டிரம்ப்பின் இந்தக் கொள்கை அமெரிக்காவை பாதிக்கும் - எச்சரிக்கும் சர்வதேச நிதியம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய எஃகு சுங்க வரிக் கொள்கை அமெரிக்காவை பாதிக்கும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்க, 'நாங்கள் நியாயமாக நடத்தப்படவில்லை' என்று கூறி உள்ளார் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்

'நாங்கள் நியாயமாக நடத்தப்படவில்லை'

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சுங்கம் தொடர்பான புதிய கொள்கையில் எஃகு இறக்குமதிக்கு 25% மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு 10% சுங்க வரி என்று குறிப்பிட்டிருப்பது பரவலான விமர்சனங்களை சந்திக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியமும் (IMF), டிரம்பின் புதிய திட்டத்தை விமர்சித்திருக்கிறது.

இது பிற நாடுகளை மட்டுமல்ல, அமெரிக்காவையும் பாதிக்கும் என்று ஐ.எம்.எஃப் எச்சரிக்கை விடுவித்துள்ளது.

தேசிய நலனை பாதுகாக்க கடுமையான வர்த்தக கட்டுப்பாடுகள் தேவை என்று கூறும் அமெரிக்க அதிபரின் செயலை பிற நாடுகளும் முன்மாதிரியாக பின்பற்றக்கூடும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கூறுகிறது.

டிரம்பின் இந்த சுங்கத்தீர்வை நடவடிக்கை, இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்கிறது அமெரிக்காவிற்கு அதிக அளவில் எஃகு ஏற்றுமதி செய்யும் கனடா.

அறிவித்த திட்டத்தை டிரம்ப் அடுத்த வாரத்தில் முன்னெடுத்துச் சென்றால், அதற்கு தக்க பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கும் பல நாடுகளில் கனடாவும் ஒன்று.

அமெரிக்கா 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து எஃகு இறக்குமதி செய்கிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து எஃகு இறக்குமதி செய்கிறது

பிரிட்டனில் இருந்து 15% எஃகை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது

"யாருக்கும் நன்மையளிக்காத வர்த்தகப் போர்" என்று உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ராபர்டோ ஆஜீவெடோ கூறியுள்ளார்.

ஆனால், "வர்த்தக போர்கள் நல்லது" என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் செய்தி சொற்போர்களை முடுக்கிவிட்டது.

டிரம்ப் நிர்வாகத்தின் பதில் என்ன?

வெள்ளிக்கிழமை காலை டிவிட்டரில் செய்தி வெளியிட்ட டிரம்ப், "அமெரிக்காவின் வெற்றிக்கு வர்த்தகப் போர்கள் உறுதுணையாக இருக்கும், தற்போது பிற நாடுகளுடன் செய்யும் வர்த்தகத்தால் பில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா இழக்கிறது" என்று கூறினார்.

இறக்குமதிக்கான சுங்கத்தீர்வைகளை உயர்த்துவது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்காது; இதன் இறுதி சுமையை சுமக்க வேண்டியிருப்பது நுகர்வோரே என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், புதிய வரிக்கொள்கையை ஒப்பிட 'காம்ப்பெல்லின் ஒரு பாட்டில் சூப்பை' (a can of Campbell's Soup) பயன்படுத்திய அமெரிக்க வர்த்தகச் செயலர் வில்பர் ரோஸ், "இது ஒரு பெரிய விடயமில்லை" என்று கூறினார்.

அட்டவணை

சி.என்.பி.சி செய்தி நிறுவனத்துடன் பேசிய அவர், ஒரு செண்ட் பணத்தைவிட குறைவான விலை கொண்ட ஒரு பாட்டில் சூப்பின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தையே புதிய வரிகள் ஏற்படுத்தும் என்று கூறினார்.

"உலகில் யார் இதைப் பற்றி அதிக கவலைப்படப் போகிறார்கள்?" என்று அவர் கேட்டார்.

வேறு யாருக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தும்?

அமெரிக்காவின் முடிவுக்கு பதிலடி கொடுக்கப் போவதாக கனடா, மெக்ஸிகோ, சீனா, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகள் கூறுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒரு "உறுதியான" பதில் தேவை என்று கோரிக்கை விடுத்துள்ள ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியல், சர்வதேச வர்த்தக யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவிற்கு எஃகு ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருக்கும் கனடா, இந்த அதிகப்படியான கட்டணம் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனக் குறைகூறியது.

ஒன்டாரியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா தொழில்துறையை தொடர்ந்து பாதுகாக்கமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

"பிற நாடுகள் சீனாவை முன்னுதாரணமாக எடுத்து செயல்பட்டால், அது சர்வதேச வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை" என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வரி அதிகரிப்பு முட்டாள்தனமானது என்று சீனாவின் எஃகு தொழிலை சார்ந்தவர்கள் கண்டனம் செய்துள்ளனர்.

ஜப்பான் நாட்டு இரும்பு எஃகுத் துறை அமைப்பின் தலைவர் கொசெய் ஷிண்டோவின் கருத்துப்படி, "இது ஒரு தவறான சுழற்சி வளையத்தை ஏற்படுத்தும். அது எஃகு தொழிலை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்புக்கு பயன்படும் அனைத்து பொருட்களையும் பாதிக்கும்".

குடிபானங்களை அடைக்க பயன்படும் அலுமினிய டின்களை தயாரிக்கும் பீர் ப்ரிவரிஸ் உட்பட பல அமெரிக்க நிறுவனங்களும் டிரம்பின் புதிய கொள்கை அபாயம் ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பீர் தயாரிப்பாளரான Anheuser-Busch InBev NV என்ற நிறுவனம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் திட்டம் "வேலைவாய்ப்புகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அமெரிக்க நுகர்வோர் நலனுக்கு எதிராக இருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

எஃகு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் பங்கு என்ன?

அமெரிக்க எஃகு தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த டிரம்ப், 2000ஆம் ஆண்டில் 112 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்த நாட்டின் எஃகு உற்பத்தி, 2016 ஆம் ஆண்டில் 86.5 மில்லியன் டன்களாக குறைந்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.

இந்தத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 1,35,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 83,600 ஆக குறைந்துவிட்டது.

ஆனால், எஃகு ஆலைகளைவிட, எஃகு உற்பத்தித் தொழில் சார்ந்த தொழில்களில் அமெரிக்கர்கள் அதிக அளவில் வேலை செய்கிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் எஃகு ஆலைகளில் பணிபுரிந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 140,000 என்று கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், எஃகு பயன்படுத்தி பொருட்களை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்களில் 6.5 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை செய்கிறார்கள்.

வர்த்தகப் போர்கள் நல்லதா?: தியோ லெகெட், வணிகச் செய்தியாளர்

வர்த்தகப் போர்கள் உண்மையிலுமே நன்மை தருவதாக இருந்தாலும், சுலபானதாக இருந்தாலும் உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு அமைப்புக்கே அவசியம் இல்லை.

சிறப்பான பேச்சுவார்த்தைகள் நன்மை தரும் என்றும், விதிகள் அடிப்படையிலான முறைமையினால் தகராறுகளுக்கு தீர்வு காணப்படுவதாகவும் பெரும்பாலான நாடுகள் கருதுகின்றன. பழிக்கு பழி, பதிலுக்கு பதில் என்று வர்த்தகத் தடைகளை விதிக்கத் தொடங்கினால், இரு தரப்பினரின் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்ப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன.

ஆனால் டிரம்ப் இதுபற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. வெளிநாட்டு தொழிற்துறைகளால் நியாயமற்ற முறையில் பாரம்பரிய அமெரிக்க தொழில்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த டிரம்பின் அதிபர் தேர்தல் பிரச்சார பரப்புரை அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தது. அவர் தனது அந்தத் தொனியையே தற்போதும் வெறுமெனே தொடர்கிறார்.

காணொளிக் குறிப்பு, எஃகு தேவையை பூர்த்தி செய்யும் போர் ஆயுத எச்சங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :