வரலாற்றின் கருப்பு பக்கங்கள்: உகாண்டாவில் ஓர் அருங்காட்சியகம்

சுற்றுலா பயணிகளை கவர தனது நாட்டின் வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படும் சில தருணங்களை ஒரு போர் அருங்காட்சியகம் மூலம் காட்சிப்படுத்த உகாண்டா முடிவெடுத்துள்ளது.

இடி அமின் காலத்தில் நடந்தது என்ன? காட்சிப்படுத்த உகாண்டா திட்டம்

பட மூலாதாரம், HULTON ARCHIVE/GETTY IMAGES

உகாண்டாவின் முன்னாள் அதிபரான இடி அமினின் 8 ஆண்டு கொடுங்கோல் ஆட்சியிலும், எல்ஆர்ஏ எனப்படும் லார்ட்ஸ் தடுப்பு படையாலும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்த உள்ளனர்.

இது குறித்து உகாண்டா சுற்றுலா கழகத்தின் தலைமை அதிகாரியான ஸ்டீஃபன் அசிம்வீ பிபிசியிடம் தெரிவிக்கையில், ''கடந்த காலங்களில் நடந்த தவறுகளை நாங்கள் நேர் செய்ய விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

இன்னமும் கட்டி முடிக்கப்படாத உகாண்டா போர் அருங்காட்சியகம் காலனித்துவ மற்றும் காலனித்துவத்துக்கு முந்தைய காலங்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் முனைப்பில் உள்ளது.

''இது போன்ற முயற்சிகளால் வரலாறு செழுமைப்படும்; சிவப்பு ஒயின் போல, காலம் செல்லச் செல்லப் பழைய நினைவுகளின் பெருமையும் சிறப்பாக அமையும்'' என்று அசிம்வீ மேலும் தெரிவித்தார்.

''இடி அமினின் ஆட்சிக்காலத்தில் ஒரு சிறுவனாக இருந்த நான், ராணுவத்தின் அடக்குமுறையால் பல நண்பர்கள் மற்றும் மாணவர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் பெற்றோரை இழந்ததை கண்டு வருந்தியுள்ளேன்,'' என்று குறிப்பிட்டார்.

''ஆனால், வரலாறு கூறும் விஷயங்களில் இருந்து ஒருவர் தப்பிக்க முடியாது. இவை தவிர்க்க முடியாத உண்மைகள்'' என்று அவர் மேலும் கூறினார்.

Idi Amin Uganda

பட மூலாதாரம், BETTMANN/GETTY IMAGES

ஒவ்வொரு இடத்திற்கும், நாட்டிற்கும் வருங்கால சமூகத்துக்கு எடுத்துக்கூறும் விதமாக தனித்துவமான கலாச்சார மதிப்புண்டு என்று அசிம்வீ கூறினார்.

''உகாண்டாவில் மலைவாழ் கொரில்லாக்கள் என வனவிலங்குகள் குறித்து பல வியத்தகு அம்சங்கள் இருந்தாலும், நாட்டின் பழைய காலத்தை மற்றும் நினைவுகளை வெளிக்கொணர்வது இந்த அருங்காட்சியகத்தின் நோக்கம்'' என்று அவர் தெரிவித்தார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை காட்சிப்படுத்துவதன் நோக்கம், உகாண்டாவுக்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளை கவர்வதும், சுற்றுலாத்துறைக்கு ஏற்ற இடமாக நாட்டை மாற்றுவதும்தான் என் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: