பெண்களின் திறனை குறைத்து மதிப்பிடுவதில் உலக ஒற்றுமை; தடைகளைத் தாண்டி முன்னேற்றம்

பட மூலாதாரம், UNESCO / GEM Report
- எழுதியவர், வலேரியா பெர்சோ
- பதவி, சமூக விவகார செய்தியாளர், பிபிசி
தான்சானியாவிலுள்ள பாடப்புத்தகங்களில், மாணவர்கள் வலிமையானவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என்றும், சிறுமியர் தங்களின் அழகிய அலங்கார உடைகளை பார்த்து பெருமை அடைபவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தையர் அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். தாய்மார் குழந்தைகளை பராமரிக்கின்றனர் மற்றும் உணவு தயாரிக்கின்றனர் என்று ஹெய்தியிலுள்ள துவக்கப்பள்ளி புத்தகத்தில் இருந்து மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
அரசியல்வாதிகள், ஆற்றல் வாய்ந்தவர்கள் மற்றும் சக்தி படைத்தவர்கள் அனைவரும் ஆண்களாக இருப்பதாக பாகிஸ்தானிய புத்தகம் ஒன்று குறிப்பிடுகின்றது.
துருக்கியில், பையன் ஒருவன் மருத்துவராக மாறப்போவதை கனவு காண்கின்ற வேளையில், சிறுமி ஒருவர் வெள்ளை உடையில் ஜொலிக்கும் எதிர்கால மணமகளாக தன்னை கற்பனை செய்வதாக கார்ட்டூன் படம் விவரிக்கிறது.
இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு புவியியல் எல்லைகள் எதுவும் கிடையாது.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
துவக்கப்பள்ளி பாடப்புத்தகங்களில் பாலின பாகுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு கண்டத்திலும் இது போன்ற நிலைமை காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது நேரடி பார்வையில் மறைந்து கிடக்கும் ஒரு பிரச்சனையாகும்.
ஆண்களும், பெண்களும் வழக்கமாக செய்கின்ற வேலைகள், ஒவ்வொரு பாலினத்துக்கு என்று ஒதுக்கப்பட்ட பணிகளாக மறைமுகமாக தோன்றுவதாக சமூகவியலாளர் ரே லெஸர் புளூம்பர்க் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
ஒரு தசாப்த காலமாக உலக அளவிலுள்ள பாடப் புத்தகங்களை பேராசிரியர் புளூம்பர்க் வாசித்து வந்துள்ளார். அவற்றில் பெண்கள் முறையாக எழுதப்படவில்லை அல்லது கீழ்படிகின்ற பாத்திரங்களாக சித்தரிக்கப்படுள்ளதை அறிய வந்துள்ளார்.
"மில்லியன் கணக்கான குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு போகாமல் இருக்கும்போது, பாலினப் பாகுபாடு என்பது தலைப்பு செய்திகளில் வருகின்ற ஒரு பிரச்சனையல்ல. மிகச் சிறியதொரு கல்விப் பிரச்சனையாகவே உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்திருந்தாலும், 60 மில்லியன் குழந்தைகள் இன்னும் வகுப்பறையை பார்க்காதவர்களாகவே இருப்பதாக யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. அதில் 54 சதவீதத்தினர் சிறுமியர்.
"பாடப்புத்தகங்கள் பாலின சமத்துவமின்மையை வளர்க்கின்றன" என்று தெரிவிக்கும் பேராசிரியர் புளூம்பர்க், "கடந்த கால புத்தகங்களை கொண்டு எதிர்கால குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
கண்ணுக்கு தெரியாத அல்லது ஒரே மாதிரியான பணிகள்
பாலின பாகுபாட்டு அணுகுமுறைகள் எங்கும் நிறைந்திருப்பதால், பெண்களின் கல்வியையும், அவர்களின் தொழில்முறை வாழ்க்கையும், வாழ்வின் எதிர்பார்ப்புக்களையும் குறைத்து மதிப்பிடுவதாக பாடப்புத்தகங்கள் அமைகின்றன.
பாலின சமத்துவத்தை பெறுவதற்கு இது மறைமுக தடையாக இருப்பதாக யுனெஸ்கோ தெரிவிக்கிறது.
உரைகளின் வரிகளில், பெயரிடப்பட்ட கதாபாத்திரங்களின் விகிதத்தில், தலைப்புகளில் குறிப்பிடுதல் அல்லது பிற வரையறைகளில் அளவிடுகின்றபோது, "பாடப் புத்தகங்களிலும், பாடத் திட்டங்களிலும் பெண்கள் ஒட்டுமொத்தமாக குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன" என்று 2016 யுனெஸ்கோவின் உலக கல்வி கண்காணிப்பு அறிக்கையின் முன்னாள் இயக்குநரும், அல்பேனிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவருமான ஆரோன் பெனாவட் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
இந்தப் பிரச்சனை மூன்று மடங்கானது என்கின்றனர் நிபுணர்கள்.
பாலின அடைப்படையிலான சொற்களை பயன்படுத்துவது மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்ற அம்சம். மனிதகுலம் முழுவதையும் குறிப்பதற்கு அடிக்கடி ஆண்களை குறிக்கின்ற சொற்களே தெரிவு செய்யப்படுகின்றன.
உரைகளில் பெண்களை குறிப்பிடாமல் விட்டுவிடும் பிரச்சனையும் நிலவுகிறது. வரலாற்றிலும், அன்றாட வாழ்விலும் பெண்கள் ஆற்றுகின்ற பங்கு, ஆண் கதாபாத்திரங்களால் உள்வாங்கப்பட்டுவிடுகிறது.
"விஞ்ஞானிகள் பற்றி ஒரு புத்தகம் இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அதில் இருந்த பெண் விஞ்ஞானி மேரி கியூரி மட்டுமே" என்று பேராசிரியர் புளூம்பர்க் கூறுகிறார்.
"ஆனால், அவர் ரேடியத்தை கண்டுபிடித்தாக சொல்லப்பட்டதா? இல்லை. சிறந்த ஆடை அணிந்து மதிப்புக்குரியவராக தோன்றிய ஒருவரிடம் அவருடைய கணவர் பேசிக் கொண்டிருக்க, கணவரின் தோளில் பயத்துடன் எட்டிப்பார்க்கும் நபராக அவர் இருந்தார்' என்று போராசிரியர் புளூம்பர்க் தெரிவிக்கிறார்.
மூன்றாவதாக, வீட்டிலும், வெளியிலும், ஆண்களும், பெண்களும் செய்கின்ற வேலைகள் பற்றிய ஒரே மாதிரியான பாரம்பரிய வழிகாட்டுதல்கள் உள்ளன. ஒவ்வொரு பாலினத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட எதிர்பார்ப்புகளும், பண்புகளும் உள்ளன.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
இத்தாலிய பாடப்புத்தகம் ஒன்றில் வேறுபட்ட பணிகளுக்கு சொற்களை கற்றுக்கொடுக்கும் அதிகாரம் ஒன்றை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம்.
தீயணைப்பு வீரர் முதல் பல் மருத்துவர் வரை 10-க்கும் வேறுபட்ட தெரிவுகள் இருக்கின்றபோது, பெண்களுக்கு எவ்வித சொற்களும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், பெண்கள் பொதுவாக சமையல் முதல் குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வரையான வீட்டு கடமைகளில் ஈடுபட்டிருப்பதாக காட்டப்படுகிறது.
"அடக்கமான, கீழ்ப்படிதல் மிக்க, பாலினத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரே மாதிரியான வேலைகளை செய்வோராக பெண்கள் காட்டப்படுவதும் கவலையளிக்கக்கூடியதே" என்று கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும், சிறந்த கல்வியாளருமான கேத்ரின் ஜெரெ கூறுகிறார். உலக கல்வி கண்காணிப்பு அறிக்கை தயாரிப்பதில் இவரும் ஈடுபட்டிருந்தார்.

பட மூலாதாரம், AFP
"வெளிநாட்டினர் வந்தால் ..."
சிக்கல் புதியதல்ல. வளர்முக நாடுகளில் பெண்ணிய சீர்திருத்தத்தை தொடர்ந்து 1980கள் தொடங்கி பாடப்புத்தகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
20 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட 5 ஆயிரத்து 600 குழந்தைகளுக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்து அந்த துறையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஆய்வு என்று விவரிக்கப்படுவது அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வாகும்.
பொதுவாக, தலைப்புகளில் ஆண்கள் இரு மடங்கும், 1.6 முறை ஆண்கள் மைய காதாபாத்திரங்களாகவும் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பிரச்சனை இனம்காணப்பட்டது முதல், பாலின பாகுபாட்டை குறைப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்த முன்னேற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடைபெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
கண்காணிப்பின் கீழ் இருக்கின்ற சில பாடப்புத்தகங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டவை. ஆனால், இன்னும் பயன்பாட்டில் உள்ளன.
குறிப்பாக, குறைந்த வருமானமுடைய நாடுகளிலும், இந்த பாடப்புத்தகங்களை மாற்றிவிடுவதற்கு பட்ஜெட் இல்லாத பள்ளிகளிலும் இப்படிப்பட்ட பாடப்புத்தகங்கள் பயன்பாட்டில்தான் உள்ளன.
"உலகம் முன்னேறிக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் இது மோசமாகி வருகிறது. பெண்கள் புதிய துறைகளில் நுழைய தொடங்கியுள்ளனர். வீட்டில் ஆற்றுகின்ற கடமைகள் மாறி வருகின்றன" என்கிறார் புளூம்பர்க்.
"இதே வேகத்தில் பாடப் புத்தகங்களில் பாலின பாகுபாட்டை குறைக்கின்ற பணியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இந்த இடைவெளி விரிவாகி வருகிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.
"வெளிநாட்டினர் நமது நாட்டில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால், நம்முடைய பாடப் புத்தகங்களை வாசித்து, தொழில்முறையாகவும், தனிப்பட்ட முறையிலும் பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்கு எந்தவொரு அறிகுறிகளும் அவற்றில் இல்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அக்கறை
இந்தப் பிரச்சனை ஏறக்குறைய உலக அளவில் உள்ளதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிகழும் முறை மற்றும் பிரச்சனையின் தீவிரத்தன்மை போன்ற வேறுபாடுகளோடு குறைந்த வருமானமுடையவை முதல் அதிக வருமானமுடைய நாடுகள் வரை, பாடப் புத்தகங்களில் பாலினப் பாகுபாடு ஒரே மாதிரியாகதான் உள்ளது.
தரவுகள் பரந்து விரிந்துள்ளன. ஆனால், கடந்த தசாப்த காலத்தில் வெளியாகியுள்ள பல ஆய்வு மாதிரிகள் இதற்கு சாட்சியங்களை வழங்கியுள்ளன.
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் 3ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகம் தொழில்முறை பெண் ஒருவரை கூட குறிப்பிடவில்லை.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
கென்யா முழுவதும் பயன்படுத்தப்படும் ஆங்கில பாடப்புத்தகம், செயலாற்றலுள்ள ஆண்கள் "உற்சாகமான கருத்துக்களை" கொண்டிருப்பதாகவும், பெண்களும், சிறுமியரும் சமைப்பது மற்றும் பொம்மைகளின் முடியை பின்னிக் கொண்டிருப்பதாகவும் காட்டுகிறது.
இரான் கல்வி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்களில் 80 சதவீத கதாபாத்திரங்கள் ஆண்கள்தான்.
இந்தியா 6 சதவீதமே பெண்களை சித்தரித்துக் காட்டுகிறது. ஜார்ஜியாவில் இது 7 சதவீதம்.
2007 ஆம் ஆண்டு ஒப்பீட்டு ஆய்வில், கேமரூன், ஐவரி கோஸ்ட், டோகோ மற்றும் துனிஷியாவில் கணித பாடப்புத்தகங்களில் ஆண் கதாபாத்திரங்களை விட பெண்கள் 30 சதவீதம் குறைவாகவே உள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவில் நடத்தப்பட்ட அறிவியில் பாடப்புத்தகங்கள் பற்றிய ஆய்வு, 87 சதவீத கதாபாத்திரங்கள் ஆண்களாக இருந்ததை வெளிப்படுத்தியது.

பட மூலாதாரம், MOHAMMED HUWAIS / AFP
ஆஸ்திரேலியாவில், 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு, அந்நாட்டில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருந்த பின்னரும் பாடப்புத்தகங்களிலுள்ள 57 சதவீத கதாபாத்திரங்கள் ஆண்களாகவே உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
அதிக வருமானமுடைய நாடுகளில் காணப்படும் பாடப்புத்தகங்கள் அதிக முற்போக்காக இருக்கும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவிலுள்ள ஆண்கள் பெண்களை விட இரு மடங்கு அதிகமாக மேலாண்மை பங்காற்றுவதாகவும், அரசியலிலும், அரசாங்கத்திலும் ஆண்கள் 4 மடங்கு அதிக பங்காற்றுவதாகவும் தெரிவிக்கிறது என்கிறார் பேராசிரியர் ஜெரெ
"1949 கம்யூனிஸ்ட் புரட்சியில் ஒரேயொரு கதாநாயகி மட்டுமே பதிவாகியுள்ள ஒரு தீவிர நிலையும் சீன புத்தகத்தில் உள்ளது என்று பேராசிரியர் புளூம்பர்க் கூறுகிறார்.
"அந்தப் பெண் சட்டப்போராட்டம் நடத்துவதாகவோ, தலைவர் மாவோவுடன் முன்னிலையில் இருப்பதாகவோ காட்டப்படவில்லை. மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஆண் பாதுகாப்பு பணியாளருக்கு குடை வழங்கியதாக சுட்டிக்காட்டப்படுகிறார்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
செல்வாக்கு மிகுந்த கற்பிக்கும் உதவி
இந்தப் பிரச்சனையின் ஒரு பகுதியாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், பள்ளிக் குழந்தைகள் தங்களுடைய கண்களால் பார்க்கின்ற, சாதாரணமாக சமூகத்தில் காணப்படுவதை பாடப்புத்தகங்கள் புரிந்துகொள்ள வைக்கின்றன.
நாட்டின் கல்வி பாடத்திட்டத்தை உருவாக்கும்போது, அதனை வாசிப்போர் ஒரு கல்வி கருவியாகிவிடுகின்றனர். மிகவும் சக்தி வாய்ந்த கருவியாகவும் ஆகின்றனர்.
துவக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளி வரை மாணவ, மாணவியரில் ஒருவர் 32 ஆயிரத்திற்கு மேலான பக்கங்கள் வாசிக்கின்றார். ஆசிரியரின் பெரிய அளவிலான திட்டமிடுதலோடு, சுமார் 75 சதவீத வகுப்புப் பாடங்களும், 90 சதவீத வீட்டுப்பாடங்களும் இந்த மாணவ மாணவியரால் செய்யப்படுகின்றன.
இணைய வசதியாலும், பிற டிஜிட்டல் ஆதாரங்களை எளிதாக அணுகிவிடும் வசதிகளாலும், கற்கும் கருவிகள் வரிசை விரிவாகி இருந்தாலும், பாடப்புத்தகங்கள் இன்னும் மையமாகவே விளங்குகின்றன. குறிப்பாக ஏழை நாடுகளில் இது தெளிவாக தெரிகிறது என்கிறார் ஆரோன் பெனாவட்.
ஆண்களும், பெண்களும் சமூகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று குறுகிய எதிர்பார்ப்புக்களை காட்டியிருக்கும்போது, பள்ளி குழந்தைகள் அதிலேயே பழகிக் கொள்கின்றன என்று பேராசிரியர் ஜெரெ குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், ARIF ALI / AFP
உலகம் பற்றிய குழந்தைகளின் பார்வையில் இத்தகைய பாடப்புத்தகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை கள ஆய்வுகள் ஏற்கெனவே வரையறுத்துள்ளன.
துவக்க நிலை குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இஸ்ரேலிய ஆய்வில், ஆண்களையும், பெண்களையும் சமமாக காட்டப்படும் பாடப்புத்தகங்களை கொண்டிருந்தோர், பெரும்பாலான தொழில்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருத்தமானவை என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது.
ஆனால், பாலின பாகுபாடு உடைய பாடப்புத்தகங்களை கற்றோர் அந்தந்த பாலினத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரேமாதிரியான தொழில்களையே ஏற்றுக்கொள்கின்றனர்.
பெண் விஞ்ஞானிகளை குறைவாக சித்தரிக்கும் பாடப்புத்தகங்களுக்கும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் அடங்கிய எஸ்டிஇஎம் பாடங்களை படிப்பதற்கு தெரிவு செய்கின்ற பெண்கள் குறைவாக இருப்பதற்கும் இடையில் இருக்கும் தொடர்பும் உலகின் பல பகுதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
முன்னேற்றத்தின் அறிகுறிகள்
கடந்த கால தசாப்தத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பாலின சமத்துவத்தை அதிகரிப்பது தொடர்பான உள்ளடங்கங்கள் உலகளவில் அதிகரித்திருப்பதை யுனெஸ்கோவின் உலக கல்வி கண்காணிப்பு அறிக்கை காட்டுகிறது.
குறிப்பாக, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சஹாரா பாலைவனத்தின் தெற்கிலுள்ள ஆப்ரிக்க நாடுகளில், இது பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினப் பாகுபாடு பற்றிய அதிக மேற்கோள்களோடு காணப்படுகின்றன.

பாலியல் மீதான அதன் ஒட்டுமொத்த மனப்பான்மையை வெகு சிறப்பாக காட்டவில்லை என்றாலும், சில நாடுகள் மாற்றத்தை தாங்களே முன்னெடுத்து வருகின்றன. ஸ்வீடன் இதில் முதலிடத்தில் உள்ளது.
அன்றாட வாழ்வு பற்றிய ஒரு சமத்துவ சித்தரிப்பு இருக்கும் அதேவேளையில், தேசிய பாடத்திட்டத்தில் இருக்கின்ற சில புத்தகங்கள் பாலின நடுநிலைமை கதாபாத்திரங்களையும், பிரதி பெயர்சொற்களையும் உள்ளடக்கியுள்ளன.
"யாராவது ஒரு பானையை வெறித்து பார்ப்பதாகவும், கவசத்தை அணிவதாகவும் ஸ்வீடன் புத்தகத்தில் இருந்தால், அவர் ஆணாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு" என்று பேராசிரியர் புளூம்பர்க் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Adam Berry / Getty Images
ஆங்கில பாடப்புத்தகங்களில் சம அளவிலான ஆண்-பெண் காதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதை ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஆவணப்படுத்தியுள்ளது.
ஜோர்டன், பாலஸ்தீன எல்லைகள், வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான், கோஸ்டா ரிக்கா, ஆர்ஜென்டினா மற்றும் சீனாவிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பட மூலாதாரம், UNESCO / GEM Report
ஆனால், தேசிய அளவில் பாடப்புத்தகங்களில் ஒருங்கிணைந்த மீளாய்வு என்பது மிக நீளமான மற்றும் செலவு அதிகமாகும் வழிமுறைதான். இதனால், பெரும்பாலும் பட்ஜெட் வெட்டுக்கள் மற்றும் பெரிய வழிமுறையால் காலதாமதம் ஆகியவற்றில் அகப்பட்டுக் கொள்கிறது.
"சில மாற்றங்கள் மேம்போக்காக உள்ளன. இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அரசின் ஈடுபாடு தொடர்கின்ற ஒன்றாக இருப்பதில்லை" என்று பெனாவட் தெரிவிக்கிறார்.

வகுப்பறைகளிலுள்ள மோசமான எதிர்மறை புத்தகங்களை சமன் செய்ய மாற்று வழிமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பாலின பாகுபாட்டை மாணவ, மாணவியரை இனம் காண செய்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட ஒரே மாதியான வேலைகளை செய்வதை குழு விவாதங்களில் கேள்விக்குட்படுத்துதல் என போட்டி வாசகர்களை கொண்டு இந்தியாவிலும், மலாவியிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரச்சனைக்கு கவனம் அளித்து ஈடு செய்யலாம். பிரச்சனையை கண்டறியும் முறையில் மாணவ, மாணவியர் மகிழ்ச்சியடைகின்றனர்" என்று பேராசிரியர் பளூம்பர்க் தெரிவிக்கிறார்.
"ஆனால், முதலில் ஆசிரியர்களுக்கு நாம் பயிற்சியளிப்பது அவசியம். சிறந்த கல்வி அளிக்க வேண்டுமென்றால், இந்தப் புத்தகங்களை திருத்தி மீண்டும் எழுதுவதும் முக்கியமாகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், UNESCO / GEM Report

'குழந்தை' ரோபோக்களால் ஜப்பானில் சர்ச்சை
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













