எண்ணெய் விலை வீழ்ச்சி: சுற்றுலாவை மேம்படுத்த செளதி அரேபியா முயற்சி

பட மூலாதாரம், KINGDOM OF SAUDI ARABIA
ஐம்பது தீவுகள் மற்றும் செங்கடலில் உள்ள பிற பகுதிகளை ஆடம்பர விடுதிகளாக மாற்றும் மாபெரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தினை செளதி அரேபியா தொடங்கியுள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் நாட்டின் பொருளாதாரத்தை பரவலாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தின் முலம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளையும் உள்நாட்டுப் பார்வையாளர்களையும் ஈர்க்க முடியும் என செளதி நம்புகிறது.
சுற்றுலா மண்டலங்களில் வெளிநாட்டினர் மீதான விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்.
எனினும், பழமைவாத முடியரசு நாடான இங்கு நடைமுறையில் உள்ள ஆடை மற்றும் பிற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
மது, திரைப்படம் மற்றும் திரையரங்குகள் ஆகியவை செளதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் "அபயாஸ்" என்று அழைக்கப்படும் தளர்வான, முழு நீளமான ஆடைகளை மட்டுமே பொதுவெளியில் அணிய வேண்டும்.
முஸ்லிம் பெண்களாக இருந்தால், முக்காடு போட்டிருக்க வேண்டும். பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
மேலும், அவர்கள் வெளிநாட்டில் படிக்கவேண்டும் என்றாலும், பயணிக்க வேண்டும் என்றாலும் ஒரு ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவை.
புதிய ஆடம்ப விடுதிக்கான கட்டுமான பணிகள் 2019-ல் தொடங்கப்பட உள்ளது. ஒரு புதிய விமான நிலையம், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் ஆகியவை முதல் கட்ட பணிகளில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டம் 2022-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
புதிய சந்தைகளை எதிர்பார்க்கும் செளதி
முஸ்லீம்களின் புனித் தலமான மெக்காவிற்கும், தங்களது வேலைக்காகவும் ஏற்கனவே மில்லியன் கணக்கான வெளிநாட்டினர் செளதி அரேபியாவிற்கு வருகின்றனர்.
ஆனால் சமீப காலம் வரை, செளதியின் கடுமையான மத மற்றும் சமுக கோட்பாடுகள், அந்நாட்டின் கரடுமுரடான நிலப்பரப்பை பிரதிபலித்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகளை கவர்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
தற்போது எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், வருவாயைப் பெருக்கும் புதிய வழிகளை உருவாக்குவது மற்றும் செளதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது ஆகியவை உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
புதிய பொருளாதார மற்றும் சமூக திட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகச் சுற்றுலாத்துறை உள்ளது.
கடந்த ஜூன் மாதம், செளதி அரேபியாவின் அடுத்த ஆட்சியாளராக வரும் வரிசையில் முதலாம் இடத்திற்கு உயர்ந்த இளவரசர் இளவரசர் மொஹமத் பின் சல்மான் மேற்பார்வையில் தொலைநோக்கு திட்டம் (விஷன்) 2030 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாத் துறையும் இந்த 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பட மூலாதாரம், Marjory Woodfield
செளதி மேற்கு கடற்கரையில் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு, செங்கடல் வளர்ச்சி திட்டம் கட்டமைக்கப்பட உள்ளது என தொலைநோக்கு திட்டம் 2030 கூறுகிறது.
பவளப் பாறைகள், செயலற்ற எரிமலைகள், அரேபிய சிறுத்தைப்புலிகள் போன்ற அரிய வனவிலங்குகள் போன்றவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன.
உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் வகைப்படுத்தப்பட்டுள்ள மதெய்ன் சாலே பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்ளலாம். பாராசூட், மலையேற்றம் போன்றவற்றையும் அனுபவிக்கலாம்.
பிபிசியின் பிற செய்திகள்:
- வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வலியுறுத்தும் சீனா
- 'ராயல் இண்டியன்' விமானப்படை மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதா?
- 'இந்தியா-சீனா' அமைதிக்காக தனது பட்டத்தை திருப்பியளிக்க விஜேந்தர் சிங் முடிவு
- ஈவ்டீஸிங் செய்த பாஜக தலைவரின் மகன் மீது நடவடிக்கை: ஹரியாணா முதல்வர் உறுதி
- பார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா? ஓ.பி.எஸ் தொண்டருக்கு அடி-உதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












