ஃப்ரெஷ்வொர்க்ஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் தடம் பதித்த டெக் தமிழர் கிரீஷ் மாத்ருபூத்தின் நிறுவனம்

ஃப்ரெஷ்வொர்க்

பட மூலாதாரம், Getty Images

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஒரு மாபெரும் கனவு. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் டாப் டெக் நிறுவனங்களின் கூடாரமது.

அங்கு தன் நிறுவனத்தைத் தொடங்கி, இன்று உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம்.

46 வயதாகும் இந்த திருச்சிக்காரர்தான் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் (Freshworks Inc) நிறுவனத்தை நிறுவியவர். அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் முதல் இந்திய சாஸ் (மென்பொருள் சேவை) ஐடி நிறுவனம்தான் என்கிறது, அந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்றான ஆக்ஸல் நிறுவனம்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

கிரீஷ் மற்றும் ஷான் இருவருமே சோஹோ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். அவர்கள் இருவரும் இணைந்து, அக்டோபர் 2010-ல் சென்னையில் ஃப்ரெஷ்டெஸ்க் (Freshdesk) என்கிற பெயரில் க்ளவுடை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வாடிக்கையாளர் சேவை நிறுவனத்தைத் தொடங்கினர். அப்போது அந்நிறுவனத்தில் ஆறு ப்ரோகிராமர்கள் மட்டுமே இருந்தனர்.

இந்த நிறுவனத்தின் முதல் வாடிக்கையாளரே அட்வெல் கல்லூரி என்கிற ஆஸ்திரேலிய பள்ளிதான் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

வளர்ச்சி வேகத்தை பெருக்கல் விகிதத்தில் விரும்பிய ஃப்ரெஷ்டெஸ்க் ,200 நாட்களுக்குள் சிறிதும், பெரிதுமாக 200 வாடிக்கையாளர்களைப் பிடித்திருந்தது. இதில் வெளிநாட்டு நிறுவாங்களும் அடக்கம் என்கிறது ஃபோர்ப்ஸ்.

2011ஆம் ஆண்டில் தன் முதல் சுற்று ஃபண்டிங்கை பெறுகிறது ஃப்ரெஷ்டெஸ்க். முதலீட்டாளரின் பெயர் ஆக்ஸல். முதலீடு செய்யப்பட்ட பணத்தின் அளவு $1 மில்லியன்.

போட்ட முதலுக்கு மேல் வளர்ச்சி காண, வியாபாரமும் விரிவடைகிறது. அடுத்த ஆண்டே (2012-ல்) மீண்டும் ஃபண்டிங் கேட்டு முதலீட்டு நிறுவனங்களை அணுகுகிறது ஃப்ரெஷ்டெஸ்க். இந்த முறை நியூ யார்க்கைச் சேர்ந்த டைகர் குளோபல் என்கிற நிறுவனமும், ஆக்ஸல் நிறுவனமும் இணைந்து $5 மில்லியன் முதலீடு செய்கிறார்கள்.

2015ஆம் ஆண்டில் 1CLICK.io, Konotor, Frilp போன்ற நிறுவனங்களை கையகப்படுத்துகிறது. வாடிக்கையாளர் சேவை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தால் பத்தாதென, 2016ஆம் ஆண்டு வாடிக்கையாளர் உறவு மேலாண்மைக்கென புதிய சேவையையும், வாடிக்கையாளர் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஃப்ரெஷ்சேல்ஸ் என்கிற சேவையையும் தொடங்கியது.

2017-ல் ஃப்ரெஷ்டெஸ்க், ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் என உருவெடுத்தது. அடுத்த ஆண்டே 100 மில்லியன் டாலர் ரெகரிங் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவெடுத்தது. அதே ஆண்டு ஃப்ரெஷ்டெஸ்க் 360 என்கிற ஒரு புதிய சேவையையும் களமிறக்கியது. (வரும்காலத்தில் வரவுள்ள வருவாயும் சேர்த்து கணக்கிடப்படுவது ரெக்கரிங் இன்கம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.)

ஃப்ரெஷ்டெஸ்க் களமிறங்கிய வியாபாரத்தில், மைக்ரோசாஃப்ட், ஆரக்கில், சேல்ஸ் ஃபோர்ஸ் போன்ற மிகப் பெரிய டெக் மற்றும் துறை சார் ஜாம்பவான்களும் இருந்தனர். இருப்பினும் தன் தனித்த சிந்தனை மற்றும் பிரச்னைகளை வித்தியாசமாக அணுகி, எளிமையான தீர்வுகளை வழங்குவது போன்ற பல விஷயங்களால், எல்லோரையும் தாண்டி அசுர வளர்ச்சி கண்டது ஃப்ரெஷ்டெஸ்க்.

கிரீஷ் மாத்ருபூதம்

பட மூலாதாரம், @Nasdaq, Twitter

படக்குறிப்பு, கிரீஷ் மாத்ருபூதம்

புதிய சேவைகள், மளமளவென குவியும் வாடிக்கையாளர்கள், எகிறும் வருவாய் என எல்லாம் சேர்ந்து ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பையே உயர்த்தத் தொடங்கியது. 2018ஆம் ஆண்டு ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தன் சீரிஸ் ஜி ஃபண்டிங்காக $100 மில்லியன் டாலரைப் பெற்றது. அப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு $1.5 பில்லியன் டாலர்.

இந்தியாவின் முதல் எண்டர்பிரைஸ் டெக் யுனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது ஃப்ரெஷ்வொர்க்ஸ். இத்தனை நாட்கள் தன் வியாபார தேவைக்கு முதலீட்டு நிறுவனங்களை நம்பி இருந்த ஃப்ரெஷ்வொர்க்ஸ், சமீபத்தில் பொதுமக்களிடம் பணம் கேட்டு வந்தது.

அது தான் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் நிறுவனத்தின் ஐபிஓ என்கிற முதல் பொதுப்பங்கு வெளியீடு. ஒரு பங்கின் விலை $36 என 28.5 மில்லியன் பங்குகளை வெளியிட்டது. இந்த ஐபிஓ மூலம் $1.03 பில்லியன் திரட்டி இருப்பதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறுகிறது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 7,400 கோடி ரூபாய்.

இன்று (செப்டம்பர் 23, வியாழக்கிழமை) காலை நியூயார்க் பங்குச் சந்தையில் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் நிறுவனம் பட்டியலிடப்பட்டது. தற்போது சுமாராக 47 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் இதன் பங்கை வைத்துள்ளனர். இந்த பொதுப்பங்கு வெளியீடு மூலம் ஃப்ரெஷ்வொர்க்ஸ் இங்க் நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் கோடீஸ்வரர்களாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"திருச்சியில் மிக சாதாரணமாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் தொடங்கப்பட்டதிலிருந்து நியூயார்க் பங்குச் சந்தையில் முதல் பங்கு வெளியீட்டுக்கு மணி அடித்து பங்கு வர்த்தகத்தை தொடங்கியது வரை... இது என் கனவு நனவான தருணம். எங்கள் கனவை நம்பிய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கூட்டாளிகள், முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி" என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :