போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படலாம்
போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் வாழ்பவர்கள் டிமென்ஷியா எனப்படும் மனநல பாதிப்பு உருவாவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாக கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
லேன்செட் என்ற மருத்துவ இதழில் வெளியான இந்த ஆய்வில், ஓன்டோரியோவை சேர்ந்த சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
முக்கிய போக்குவரத்தி மையத்திலிருந்து 50 மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் வாழ்பவர்களுடன் அங்கிருந்து தள்ளி வாழ்பவர்களை ஒப்பிடும் போது, ல்சைமர்ஸ் எனப்படும் மூளைச்சிதைவு மற்றும் மனநல பாதிப்பின் பிற வடிவங்களின் பாதிப்பு ஏற்படுவதற்கு 12% கூடுதல் வாய்ப்பு இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
கரித்துண்டுகளின் நுண்ணிய துகள்கள் மற்றும் நைட்ரோஜன் ஆக்சைடு அடங்கிய புகையை நீண்ட காலமாக சுவாசித்து வருவது மற்றும் போக்குவரத்து சத்தம் ஆகியன மூளை சுருங்குவதற்கும், மனநல பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்று இந்த கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.
உலகளவில் சுமார் 50 மில்லியன் மக்கள் டிமென்ஷியா எனப்படும் மனநல பாதிப்பின் பிற வடிவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












