சென்னை புத்தக கண்காட்சியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்பாளர் திருநங்கை ஜென்சி – யார் இவர்?

    • எழுதியவர், ஆ. லட்சுமி காந்த் பாரதி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் திருநங்கை ஜென்சி என்பவர் அறிவிப்பாளராக செயல்பட்டு புத்தக கண்காட்சிக்கு வரக்கூடிய வாசகர்களுக்கு தேவையான தகவல்களை அவ்வப்போது அறிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் பின்னணி என்ன? அறிவிப்பாளராக பிபிசி தமிழ் அவருடன் பேசியதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

என்னுடைய சொந்த ஊர் திருத்தணி பக்கம் உள்ள ஒரு சிறிய கிராமம். சிறு வயதில் நான் திருநங்கையாக உணர்ந்தபோது என்னை வீட்டில் ஏற்க மறுத்தார்கள். மேலும் திருநங்கையாக உள்ளவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்று எனக்கு தெரியும். அதனால் ஏற்பட்ட பயத்தால், நான் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. அதனால் சிறுவயது முதலே நான் பேராசிரியராக ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

தற்போது நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளேன். நான் படித்து வரும் கல்லூரியில் நானே முதல் திருநங்கை ஆராய்ச்சி மாணவர். இந்த இடத்திற்கு பல போராட்டங்களைக் கடந்து தான் வந்தேன். என்னைப் போன்று எங்கள் சமூகத்தில் மற்றவர்கள் அவ்வளவு எளிதாக வரக்கூடிய சூழல் இல்லை என்று கருதுகிறேன்.

அறிவிப்பாளர் ஜென்சி ஆக மாறியது எப்படி?

சின்ன வயதில் இருந்தே தமிழ் மீது எனக்கு அதிக ஆர்வம். நான் பேசும் போது உனது தமிழ் உச்சரிப்பு நன்றாகவுள்ளது என்று பலரும் பாராட்டுவார்கள். அந்த பாராட்டுதான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மற்றும் பள்ளிகளில் பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசை வென்றது உண்டு.

பிறகு நாளடைவில் வானொலி நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. என்னுடைய கல்லூரி காலத்தில் புத்தகக் கண்காட்சியில் வாசிப்பாளராக பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கடந்த 7 வருடங்களாக நான் புத்தகக் கண்காட்சியில் அறிவிப்பாளராக இருந்து வருகிறேன்.

நான் அறிவிப்பாளராக தொடர்வதற்கு இன்னொரு முக்கிய காரணம் புத்தக கண்காட்சிக்கு வரக்கூடிய வாசகர்கள்தான். பல வாசகர்கள் நேரடியாக என்னிடம் வந்து என்னை பாராட்டியது உண்டு. இந்த பாராட்டுதான் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. திருநங்கையாக நான் இருந்த போதிலும் என் குரல் எனக்கு ஒரு அங்கீகாரத்தை இந்த சமுதாயத்தில் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தகட்ட பயணம்?

என்னைப்போல் திருநங்கை சமூகப் பின்னணி கொண்டவர்களுக்கு கல்வி மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். எங்கள் சமூகம் முன்னேறுவதற்கு கல்வி மட்டும்தான் ஒரே வழி. இந்த இடத்திற்கு, பல போராட்டங்களைக் கடந்து தான் வந்தேன்.

படிக்கும் போதே படிப்புக்கு தேவையான நிதி உதவி பலரால் வழங்கப்பட்டதன் மூலம் உயர்கல்வி வரை முடித்தேன். என்னைப் போன்று எங்கள் சமூகத்தில் மற்றவர்கள் அவ்வளவு எளிதாக வரக்கூடிய சூழல் இல்லை என்று கருதுகிறேன்.

என் ஆராய்ச்சிப் படிப்பு முடிய உள்ள நிலையில் பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியருக்கான நேர்காணலில் பங்கேற்பது உண்டு. நான் நேர்காணலுக்கு செல்லக்கூடிய பல கல்லூரிகளில் என்னை வகுப்பு எடுக்க சொல்வதுண்டு.

அப்படி எடுக்கும்போது அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் நான் எடுக்கும் வகுப்பு முறையை பாராட்டுகிறார்கள். ஆனால் இறுதியில், திருநங்கை ஒருவரை இந்தக் கல்லூரியில் பேராசிரியராக நியமிப்பது கடினமானது. அதற்கான விழிப்புணர்வு இல்லை என்று என்னை நிராகரிக்கிறார்கள்.

பேராசிரியர் ஆவதற்கான உரிய தகுதியை பெரும் பட்சத்தில் இப்படியான நிராகரிப்பு என்பது இந்த சமூகத்துக்கான பின்னடைவாக நான் பார்க்கிறேன். முன்பைவிட தற்போது பல திருநங்கைகள் பலதுறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் சூழலிலும், எங்களுக்கான அங்கீகாரத்தை போராடி பெற வேண்டிய நிலைதான் உள்ளது. இது மிகவும் வேதனையாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: