பழமொழி சொன்னதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிரபல துருக்கி பெண் பத்திரிகையாளர் செடெஃப் கபாஸ்

பட மூலாதாரம், AFP
நாட்டின் அதிபரை அவமதித்ததாகக் கூறி பிரபல பெண் பத்திரிகையாளர் செடெஃப் கபாஸ் என்பவரை சிறையில் அடைத்துள்ளது துருக்கி நாட்டு நீதிமன்றம்.
செடெஃப் கபாஸ் சனிக்கிழமை நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் கைது செய்யப்பட்டார். விசாரணை நடப்பதற்கு முன்பே அவர் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சியோடு தொடர்புடைய தொலைக்காட்சி ஒன்றில் நேரலையில் பேசும்போது அவர் கூறிய ஒரு பழமொழி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானை அவமதிப்பதாக அமைந்துள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார். அதிபரை அவமதிப்பதற்காக அந்தப் பழமொழியைத் தாம் கூறவில்லை என்கிறார் அவர்.
இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு முதல் 4 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அவருக்குக் கிடைக்கலாம்.
"முடிசூடிய தலை அறிவுள்ளதாக மாறிவிடுகிறது என்றொரு பழமொழி உள்ளது. இது உண்மையல்ல என்பதை நாம் பார்த்துவருகிறோம்," என்று டெலி1 சானலில் கூறிய செடெஃப் கபாஸ், "அரண்மனைக்குள் நுழைந்துவிடுவதால் மட்டுமே ஒரு மாடு மன்னனாகிவிடுவதில்லை. உண்மையில் அரண்மனைதான் அதனால் கொட்டடியாகிவிடும்," என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மேற்கோளை அவர் பிறகு டிவிட்டரிலும் பதிவிட்டார். இந்தக் கருத்தை பொறுப்பற்றது என்று விமர்சித்தார் அதிபர் எர்துவானின் முதன்மை செய்தித் தொடர்பாளர் ஃபாஹ்ரெட்டின் அல்துன்.
"பத்திரிகையாளர் என்று கூறப்படும் ஒருவர், வெறுப்பைப் பரப்புவதைத் தவிர வேறு இலக்கு ஏதுமில்லாத ஒரு தொலைக்காட்சியில் அதிபரை அப்பட்டமாக அவமதிக்கிறார்," என்று அவர் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்தார்.
அதிபரை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று செடெஃப் கபாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டெலி1 சானலின் ஆசிரியர் மெர்டான் யனார்டாக் இந்த கைது நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
"ஒரு பழமொழி சொன்னதற்காக, இரவு 2 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், சமுதாயம் ஆகியவற்றை அச்சுறுத்துவதற்கு செய்யப்படும் முயற்சி," என்று தெரிவித்துள்ளார் மெர்டான்.
11 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த எர்துவான், 2014ல் நாட்டின் முதல் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அதிபராக ஆனார். ஓர் அலங்காரப் பதவியாக இருக்கவேண்டியது இது.
விமர்சகர்களை வாயடைக்கச் செய்யும் அவரது நடவடிக்கைகள் வெளிநாடுகளில் இது தொடர்பான எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவித்துள்ளது. இந்த அணுகுமுறையால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான துருக்கியின் உறவில் ஓர் அசௌகரியம் தோன்றியுள்ளது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான துருக்கியின் முயற்சி தடைபட்டுள்ளது.
எர்துவான் அதிபரானதில் இருந்து அவரை அவமதித்ததாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிபரை அவமதித்ததாக 2020 அளவில், 31 ஆயிரம் வழக்கு விசாரணைகள் நடந்துகொண்டிருந்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது.
பிற செய்திகள்:
- இந்திய ஆட்சி பணி விதிகளை திருத்துவது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
- டோங்கா எரிமலைச் சாம்பல் பூமியைக் குளிர்விக்குமா? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
- உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் பதற்றம் நிலவுவது ஏன்? எளிய விளக்கம்
- மகாராஷ்டிராவில் தாக்கப்பட்ட கர்ப்பிணி காவலர் - என்ன நடந்தது?
- அயோத்தி அருகே 251 மீட்டர் ராமர் சிலை அமைக்க நிலங்களை பலவந்தமாக பறிப்பதாக விவசாயிகள் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












