கோவில்பட்டியில் தலைமுடி அறுக்கப்பட்ட திருநங்கைகள்: சட்ட நடவடிக்கை குறித்து எழும் கேள்விகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையை சேர்ந்த திருநங்கைகள் இருவர் காட்டு பகுதியில் வைத்து தலை முடியை அறுத்து தாக்குல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து கழுகுமலை போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டரீதியாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் வசித்து வரும் திருநங்கைகள் அனன்யா, மகேஷ். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7ஆம் தேதி யாசகம் பெருவதற்காக கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு செல்வதற்காக நடந்து சென்றனர். அப்போது, கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியைச் சேர்;ந்த நோபா யூபன், சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரும் திருநங்கைகளை வழிமறித்து அவர்களை கடத்தி கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து தாக்கியுள்ளனர்.

மேலும் அனன்யாவின் முடியை அறுத்து அந்த காட்சியை செல்பேசியில் பதிவு செய்து இதை வெளியே சொல்லக்கூடாது என்று நோபா யூபன், விஜய் மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

அந்த அரசு மருத்துவமனைக்கு நோபா யூபன், விஜய் சென்று திருநங்கைகள் இருவரையும்; ஊரை விட்டு செல்லுமாறு ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன இரு திருநங்கைகளும் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு வெளியேறினர்.

இதற்கிடையே, இரண்டு திருநங்கைகளும் தாக்கப்படும் காணொளியை ஒரு வாட்ஸ்அப் குழுவில் பார்த்த திருநங்கைகள் சமூக உரிமைக்காக குரல் கொடுத்து வரும் செயல்பாட்டாளர் கிரேஸ் பானு அந்த காணொளியை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், தமிழ்நாடு காவல்துறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகியவற்றின் காவல்துறை, மதுரை ஆட்சியர் ஆகியோரை கிரேஸ் பானு டேக் செய்து "மெளனம் கலையுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கிரேஸ் பானுவை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தொடர்பு கொண்டு திருநங்கைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட திருநங்கைகளை அடையாளம் காண உதவும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, நோபா யூபன், விஜய் ஆகிய இருவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கழுகுமலை காவல்துறையினர், இருவரையும் தேடி வந்தனர். இன்று அதிகாலை அந்த இருவரையும் கழுகுமலை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சை

இது குறித்து திருநங்கை, திருநம்பியர் சமூக உரிமை செயல்பாட்டாளர் கிரேஸ்பானுவிடம் நடந்த விஷயம் தொடர்பாக பிபிசி தமிழ் பேசியது.

"கடந்த 7ஆம் தேதி கோவில்பட்டியை சேர்ந்த திருநங்கைகள் இருவர் யாசகம் பெறுவதற்காக சென்ற போது அவர்களை வழிமறித்த இரு இளைஞர்கள் பாலியல் தொழிலுக்கு அழைத்துள்ளனர். திருநங்கைகள் வர மறுத்ததால் அந்த ஆத்திரத்தில் திருநங்கைகள் மீதும் அந்த இளைஞர்கள் கடுமையான தாக்குதல் நடத்தி, தலைமுடியை அறுத்து இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அதை காணொளியாக பதிவு செய்துள்ளனர்," என்று கிரேஸ் பானு கூறினார்.

"இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த இரு திருநங்கைகளும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என தெரியாத நிலையில், அந்த இளைஞர்கள் திருநங்கை மீது தாக்குதல் நடத்திய காணொளியைதிருநங்கைகளின் வாட்ஸ்அப் குழுவில் பதிவு செய்து, தாங்கள் அழைக்கும் போது பாலியல் தொழிலுக்கு வர வேண்டும். வர மறுத்தால் இவர்களுக்கு நேர்ந்தது உங்களுக்கும் நடக்கும் என மிரட்டி இருந்தனர்," என்கிறார் கிரேஸ் பானு.

"ஆண், பெண் இரு பாலர் மீது இது போன்ற தாக்குதல் நடந்திருந்தால் காவல்துறை மௌனம் காத்திருக்குமா? திருநங்கை என்பதால் காவல்துறை மௌனமாக உள்ளதா மௌனத்தை காவல்துறை கலைக்க வேண்டும் என என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருநங்கைகள் தாக்குதல் வீடியோவை பதிவு செய்தேன்.

எனது பதிவை பார்த்த தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க், என்னை தொடர்பு கொண்டு இரு திருநங்கைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் இன்று இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திருநங்கைகள் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கிரேஸ்பானு கூறினார்.

சட்டம் தொடர்பான கேள்விகள் என்ன?

ஒரு திருநங்கை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலோ வேறு வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அவர் மீதான வழக்கை போலீசார் எந்த இந்திய தண்டனை சட்டத்தின் சில பிரிவின் கீழ் பதிவு செய்வார்கள் என்பதில் தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

திருநங்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் பாதுகாப்பு சட்டத்தில், திருநங்கைகளுக்கான சமூக புறக்கணிப்பு தடுப்பு நடவடிக்கை மற்றும் வசதிகள் தொடர்பான பிரிவுகள் உள்ளன. இந்திய அரசு மற்றும் சமூக பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் 'கரிமா கிரஹ்' என்ற தங்குமிடம் திட்டத்தை தொடங்க அனுமதி அளித்துள்ளது. திருநங்கைகள், திருநங்கைகளை சமூகத்திலிருந்து மீட்க, பாதுகாக்க மற்றும் மறுவாழ்வு அளிக்க புறக்கணிப்பு, திருநங்கைகளின் கீழ் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019, பிரிவு 8 (4). திருநங்கைகள் உரிமைகள் சங்கம் - சென்னை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த நல வாரிய அலுவல்சாரா பிரதிநிதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாடு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அந்த நல வாரியம் கோவில்பட்டி போன்ற திருநங்கைகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எத்தகைய பங்களிப்பை வழங்குவர் என்பது சட்டத்தில் தெளிவாக இல்லை.

திருநங்கைகள் மீதான தாக்குதல் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020இல் பதிவு செய்துள்ள தகவலின்படி, திருநங்கைகளாக இருந்த 236 பேர் அல்லது குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என 0.006% உள்ளனர்.

பல வழக்குகளில் திருநங்கைகளாக பாதிக்கப்பட்டவர்கள், தங்களை அந்த பாலினமாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். அந்த காரணத்துக்காகவே அவர்கள் மீது திருநங்கை பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் காவல்துறைக்கு இருந்ததாக திருநங்கைகள் நலனுக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் திருநங்கைகள் நல வாரியம்

தமிழ்நாட்டில் முதன் முதலாக திருநங்கைகள் நல வாரியம், 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக கருணாநிதி இருந்தபோது அமைக்கப்பட்டது.

இந்த நல வாரியத்தின் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், துறையின் முதன்மைச் செயலாளா் துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநா் உறுப்பினா்-செயலாளராகவும் உள்ளனா்.

மேலும், அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அலுவல் சாா் உறுப்பினா்களாகவும், திருநங்கைகள் பிரதிநிதிகள் அலுவல் சாரா உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனா். அலுவல் சாரா உறுப்பினா்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள்.

திருநங்கைகள் நல வாரியத்துக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஏ.ரியா, தூத்துக்குடி மாவட்டம் கீழ அலங்காரத்திட்டு டி.பியூட்டி, சென்னை திருவல்லிக்கேணி ஆா்.அனுஸ்ரீ, செங்கல்பட்டு புக்கத்துரை சத்யஸ்ரீ சா்மிளா, பெரும்பாக்கம் எம்.நிலா, சென்னை மயிலாப்பூா் எம்.ராதா, மதுரை விஸ்வநாதபுரம் பிரியா பாபு, சென்னை சூளைமேடு கே.அருணா, திருச்சி திருவெறும்பூா் பி.மோகனாம்பாள் நாயக், சென்னை அமைந்தகரை எஸ்.சுதா, சென்னை ஆதம்பாக்கம் கே.அருண் காா்த்திக், தேனி பொன்னாம்பாள்பட்டி செல்வம் முனியாண்டி ஆகிய திருநங்கைகள் அலுவல் சாரா உறுப்பினா்களாக உள்ளனர்.

இந்த வாரியத்தில் பெண் ஒருவா் நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை பல்லவாகாா்டன் பகுதியைச் சோ்ந்த வித்யா தினகரன் 13-ஆவது உறுப்பினராக இருக்கிறார்.

வாரியத்தின் வேலை என்ன?

சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்ளும் திருநங்கைகள் நலனில் அக்கறை கொண்டு வாரியத்தின் மூலமாக அவா்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வகை செய்யப்பட்டு வருகிறது.

கண்ணியத்துடன் சமுதாயத்தில் பங்கேற்கும் வகையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்புகள், சொந்தத் தொழில் தொடங்க மானியம், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம், கரோனா கால நிவாரண நிதி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல்வேறு நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டங்களை ஒருங்கிணைக்கவும், உரிய முறையில் கண்காணிக்கும் பணிகளையும் நல வாரியம் செய்து வருகிறது.

ஆனால், திருநங்கைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த வாரியம் அவர்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது வாரியத்தின் பணிகளில் தெளிவுபடுத்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: