தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி போராடிய செளதி இளவரசர்கள் கைது

செளதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எண்ணெய் வருவாயை நிலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக செளதி அரசு தற்போது பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றை அரசு செலுத்தி வந்த நிலையில், அதனை நிறுத்த வேண்டும் என்ற அரசின் முடிவால் இளவரசர்கள் கோபமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

எண்ணெய் வருவாயை சார்ந்துள்ள நிலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக செளதி அரசு தற்போது பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

சில அரசாங்க மானியங்களை நீக்குவது உள்ளிட்ட பொதுச் செலவுகளை செளதி அரசு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

செளதி

பட மூலாதாரம், AFP

உள்ளூர் பெட்ரோல் விலையை செளதி அரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்தது. அத்துடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இளவரசர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட செய்தி செளதி வலைத்தளமான சாட்க்-கில் முதன்முதலாக வெளிவந்தது.

குறிப்பிடப்படாத குற்றத்திற்காக உறவினர் ஒருவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் இளவரசர்கள் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது சாட்க்.

செளதியின் அரசு வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையை பார்வையிட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இளவரசர்கள் கைதை உறுதிப்படுத்தியுள்ளது.

பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் பெயரில், இளவரசர்கள் சிறையில் வைப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

செளதியில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில், டஜன் கணக்கான இளவரசர்களும், அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் கைது செய்யப்பட்டனர்.

செளதி அரச குடும்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என கருதப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு இடையே உள்ள செல்வமும், அந்தஸ்தும் பெருமளவில் வேறுபடுகின்றன

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :