க்ரிப்டோ கரன்சி வாங்க அணு ஆயுத மைய சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தியது யார்?
அதி ரகசியமான ரஷ்ய அணு ஆயுத ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள், அந்த மையத்தின் சூப்பர் கணினியைப் பயன்படுத்தி, ‘க்ரிப்டோ கரன்சி‘ எனப்படும் மின்னணுப் பணத்தை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்ய உளவு அமைப்பினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கணினிகள் அனுமதியற்ற முறையில் பயன்படுதப்பட்டதை இன்டர் ஃபேக்ஸ்செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய சரோவ் அணு ஆயுத ஆராய்ச்சி நிலைய செய்தித் தொடர்பாளர், அது சரியான சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
எத்தனை பேர் இந்த செயலில் ஈடுபட்டனர் என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
சரோவ் என்ற இடத்தில் ஸ்டாலின் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அணு ஆயுத மையம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்து வரைபடங்களில் கூட சரோவ் இடம்பெறாத அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மின்னணு பணம் என்றால் என்ன?
நமது ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை போன்று மின்னணு பணம் எனப்படும் கிரிப்டோகரன்சி உலகளாவிய பண செலுத்துகை முறையாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம்.
மின்னணு பணத்தை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு பணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், சமீபத்திய மாதங்களாக உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகள் மின்னணு பணம் மீது பல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












