வர்ஜீனியா: உணவக பணியாளருக்கு டிப்ஸூக்கு கொடுப்பதற்கு பதிலாக இனவெறிக் குறிப்பு
டிப்ஸக்கு பதிலாக இனவெறிக் குறிப்பை பெற்ற கறுப்பினப் பணிப்பெண்ணுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள ஓர் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் திரண்டுவருகிறார்கள்.

பட மூலாதாரம், ABC
"சிறந்த சேவை, ஆனால் கறுப்பின மக்களுக்கு டிப்ஸ் கொடுப்பதில்லை" என்று பில்லில் ஒரு ஜோடி எழுதிவிட்டு சென்றுள்ளதாக கெல்லி கார்ட்டர் என்கிற கறுப்பின பணிப்பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எழுந்த எதிர்வினை “பிரமிக்கத்தக்கதாக இருந்தது” என்று அந்த உணவகத்தின் உரிமையாளர் டாம்மி டெலஸ் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த பணிப்பெண் கார்ட்டருக்கு பணம் வழங்குவதற்காக மக்கள் உணவகம் வருவதாக தெரிவித்திருக்கும் டெலஸ், "யுகேரிங்" என்கிற பிரசார இயக்கம் மூலம் 300 டாலர் திரட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்வத்திற்குப் பிறகு கார்ட்டரை கட்டித்தழுவி ஆதரவு தெரிவிக்கவும் அவர் உணவு பரிமாறும் வழக்கமான வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வந்து செல்கின்றனர்.
உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக சம்பாதிப்பதால், அவர்களின் ஊதியத்தில் காணப்படும் இடைவெளியை சரி செய்யும் வகையில் டிப்ஸ் வழங்குவது அமெரிக்காவில் வழக்கமானதே.
30.52 டாலர் செலவு செய்து சாப்பிட்டு விட்டு, இந்த இனவெறிக் குறிப்பை பில்லில் எழுதி வைத்த இந்த ஜோடி 20 வயதுகளில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
சனிக்கிழமை அவர் பரிமாறிய காலை உணவு பற்றியும் சாப்பிட்டவர்களில் ஒருவர் புகார் தெரிவித்தாக கார்ட்டர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், ABC
இனவெறிக் குறிப்பு எழுதி வைத்த அதே ஜோடிக்கு மீண்டும் உணவு பரிமாற தான் தயாராக இருப்பதாக கூறும் கெல்லி கார்ட்டர், "ஓர் இனவெறிக் குறிப்பு இந்த பணியை செய்வதில் இருந்து என்னை தடுத்துவிட முடியாது" என்றும் தெரிவித்திருக்கிறார்.
அனிதாஸ் புதிய மெக்ஸிகோ ஸ்டைல் உணவகத்திற்கு இந்த ஜோடி மீண்டும் வந்தால் இனம்காண முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"என்னுடைய கரங்கள் அவர்களுக்கு திறந்தே இருக்கிறது" என்று அவர்களுக்கு மீண்டும் பரிமாற தயாராக இருப்பதை கார்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.
"இது அவருடைய பிரச்சனை. என்னுடையதல்ல" என்று இந்த சம்பவம் நடைபெற்று ஒரு நாளுக்கு பின்னர் காலை பணிமுறையில் வேலை செய்தபோது தெரிவித்த கார்ட்டர், "அவர் அவரையேதான் புண்படுத்தியுள்ளார். என்னுடைய வலிமையை கூட்டியுள்ளார்" என்றும் தெரிவித்திருக்கிறார்.
"இந்த சம்பவத்தை கார்ட்டர் சிறப்பாக கையாண்டுள்ளார். அதே ஜோடிக்கு மீண்டும் பரிமாறும் ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று இந்த உணவகத்தின் உரிமையாளர் டெலஸ் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், ABC
"ஒரு தவறைப் பின்பற்றி இன்னொரு தவறு செய்தால் முதல் தவறு சரியாகிவிடாது" என்று பிபிசியிடம் தெரிவித்த டெலஸ், இந்த இனவெறி குறிப்பு ஒருவரை "மிரளச் செய்வதாகவும், இதயத்தை நொறுக்குவதாகவும், ஆத்திரமூட்டுவதாகவும்" இருப்பதாக குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையிலிருந்து அரசியல் சொல்லாடலில் "குறைந்தது 18 மாதங்களாக இனவெறி" இருந்திருக்கிறது, "கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில்" எண்ணெய் வார்ப்பதாக இருந்திருப்பதாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஜோடியை மீண்டும் பார்ப்பேன் என்று நம்புவதாக கார்ட்டர் கூறியிருக்கிறார்.
"நானே அவர்களுக்கு உணவு பரிமாறுவதுதான், நான் வழங்கிய தலைசிறந்த பணிவிடையை புரிந்துகொள்ளவில்லை என்று அவர்களை உணர செய்யும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












