஆதரவாகவும் லூகஷென்கோ இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் குற்றம்சாட்டுகிறார்.

2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், லூகஷென்கோவை ரஷ்ய அதிபர் புதின் ஆதரித்தார். லூகஷென்கோவுக்கு எதிராக பெருமளவு போராட்டங்கள் நடந்த போதிலும் அவர் பதவியில் இருந்து விலக மறுத்துவிட்டார்.

கடந்த ஜனவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கை பரவிய நிலையில், ரஷ்யாவுடன் இணைந்து கூட்டுப் போர்ப்பயிற்சியில் பெலாரூஸ் ஈடுபட்டது.

லூகஷென்கோ

பட மூலாதாரம், Getty Images

கிழக்கு யுக்ரேனில் உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு பெலாரூஸில் ரஷ்யப் படைகள் தங்கியிருக்கும் என்று அப்போது பெலாரூஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து பெலாரூஸ் மீதும் பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. இதில் பிரிட்டனும் அடங்கும். ரஷ்யப் படையெடுப்புக்கு தனது நாட்டு எல்லைக்குள் வசதி செய்து கொடுத்ததாக பெலாரூஸ் மீது பிரிட்டன் அரசு குற்றம்சாட்டுகிறது.

line

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

ரஷ்யாவை ஆதரிப்பதற்கான பொருளாதார விளைவுகளை பெலாரூஸ் அனுபவிக்கட்டும் என்று அந்த நாட்டின் மீதான தடைகள் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ட்ரூஸ் கூறியுள்ளார். ஏற்கெனவே தேர்தலில் லூகஷென்கோ முறைகேடாக வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்காகவும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காகவும் அந்த நாட்டைச் சேர்ந்த 100 பேர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் பெலாரூஸ் அதிபர் லூகஷென்கோ தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் பெலாரூஸ் பங்கெடுக்கும் திட்டம் ஏதுமில்லை என்று அறிவித்த லூகஷென்கோ, தங்களது மண்ணில் இருந்து யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளியான தகவல்களையும் மறுத்திருக்கிறார்.

லூகஷென்கோ

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவுடனும் யுக்ரேனுடனும் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பெலாரூஸ் சுமார் 93 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. வரலாற்றில் இது பெலோரஷ்யா என்றும் அறியப்படுகிறது. யுக்ரேனைப் போலவே 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் பெலாரூஸும் ஒன்றும். யுக்ரேனில் உள்ள செர்னோபிள் அணுஉலை விபத்தால் பெலாரூஸிலும் பாதிப்பு ஏற்பட்டது.

1994-ஆம் ஆண்டு பெலாரூஸ் நாட்டின் அதிபரான லூகஷென்கோ ஆறு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த நாடு அளித்திருக்கும் புள்ளி விவரங்களின்படி, 2015-ஆம் ஆண்டு தேர்தலில் 83.5 சதவிகித வாக்குகளையும், 2020-ஆம் ஆண்டு தேர்தலில் 80 சதவிகித வாக்குகளையும் அவர் பெற்றார்.

கொரோனா வைரஸ் காலத்தில் மருத்துவ வசதிகளைச் சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு லூகஷென்கோ அரசு மீது வைக்கப்பட்டது. கொரோனாவை ஒழிக்க வோட்கா குடிக்க வேண்டும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னாள் சோவியத் நாடுகளான யுக்ரேன், ஜார்ஜியா ஆகிவற்றில் புரட்சிகள் மூலம் நீண்ட கால ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டாலும், இன்னும் பதவியில் நீடித்திருக்கும் ஒரே ஆட்சியாளராக இருக்கிறார் லூகஷென்கோ.

காணொளிக் குறிப்பு, ரஷ்ய படையெடுப்பு குறித்து சீறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: