'திருநங்கை' ஆக சுஷ்மிதா சென்: இதனால் மற்ற திருநங்கைகளின் வாய்ப்பு பறிபோகிறதா?

    • எழுதியவர், மேகா மோகன்
    • பதவி, பாலினம் மற்றும் அடையாளப் பிரிவு செய்தியாளர்

பாலிவுட் திரையுலகில் ஒரு திருநங்கை ஆர்வலரை பற்றிய திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதை இந்தியாவின் திருநங்கை சமூகம் இரு விதமாகப் பார்க்கிறது. அவர்களில் சிலர், இந்த பாத்திரம் பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பல திருநங்கை நடிகைகளில் ஒருவருக்குச் சென்றிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அந்த பாத்திரத்தில் நடிப்பதற்கான தேர்வு நல்லபடியாக நடந்தது. முன்னணி பாத்திரத்தின் நெருங்கிய தோழியாக நவ்யா சிங் நடிக்கவிருந்தார். அவர் நம்பிக்கையோடு தன் வரிகளைப் பேசி நடித்திருந்தார். அவர் முடித்ததும் அறையில் நீண்ட நேரம் அமைதி நிலவியது.

இறுதியில் நடிப்புக்கான தேர்வை நடத்திக் கொண்டிருந்த இயக்குநர் ஒருவர் பேசினார்.

"நீங்கள் பெண்ணா அல்லது ஆணா?" என்று அவர் நவ்யாவிடம் கேட்டார்.

"என் இதயம் கனத்தது. பாலிவுட்டில் ஒரு நடிகையாக எனக்குப் பழகிப் போன பேச்சுதான் இது. ஆனால், அதை காதில் கேட்பது எளிதாக இருந்ததில்லை," என்கிறார் நவ்யா.

18 வயதில் நவ்யா பிகாரில் இருந்து இந்தி திரையுலகின் மையமான மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்குதான் அவர் தன்னை ஒரு திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொண்டார்.

அங்கு சென்றதும் அவர் தன்பாலின ஈர்ப்பு சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள், மாடல்கள், ஆடை வடிவமைப்பாளார்கள், நடிகர்களின் நட்பு வட்டத்தில் இணையத் தொடங்கினார். சிலர் நாட்டின் மிகவும் பிரபலமான திரைப்படங்கள், விளம்பரங்களில் ஈடுபட்டு அடையாளம் காணக்கூடியவர்களாக இருந்தனர். ஆனால் மற்றவர்கள் அதிலும் குறிப்பாக திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிரமப்பட்டனர். அவருக்குத் தெரிந்த பலர் பிழைப்புக்காக திரைப்படம், நடனம், மாடலிங் போன்ற பணிகளுக்கு இடையில் பாலியல் தொழிலுக்கும் சென்றனர்.

"பாலிவுட்டில் திருநங்கைகளுக்கு வேலை மிகவும் குறைவு. ஃபேஷன் ஷோக்கள், திரைப்படங்களுக்கான கதாபாத்திர தேர்வுகளில் கலந்துகொள்வோம். ஆனால் அரிதாகவே தேர்ந்தெடுக்கப்படுவோம். தன்பால் ஈர்ப்பு சமூகத்தினரில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் கூட எங்களுக்கு கதவைத் திறப்பதில்லை," என்று கூறினார்.

அவற்றைத் தாண்டி சில வேலைகள் கிடைத்தன. ஃபேஷன் நிகழ்ச்சிகளில் நவ்யா கேட்வாக்கிற்கு சென்றார், கிராசியா பத்திரிகையில் மாடலாக இருந்தார். நாட்டிலேயே திருநங்கைகளுக்கான மிகப்பெரிய அழகுப் போட்டியான மிஸ் டிரான்ஸ் குயின் இந்தியாவின் இறுதிப் போட்டி வரை சென்று, பிராண்ட் தூதரும் ஆனார்.

அவர் மும்பைக்கு குடிபெயர்ந்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சவ்தான் இந்தியா என்ற வியத்தகு க்ரைம் சீரீஸில் திருநங்கையாக நவ்யா நடித்தார். அவர் பலரையும் ஈர்க்கவே, அவருடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பின் தொடரத் தொடங்கினர்.

அவர் பிகாரை விட்டு வெளியேறியதில் இருந்து அவருடைய பெற்றோர் அவரிடம் பேசவில்லை. இந்த சீரீஸின் முதல் எபிசோட் ஒளிபரப்பட்ட பிறகு அவருடைய பெற்றோரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.

"அவர்கள், 'நாங்கள் மிகவும் வருந்துகிறோம். திருநங்கை என்றால் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் உன்னை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு நாங்கள் புரிந்துகொண்டோம். நீ எங்கள் குழந்தை' என்றார்கள்."

நவ்யா அவர்களை மகிழ்ச்சியுடன் தன் வாழ்க்கையில் வரவேற்றார். அனைத்தும் நல்ல விதமாக நடந்து கொண்டிருந்தன.

பிறகு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த பாலியல் தொழிலாளி ஒருவரின் மகளைத் தத்தெடுத்த மும்பையைச் சேர்ந்த திருநங்கை கௌரி சாவந்த்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தாலி எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தன. மும்பையில் உள்ள தன்பால் ஈர்ப்பு மற்றும் திருநங்கை சமூகம் வந்துகொண்டிருந்த செய்தி அந்த மக்களை மன எழுச்சியடையச் செய்திருந்தது. 2014ஆம் ஆண்டில், ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த திருநங்கை கௌரி சாவந்த், மாறுபட்ட குடும்ப அமைப்பைக் காட்டியதற்காக பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.

"தாலி பற்றி முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் உற்சாகமாக இருந்தோம். ஏனெனில், இதுவொரு ஒரு முன்னணி திருநங்கையைப் பற்றிய வீரம் செறிந்த பாத்திரம். இது திருநங்கை சமூகத்தில் ஒரு பெரிய வெற்றி. அந்தப் பாத்திரம் நாங்கள் அனைவரும் புரிந்துகொண்ட ஒன்று. எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றியது."

ஆனால், நவ்யாவின் பாலிவுட் நாயகர்களில் ஒருவரான நடிகை சுஷ்மிதா சென், கௌரி சாவந்த் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.

"கௌரியின் பாத்திரம் திருநங்கை அல்லாத ஒரு நடிகைக்குச் சென்றதைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி வருத்தப்படுவது நான் மட்டுமல்ல," என்று நவ்யா கூறுகிறார்.

இந்தத் தேர்வை பலர் சமூக ஊடகங்களில் விமரித்து வருகின்றனர்.

"ஒரு பெண் ஏன் திருநங்கை வேடத்தில் நடிக்கிறார்? நாம் என்ன 1995ஆம் ஆண்டிலா இருக்கிறோம்? திருநங்கை கதாபாத்திரங்களில் திருநங்கை நடிகையை நடிக்க வையுங்கள்!" என்ற கருத்துகள் எழுந்தன.

மற்றொரு ட்விட்டர் பயனர், "நடிப்பில் முன்மாதிரியான பணியைச் செய்த திருநங்கைகளின் நீண்ட பட்டியலை என்னால் வழங்க முடியும். ஆனால் பாலிவுட்டில் இருந்து ஒருவர் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?" என்று ட்வீட் செய்துள்ளார்.

"பிரச்னை என்னவென்றால், திருநங்கைகளுக்கு போதுமான மாறுபட்ட, சிக்கலான பாத்திரங்கள் கொடுக்கப்படுவதில்லை," என்று திருநங்கை நடிகை கல்கி சுப்ரமணியம் பிபிசியிடம் கூறுகிறார்.

"எங்களுக்கு வழங்கப்படும் கதாபாத்திரங்கள், பாலியல் தொழிலாளி, திருமணத்தை ஆசீர்வதிக்கும் பின்னணி கதாபாத்திரம், சத்தம் போட்டு சமிக்கும் நபர் என்று ஒரே மாதிரியானவை.

தென்னிந்திய திரையுலகைப் போன்ற இந்திய திரையுலகின் சில பகுதிகளில் இது மாறி வருகிறது. ஆனால், பாலிவுட்டில் மாறவில்லை."

இந்தியாவின் மிகவும் பிரபலமான திருநங்கை நடிகைகளில் ஒருவர் அஞ்சலி அமீர். விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட "பேரன்பு" என்ற தமிழ் திரைப்படத்தில் நட்சத்திர நடிகரான மம்முட்டியின் (திருநங்கை)காதலியாக நடித்தார். இந்திய சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் திருநங்கை அஞ்சலி தான்.

தன்பால் ஈர்ப்பு சமூகத்தின் மீதான பழைமையான பார்வைகளை உடைத்ததற்காக இந்தக் கதாபாத்திரத்தை விமர்சகர்கள் பாராட்டினர். அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியமாக முன்னணி கதாபாத்திரமான தந்தை மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகளையும் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் இருந்து "காப்பாற்றுகிறது" மற்றும் அவர்கள் மூன்று பேரும் ஓர் அன்பான குடும்பத்தை உருவாக்குகிறார்கள்.

அஞ்சலி அமீர், கௌரி சாவந்தாக சுஷ்மிதா சென் நடிப்பதை முழுமையாக ஆதரிக்கிறார்.

"சுஷ்மிதா சென் போன்ற பிரபலமான ஒருவர் நடிப்பது திருநங்கைகளுக்கு நல்ல விஷயம்," என்று அஞ்சலி பிபிசியிடம் கூறுகிறார். "அதாவது நமது கதைகள் முக்கிய நீரோட்டமாக மாறுவதை இது காட்டுகிறது. நமது கதைகள் அதிக வீடுகளுக்குள் நுழையும்போது, நம்மையும் இயல்பான மனிதர்களாகப் பார்ப்பது மக்களுக்கு எளிதாகும், அதிகமான பாத்திரங்களும் அதைத் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும்," என்றார்.

தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் திருநங்கை அல்லாத பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கூட தனக்கு வந்துள்ளதாகக் கூறுகிறார் அஞ்சலி.

பாதிக்கப்பட்டவர்களாகவோ பாலியல் தொழிலாளியாகவோ தான் அதிகமான கதாபாத்திரங்கள் திருநங்கைகளுக்கு எழுதப்படுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் அதிலிருந்து விலகியிருக்க முயல்கிறேன். நான் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். சுஷ்மிதா சென்னும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நடிகர்கள் அதைத்தான் செய்வார்கள்," என்று அவர் கூறுகிறார்.

பாலிவுட் ஜாம்பவான் சுஷ்மிதா சென் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தது "எனது சமூகத்திற்குக் கிடைத்த மாபெரும் கௌரவம்" என்று ஆன்லைனில் பதிவிட்ட புதிய தொலைக்காட்சித் தொடரின் பொருளான கௌரி சாவந்த்தின் ஆத

பாலிவுட் ஜாம்பவான் சுஷ்மிதா சென் அவருடன் நடிக்கத் தேர்ந்தெடுத்தது "எனது சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவம்" என்று ஆன்லைனில் பதிவிட்ட கௌரி சாவந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு சுஷ்மிதா சென், "நாம் செய்வோம்!" என பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் தாலி திரைப்படத்தில் இரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க நவ்யாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் படப்பிடிப்பு இடத்தில் ஒரு நாள் காத்திருப்புக்குப் பிறகு அவரை வீட்டிற்குச் செல்லுமாறும் அவர் இனி தேவையில்லை என்றும் கூறப்பட்டது. அந்த முடிவு தன்னைச் சிதைத்துவிட்டதாகக் கூறுகிறார்.

"திரைப்பட தொகுப்புகளில் தயாரிப்பு அட்டவணைகள் மாறுவது, சிலர் தேவைப்படாமல் இருப்பது மிகவும் பொதுவானது. ஆனால், பாலிவுட்டில் நீங்கள் ஒரு திருநங்கையாக இருக்கும்போது, அது அடிக்கடி நடப்பதாகத் தோன்றுகிறது. திருநங்கைகளின் நேரத்திற்கு மதிப்பு இல்லை, திருநங்கைகளின் முகம் தேவையில்லை. நீங்கள் முக்கிய பார்வையாளர்களுக்குத் தேவைப்படும் ஒரு பின்னணி கதாபாத்திரம் அவ்வளவு தான்," என்கிறார்.

நவ்யா மாடலிங் மற்றும் திரைப்பட வேடங்களுக்கான தேர்வுகளில் பங்கேற்கும்போது, தனது செலவுகளுக்காக பணம் சம்பாதிக்க இரவு கிளப்களில் நடனமாடுகிறார். சிக்கலான, வலிமையான, அழகான மற்றும் விருப்பமிக்க கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டுமென அவர் கனவு காண்கிறார். ஆனால், பாலிவுட்டில் அந்த பாத்திரங்கள் திருநங்கை நடிகைகளுக்குக் கிடைப்பது மிகவும் குறைவு என்பதையும் அவர் அறிந்துள்ளார். அதனால் தான் தாலியில் கௌரி சாவந்த் கதாபாத்திரத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்தது.

"கௌரி எங்களுக்கும் எங்கள் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமானவர். ஒரு திருநங்கை நடிகை அவருடைய பாத்திரத்தில் நடித்திருந்தால், அது எவ்வளவு சக்திவாய்ந்த குரலாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அது அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கும். அவர் கவனிக்கப்பட்டிருப்பார்."

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: