ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
நாடு திரும்பினார் ஹரிரி

பட மூலாதாரம், Reuters
இரண்டு வாரங்களுக்கு முன்பு செளதி அரேபியாவில் தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தபிறகு முதல்முறையாக லெபனான் பிரதமர் சாத் ஹரிரி மீண்டும் பெய்ரூட் வந்துள்ளார்.
ஹரிரி விமானத்தில் இருந்து இறங்கியவுடன் அவரை பாதுகாப்புபடை உறுப்பினர்கள் வரவேற்பதை பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
ரியாத் வருகையின்போது தனது பதவிவிலகல் முடிவை அறிவித்ததன்மூலம் ஒரு அரசியல் நெருக்கடியை ஹரிரி ஏற்படுத்தினார்
இரானுடனான ஒரு பிராந்திய அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செளதி அரேபியா அவரை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிடுவதாக வெளியான யூகத்தை அவர் மறுத்தார்.

தப்பித்த வட கோரிய வீரருக்கு நினைவு திரும்பியது

பட மூலாதாரம், EPA
வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்ப முயன்றபோது குறைந்தபட்சம் ஐந்து முறை சுடப்பட்ட வட கொரிய ராணுவ வீரருக்கு நினைவு திரும்பியுள்ளது.
இரு நாட்டு எல்லையிலும் ராணுவக் கண்காணிப்பு இல்லாத ஒரு பகுதியில் அவர் எல்லையைக் கடந்து, நவம்பர் 13 அன்று, தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றபோது அவரை நோக்கி வட கொரிய ராணுவம் நாற்பதுக்கும் மேற்பட்ட முறை சுட்டது.

அமெரிக்காவில் திருடப்பட்டது ஜெர்மனியில் கிடைத்தது

பட மூலாதாரம், EPA
கடந்த 2006-ஆம் ஆண்டு நியூயார்க்கில் திருடப்பட்ட, பீட்டில்ஸ் இசைக்குழுவின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் லென்னானின் உடைமைகளை மீட்டுள்ளதாக ஜெர்மன் காவல் துறை கூறியுள்ளது.
இந்த திருட்டு தொடர்பாக 58 வயதாகும் நபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பொருட்கள் பெர்லின் காவல் தலைமையகத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா நீர்மூழ்கி கப்பல்

பட மூலாதாரம், AFP
காணாமல் போன அர்ஜென்டினா கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஆக்சிஜன் இருப்பு குறித்து கவலையுற்று இருப்பதாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த புதனன்று அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமல் போன அந்த நீர்மூழ்கி கப்பலில் நான்கு பேர் இருந்தனர். அதைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

டிரம்ப் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images
பதின்வயது சிறுமிகள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக சர்ச்சைக்கு ஆளாகியுள்ள அலபாமா மாகாண செனட் உறுப்பினர் ராய் மோருக்கு அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் ஆதரவாக பேசியுள்ளார்.
தனது 30களில், ஒரு 14 வயது சிறுமி உள்பட பலர் மீது பாலியல் ரீதியாக மோசமாக நடந்து கொண்டதாக மோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், மோர் முழுமையாக மறுத்துள்ளார் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












