ஜெர்மனி: நிலையான அரசை அமைக்க மீண்டும் முக்கிய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images
ஜெர்மனியில் நிலவி வரும் அரசியல் சிக்கலை முடிவுக்கு கொண்டுவர, புதிய கூட்டணி பேச்சுவார்த்தைகளை அந்நாட்டு சான்சிலர் ஏங்கலா மெர்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்குகிறார்.
தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பிறகும், ஜெர்மனியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படவில்லை.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையில் மெர்கலின் கிறித்துவ ஜனநாயகக் கட்சி, கிறித்துவ சமூக யூனியன் மற்றும் சமூக ஜனநாயக கட்சி ஆகியவை பங்குபெற உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
நிலையான கூட்டணியை உருவாக்க இதுவே அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் இடது மையவாத சமூக ஜனநாயக கட்சி, மெர்கலின் ஜெர்மன் கிறித்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் இணைந்தே ஆட்சி நடைபெற்று வந்தது.
ஆனால் கடந்த செம்பட்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மோசமான முடிவுகள் வெளியானதையடுத்து தொடர்ந்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.
மெர்கலின் கட்சி தொடர்ந்து நான்காவது முறையாக அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், முதல் மூன்று முறைகளைப் போல் அல்லாமல் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முறையான கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க போதுமான பொது இலக்குகள் உள்ளதாக சமூக ஜனநாயக கட்சியினரை அதிபர் மெர்கல் தற்போது சமாதானப்படுத்த வேண்டும்.
ஜெர்மனியை ஒரு தூணாக கருதும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளி நாடுகள் மெர்கல் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் உள்ளன.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












