தமிழ் சினிமா படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகே விமர்சனம்: திரையுலகிற்குப் பலனளிக்குமா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகே விமர்சனங்களை வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது திரையுலகிற்கு எந்த அளவுக்குப் பலனளிக்கும்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது. சங்கத் தலைவர் என். ராமசாமி, துணைத் தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த பொதுக்குழுவில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் திரைப்பட விமர்சனங்களை படம் வெளியானதிலிருந்து மூன்று நாட்கள் கழித்துதான் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்வதாக நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒரு தீர்மானம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாவதால் அந்தந்த வார ஞாயிற்றுக் கிழமைக்குப் பிறகு விமர்சனங்கள் வெளியானால், அது திரைப்படங்களின் வசூலைப் பாதிக்காது என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தற்போது தமிழில் திரைப்படங்கள் வெளியான மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்குள் விமர்சனங்கள் இணைய இதழ்களின் வலைத்தளங்களில் வெளியாகிவிடுகின்றன. இது தவிர, அடுத்த சில மணிநேரங்களிலேயே யூடியூப் சேனல்களில் விமர்சனங்கள் வெளியாகின்றன.

இது தவிர, முதல் காட்சி முடிந்து வெளியில் வரும் ரசிகர்களிடம், திரைப்படம் குறித்த கருத்துகளைக் கேட்டும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. தனிநபர்களும் தங்களது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே, படம் எப்படியிருக்கின்றது என்ற கருத்தை வெளியிட்டுவிடுகின்றனர்.

"இதுபோல விமர்சனங்கள் வெளியாவது திரைப்படத் தொழிலையே அழித்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். கோடிக் கணக்கான பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், முதல் காட்சி முடிந்த உடனேயே இதுபோல விமர்சனங்கள் வெளியாவது, படத்தின் வசூலைக் கடுமையாகப் பாதிக்கிறது" என பிபிசியிடம் தெரிவித்தார் தமிழ்நாடு தயாரிப்பாளர் கவுன்சிலின் துணைத் தலைவரான எஸ். கதிரேசன்.

முன்பெல்லாம் சினிமா பத்திரிகையாளர்கள் யார் என்று துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். இப்போதெல்லாம் யார், யாரோ விமர்சனம் செய்கிறார்கள். யார் பத்திரிகையாளர்கள், யார் பத்திரிகையாளர் அல்லாதவர்கள் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிறார் அவர்.

"முன்பெல்லாம் படம் வெளியானால் எப்படிப் படமாக இருந்தாலும் முதல் மூன்று நாட்கள் ஓடிவிடும். திங்கட்கிழமைக்குப் பிறகுதான், சுமாரான படமாக இருந்தால் வசூல் குறைய ஆரம்பிக்கும். ஆனால், இப்போது அதிகாலை நான்கு மணி காட்சியைப் பார்த்துவிட்டுவந்து விமர்சனம் எழுதுவதால், மதியக் காட்சியிலேயே வசூல் குறைந்துவிடுகிறது. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக இந்தப் போக்கு வெகுவாக அதிகரித்துவிட்டது. நாங்கள் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடவில்லை. ஆனால், விமர்சனங்களை மூன்று நாட்கள் கழித்து வெளியிட வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறோம்" என்கிறார் கதிரேசன்.

இதுதவிர, திரையரங்குகளில் படம் பார்த்த பிறகு வெளிவரும் ரசிகர்களின் கருத்துகளைப் பதிவுசெய்ய வரும் கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஆனால், இனிமேல் இந்தப் போக்கைத் தவிர்க்க முடியாது என்கிறார் திரை விமர்சகரான பிஸ்மி. "இது புதிய போக்குமில்லை. முதலில் அச்சிதழ்கள் இருக்கும்போதும் சில நாட்கள் கழித்து விமர்சனங்களை வெளியிடும்படி கேட்டார்கள். பிறகு இணைய இதழ்கள் வந்த பிறகு, இதே கோரிக்கையை வைத்தார்கள். இப்போது யூடியூப் காலம். இப்போதும் இதே கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால், இனி இதையெல்லாம் தவிர்க்க முடியாது" என்கிறார் பிஸ்மி.

தவிர, இதையெல்லாம் ஆரம்பித்து வைத்ததே தயாரிப்பாளர்கள்தான் என்கிறார் பிஸ்மி. "சில ஆண்டுகளுக்கு முன்பாக, முதல் நாள் முதல் காட்சிகளுக்கு குறிப்பிட்ட சில திரையரங்குகளுக்கு தங்கள் ஆட்களையே படம் பார்க்க வைத்து, தாங்களே கேமராக்களை அனுப்பி அவர்களிடம் பாசிட்டிவான கருத்துகளைப் பெற்று அதனை இவர்களே எடிட் செய்து, சில யூடியூப் சேனல்களில் வெளியிட்டார். அதற்காக சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டது. முதல் நாள் முதல் காட்சி முடிந்துவரும் ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்களை நிறையப் பேர் பார்க்கிறார்கள் என்றவுடன், யூடியூப் சேனல்களே நேரடியாக களத்தில் இறங்கினார்கள். ஒரு திரையரங்கில் அல்லாமல், பல திரையரங்குகளில் ரசிகர்களின் குரல்களைப் பதிவுசெய்தார்கள். இதனால், உண்மையான விமர்சனம் வெளிவர ஆரம்பித்தது. படங்கள் நன்றாக இல்லாவிட்டால், எதிர்மறை விமர்சனங்களும் குவிய ஆரம்பித்தது. அவர்கள் ஆரம்பித்தது, அவர்களுக்கே வினையாகிவிட்டது" என்கிறார் பிஸ்மி.

உண்மையான பத்திரிகையாளர்கள் யார் என்பதே தெரியவில்லை என்று சொல்லும் தயாரிப்பாளர்கள், யூடியூபில் பிரபலமாக இருக்கும் திரை விமர்சகர்களை நேரில் சென்று பார்க்கிறார்கள். பிறகு எப்படி நிலைமை மாறும் எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் வெளிவந்த பல படங்கள், முதல் நாளிலேயே வெளியான எதிர்மறை விமர்சனங்களால், பெரும் தோல்வியைச் சந்தித்தன. பெரும் முதலீட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் மூன்றாவது, நான்காவது காட்சிகளில் இருந்தே கூட்டம் குறைவது, தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.

சினிமா விமர்சனங்களை வெளியிடும் யு டியூப் சேனல்கள் இந்த வேண்டுகோள்களுக்கு செவிமெடுத்தாலும், சாதாரண ரசிகர்கள் திரைப்பட அரங்கிலிருந்தே சமூக வலைத்தளங்களில் வெளியிடும் விமர்சனங்களை என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் இருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: