சர்தார், பிரின்ஸ் : தீபாவளிக்கு வரும் திரைப்படங்கள் - பின்னணி சுவாரஸ்யங்கள்

    • எழுதியவர், கல்யாண்குமார். எம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொரானா பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்திருக்கும் தமிழ் சினிமா, இந்த வருடம் வசூல் ரீதியில் விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற இரண்டு மிகப்பெரிய வெற்றிகளை ருசி பார்த்தது. ஆனாலும் தீபாவளி ரிலீஸ் என்பது காலங்காலமாக நமது சினிமா ரசிகர்கள் கொண்டாடுகிற ஒரு விஷயம்.

தீபாவளி ரிலீசாக வெளியாகும் போட்டி ஹீரோக்களின் படங்கள் எப்படி வரவேற்பைப் பெறுகின்றன என்பது சுவாரசியம் கலந்த எதிர்பார்ப்பு.

எம் ஜி ஆர் - சிவாஜி என்று இருந்த தீபாவளிப் போட்டி, பிறகு ரஜினி - கமல் என்று ஆகி, அடுத்து விஜய்-அஜித் என்று பரிணமித்தது.

இந்த வருட தீபாவளிக்கு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு என இரண்டும் வரும் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்போது அந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இந்த ஆண்டு தீபாவளி போட்டியில் வேறு இரண்டு ஹீரோக்களின் படங்கள் மோதுகின்றன.

ஒன்று கார்த்தி படம். மற்றொன்று சிவகார்த்திகேயன் படம்

கார்த்தி நடித்திருக்கும் சர்தார் படத்தில் அவருக்கு இரட்டை வேடம். எண்பதுகளில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

"அப்போது இந்தியாவிலிருந்து ஒருவரை ஸ்பை (உளவாளி) ஆக பாகிஸ்தானுக்குள் அனுப்ப வேண்டிய கட்டாயம். ராணுவத்திலிருந்து பலரை தேர்வு செய்து, அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து அனுப்புவதாகத் திட்டம்.

கார்த்தி ஒப்புக்கொண்டது ஏன்?

ஆனால் ஒரிஜனல் ராணுவ வீரர்கள் யாருக்குமே நடிப்பு சரியாக வரவில்லை. அதனால் ஒரு நாடக நடிகரையே ஸ்பை ஆக தேர்வு செய்து, அவருக்கு சில மாதம் பயிற்சி கொடுத்து, பின்னர் அவரையே பாகிஸ்தானுக்குள்' அனுப்பி இருக்கிறார்கள். இயக்குநர் பி எஸ் மித்ரன் சொன்ன இந்த ஒரு தீம் எனக்கு மிகவும் பிடித்ததாலேயே இதில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நான் ஹீரோவாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்'' என்றார் கார்த்தி.

சர்தார் படத்தின் டிரைலர் வெளியீட்டை நடிகர் கார்த்தியே துவக்கி வைத்து முதல் பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

சென்னை, வடபழனி, ஃபோரம் மாலில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் முன்பு, அதில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன்னால் ஒரு கலைநிகழ்ச்சியே நடத்தி விட்டார்கள்! சர்தார் படத்தை தமிழ்நாடு முழுதும் சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறது, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ்

இந்தப் படத்தின் வில்லனாக பாலிவுட்டிலிருந்து பிரபல நடிகர் சங்கி பாண்டேவை அறிமுகப்படுத்துகிறார்கள். பிதாமகன் உட்பட பல படங்களில் நடித்திருந்த லைலாவுக்கு இதன் மூலம் ரீ எண்ட்ரி கிடைத்திருக்கிறது. ரா‌ஷி கண்ணா ஹீரோயின். "விஷால் நடிப்பில் நான் இயக்கிய இரும்புத் திரை படத்தை விடவும் ஆக்‌ஷன் கலந்த த்ரில் படமாக சர்கார் இருக்கும்'' என்று உறுதி அளிக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பி எஸ் மித்ரன்.

"கொரானாவுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், பல்வேறு தடைகளைத் தாண்டி தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் நான் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்கிறார் இதன் தயாரிப்பாளரான எஸ். லஷ்மண் குமார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஐந்து தமிழ்ப் படங்களை தயாரிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கிறார் இவர்.

சிவகார்த்திகேயன் தரும் உத்தரவாதம்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ப்ரின்ஸ் படம் முழுநீள காமெடிப் படமாக தயாராகி இருக்கிறது. ''குடும்பத்தோடு வரும் ரசிகர்களுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன்'' என்கிறார் சிவகார்த்திகேயன். ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் ஹீரோ, அதே பள்ளிக்கு பிரிட்டனில் இருந்து இங்கீலீஸ் டீச்சராக வரும் ஹீரோயினை பல எதிர்ப்புகளை சமாளித்து காதலித்து கரம் பிடிக்கும் கதை.

இயக்குநர் அனுதீப் தன் வித்தியாசமான திரைக்கதை வசனத்தால் இரண்டு மணி நேரம் தூள் கிளம்பி இருக்கிறாராம். இவரது 'ஜதி ரத்னாலு' என்ற படம் ஆந்திராவில் வணிக வெற்றி பெற்று விருதுகளையும் வென்றிருக்கிறது. ''அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அவர் இயக்கத்தில் ப்ரின்ஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்'' என்கிறார் சிவகார்த்திகேயன்.

இதில் ஹீரோயினாக நடிக்க சுமார் 150 வெளிநாட்டுப் அழகிகளைப் பார்த்துவிட்டு கடைசியாக யுக்ரேன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மரியாவை தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர். ரஷ்யா-யுக்ரேன் போர் தீவிரத்தால் அங்குள்ள ஏர்போர்ட்கள் மூடப்படுவதற்கு முதல்நாள் அவர் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார்.

தன் அப்பா கேரக்டரில் நடிக்க சத்யராஜ்தான் பொருத்தமானவாராக இருப்பார் என்று சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார். உடனே பதறிப் போன இயக்குநர் அனுதீப், "அய்யோ அவர் பாகுபலியில் கட்டப்பாவா சீரியஸா நடித்திருந்தாரே அவர் எப்படி இந்த காமெடி அப்பாவுக்குப் பொருந்துவார்" என்று கேட்டிருக்கிறார். சத்யராஜ் கூட்டணியில் வெளிவந்து வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையும் கவுண்டமணி, மணிவண்ணன் இருவரோடும் அவர் அடித்திருக்கும் கூத்துகளையெல்லாம் சொன்னதும்தான் இயக்குநர் ஒப்புக் கொண்டாராம்.

650 திரையரங்குகளில் வெளியீடு

ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகி, தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தீபாவளி ரிலீஸாக வரும் இந்தப் படத்தின் மூலம் ஆந்திராவில் நேரடி தெலுங்குப் படத்தின் ஹீரோவாக அங்கே அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு முன்னர் அவர் நடித்திருந்த டான், டாக்டர் படங்கள் அங்கே டப் செய்யப்பட்டு சுமார் நூறு கோடி வரை வசூல் செய்ததால் அவருக்கு அங்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். "இனி அவர் நடிக்கவிருக்கும் எல்லாப் படங்களுமே இப்படி இருமொழிப் படமாகத்தான் இருக்கும். இதன் மூலம் தயாரிப்பாளர்கள் இரட்டிப்பு லாபம் அடைவார்கள்'' என்கிறார் ப்ரின்ஸ் பட்த்தின் தயாரிப்பாளரான ராம் மோகன் ராவ்.

இதன் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்றிருக்கும் பிரபல விநியோகஸ்தர் அன்புச்செழியன், மதுரை திருச்சி ஏரியாக்களை மட்டும் தான் வைத்துக் கொண்டு மீதமுள்ள அனைத்து ஏரியாக்களையும் ரெட் ஜெயண்டிடம் கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு முழுக்க ப்ரின்ஸ் படம் 650 திரைகளில் வெளியாகிறது.

"இப்போதுள்ள தயாரிப்பாளர்களுக்கு அந்தப் படத்தின் சேட்டிலைட், ஓடிடி உரிமம் மூலம் படத்திற்கு முதலீடு செய்த பணம் கிடைத்து விடுகிறது. தியேட்டர் ரிலீஸ் என்பதும் அவர்களுக்கு கூடுதல் லாபம்தான்'' என்கிறார் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1165 திரைகளில் இந்த இரண்டு தமிழ்ப் படங்கள் பாதிப்பாதியாக பிரித்துக் கொண்டு ரிலீஸ் ஆகின்றன, இவைகளுக்கு இடையே சுமார் ஐம்பது தியேட்டர்களில் ஹாலிவுட் படமான 'பிளாக் ஏடம்' என்ற படமும் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது என்கிறார் அவர்.

தமிழ் சினிமா ரசிகர்கள், இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்தப் படத்திற்கு அதிக ஆதரவு கொடுக்கப் போகிறார்கள் என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரிந்து விடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: