ஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு: டெல்லி போலீஸ்

ஆதார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அரவிந்த் சப்ரா
    • பதவி, பிபிசி

500 ரூபாய் அளித்தால் ஒருவரின் ஆதார் விவரங்கள் அனைத்தும் "தரகர்" மூலம் வெறும் 10 நிமிடங்களில் பெற்று விடலாம் என்று செய்தி வெளியிட்ட The Tribune பத்திரிகையின் செய்தியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் குற்றவியல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக" பெயர் குறிப்பிட விரும்பாத டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய சம்பந்தப்பட்ட செய்தியாளர் ரச்னா கைரா, "செய்திகளை பார்த்துதான் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதை தெரிந்துக் கொண்டோம். அது குறித்த முழு விவரங்கள் தெரிந்த பின்புதான் எதுவும் கூற முடியும்" என்றார்.

ஆதார்

குற்றஞ்சாட்டப்பட்ட ரச்னா மீது இந்திய குற்றவியல் சட்டப்படி, 419 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 420(ஏமாற்றுதல்), 468(மோசடி) மற்றும் 471 (பொய்யான ஆவணங்கள் பயன்படுத்தியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆதார் நிறுவன அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்திக்காக ரச்னா தொடர்பு கொண்ட சிலர் மீதும் வழக்கு செய்யப்பட்டுள்ளது.

Paytm மூலம் 500 ரூபாய் செலுத்தினால், ஒருவரின் ஆதார் விவரங்களை பெறமுடியும் என ஜனவரி 4ஆம் தேதி The Tribune செய்தித்தாள் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்காக வாட்சப்பில் ஒரு குழு இயங்குவதாகவும், பணம் கொடுத்தால் குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி, அஞ்சல் குறியீடு, புகைப்படம், தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆதார்

பட மூலாதாரம், Getty Images

வெளியான இந்த செய்தியை மறுத்த ஆதார் நிறுவனம், ஆதார் தரவுகள் அவ்வாறு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் மக்களின் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாகவே உள்ளது எனவும் தெரிவித்தது.

உச்சநீதிமன்ற வழக்கு

ஆதார் திட்டம் மற்றும் இதற்காக சேகரிக்கப்படும் தனி நபரின் கண் கருவிழி, கைரேகை போன்ற விவரங்கள் வெளியே கசிய வாய்ப்புள்ளதால் அது தனி நபர் அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளது என்று தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் பலவற்றில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் விளக்கம்

ஊடகங்களை குறிவைப்பது போன்ற தவறான பிம்பம் ஆதார் நிறுவனம் மீது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது முற்றிலும் தவறானது என்றும் அந்நிறுவனத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை தாங்கள் மதிப்பதாக கூறி உள்ள ஆதார் நிறுவனம், "தவறாக செய்தி வெளியிட்டது போன்ற சம்பவம் நிகழும்போது, வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். குற்றச்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது நியாயமான விசாரணைக்கு பின்புதான் தெரிய வரும்" என்று ஆதார் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட எவராக இருந்தாலும், அது செய்தியாளராக இருந்தாலும், அவர்கள் மீது புகார் அளிக்க வேண்டியது தங்கள் கடமை என்றும் அச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

"இதற்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை. வழக்கின் முடிவில்தான் யார் குற்றவாளிகள் என்று தெரியவரும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் விவரங்கள் எதுவும் வெளியே கசியவில்லை என்றும், பணம் கொடுத்தால் தரவுகளை பெற முடியும் என்று வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் ஆதார் நிறுவனம் கூறியுள்ளது.

போலீஸ் விளக்கம்

ஆதார் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது.

ஜனவரி 5 ஆம் தேதி, ஆதார் நிறுவனம் Tribune நாளிதழ் செய்தியாளர் மீது புகார் கொடுத்தது. இந்த புகாரை பதிவு செய்த போலீஸ், அதை முதல் தகவல் அறிக்கையாக மாற்றியது.

ஆதார் பாஸ்வார்டை பகிர்ந்தது யார் என்பதில் கவனம் செலுத்தி இந்த வழக்கை விசாரித்து வருவதாக போலீஸ் கூறுகிறது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :