‘துணை வட்டாட்சியருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை’: சமூக ஊடகத்தில் பரவும் மனு

துணை வட்டாட்சியருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்ற பொருளில், சமூக ஊடகங்களில் வைரலாக ஒரு பதிவு பரவி வருகிறது. அந்த பதிவுகளுடன் ஒரு மனுவும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

'வட்டாட்சியருக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை': ஃபேஸ்புக்கில் பரவும் மனு - உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு அது.

மனு விவரிப்பது என்ன?

ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வரும் கோபால் என்பவர் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, அதாவது மே 22, 2018 அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் பணியில் இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் கோபால் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் மே 30 அன்று செய்திகள் வந்துள்ளன.

'வட்டாட்சியருக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் சம்பந்தம் இல்லை': ஃபேஸ்புக்கில் பரவும் மனு - உண்மை என்ன?

பட மூலாதாரம், facebook

"அவ்வாறாக எந்த புகாரும் நான் (கோபால்) அளிக்கவில்லை. அந்த பகுதியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், நான் முன்னர் பணிபுரிந்த திருசெந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பதவியை குறிப்பிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்ததன் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது, அதனால் தானும் தன் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்" என்று விவரிக்கிறது அந்த மனு.

இந்த மனுவை அளித்தது தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் து. செந்தூர் ராஜன்.

இந்த மனுதான் தூத்துக்குடி துணை வட்டாசியர் துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்ற பொருளில் பரவி வருகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்கு தொடர்பில்லை

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய து. செந்தூர் ராஜன், "தூத்துக்குடி நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும் இந்த மனுவுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் , "ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் கோபால் பணியில் இருந்த இடத்தில் எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை. அவர் காவல் துறையிடமும் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால், அவர் புகார் அளித்ததாக செய்தி பரவி வருகிறது. காவல் துறை வேண்டுமென்றே புகார் பதிவு செய்து, மக்களை கைது செய்து அதற்கு கோபாலை காரணமாக்கிவிடக் கூடாது என்பதை தெளிவாக்கத்தான் இந்த மனுவை அளித்தோம். மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து தெளிவாக விளக்கி இருக்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: