தீபாவளி ரிலீஸ்: சர்தார், பிரின்ஸ் சினிமா படங்கள் முன்பதிவில் சுணக்கம்; பொன்னியின் செல்வன் காரணமா?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்த தீபாவளி தினத்தன்று இரண்டு திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்தப் படங்களுக்கான முன்பதிவில் பெரிய உற்சாகமில்லை. என்ன காரணம்?

இந்த தீபாவளி தினம் அக்டோபர் 24ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், தீபாவளிக்கான திரைப்படங்கள் அக்டோபர் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்றே வெளியாகின்றன.

செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த ஆண்டு படங்கள் வெளியாகினறன.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா நடித்த உளவு - த்ரில்லரான 'சர்தார்' படமும் கே.வி. அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா நடித்த 'பிரின்ஸ்' திரைப்படமும் வெளியாகின்றன. இது தவிர 'பிளாக் ஆடம்' என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகிறது.

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தைப் பொறுத்தவரை, வெளியாகி இருபது நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும்கூட பல திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை வார இறுதியிலும் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, நல்ல திரை அனுபவத்தைத் தரக்கூடிய திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை காட்சிகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

ஆனால், தீபாவளிக்கென்றே பிரத்யேகமாக வெளியாகும் 'சர்தார்', 'பிரின்ஸ்' படங்களுக்கான இருக்கைகள் மிக மெதுவாகவே நிரம்பிவருகின்றன. 'பிரின்ஸ்' திரைப்படத்தைப் பொறுத்தவரை அதிகாலை ஐந்து மணிக் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. 'சர்தார்' படத்தைப் பொறுத்தவரை காலை எட்டு மணி முதல் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இருந்தபோதும், இந்தப் படங்களுக்கான முன்பதிவில் பெரிய சுறுசுறுப்பு இல்லை. தீபாளிக்கு முந்தைய தினமான ஞாயிற்றுக் கிழமையன்று பல திரையரங்குகளில் பெரும்பலான காட்சிகள் 'பிரின்ஸ்' திரைப்படத்திற்கு ஓரளவுக்கு புக் ஆகியிருக்கின்றன. சார்தார் படத்தைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சியைத் தவிர்த்த பிற காட்சிகளுக்கு இடங்கள் மிக மெதுவாகவே நிரம்பிவருகின்றன. அதேபோல, இரு திரைப்படங்களுமே வெள்ளி, சனிக்கிழமைகளின் மாலைக் காட்சிகளுக்கு முன்பதிவு சற்று வேகமாக இருக்கிறது.

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தாலும், படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே நடக்கும் முன்பதிவு என்பது, தற்போதைய சூழிலில் மிக முக்கியம். படம் வெளியான பிறகு, எதிர்மறை விமர்சனங்கள் வெளியானால், படத்திற்கான ரசிகர்கள் வருகை மிகவும் குறையும் என்ற நிலையில், பெரிய திரைப்படங்களைப் பொறுத்தவரை, முன் பதிவிலேயே முதல் மூன்று நாட்களை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட்டிவிட விரும்புவார்கள்.

கார்த்தி இதற்கு முன்பாக நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் முந்தைய படமான 'டான்', அதற்கு முன்பு வெளிவந்த 'டாக்டர்' திரைப்படமும் பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம்தான்.

ஆனால், இந்தத் திரைப்படங்கள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இவையெல்லாம் மாறிவிடக்கூடும். உதாரணமாக, 2019ஆம் ஆண்டில் தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் வெளியானது. உடன் வெளியான விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மீதே எல்லோருடைய கவனமும் இருந்த நிலையில், முதல் இரு தினங்களில் இந்தப் படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால், படம் குறித்த நேர்மறை விமர்சனங்கள் வெளியானதும் திரையரங்கில் கூட்டம் அதிகரித்தது. கார்த்தியின் திரை வாழ்க்கையிலேயே மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகவும் இந்தப் படம் அமைந்தது.

சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் பலவும் இதுபோல, படத்தின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டே கூட்டம் அதிகரிப்பது நடந்திருக்கிறது. ஆகவே, இந்த முறையும் அதுபோலவே நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Black Adam திரைப்படத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியாகிறது. ஆங்கிலத்தில் ஐ-மேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் இடங்களில் மட்டும் காட்சிகள் சுறுசுறுப்பாக நிரம்பிவருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: