You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதி புருஷ் ட்ரெய்லர் - பிரபாஸ், கீர்த்தி சோனன், சாயிஃப் அலிகான் படத்தில் கிராபிக்ஸ் சரியில்லையா?
சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆதி புருஷ் படத்தின் ட்ரெய்லர் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது. அப்படியென்ன இருக்கிறது இந்த ட்ரெய்லரில்?
ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சோனன், சாயிஃப் அலிகான் ஆகியோர் நடித்த ஆதி புருஷ் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் வெளியாகவிருக்கிறது.
வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் என்றாலும் பாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ராமனின் பெயர் ராகவன் என்றும் ராவணனின் பெயர் லங்கேஷ் என்றும் மாற்றப்பட்டிருக்கின்றன. மற்றபடி, ராமாயணக் கதையே படமாக்கப்பட்டுள்ளது.
இதில் பிரபாஸ் ராகவனாகவும் சாயிஃப் அலி கான் லங்கேஷாகவும் கீர்த்தி சோனன் ஜானகியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ஓம் ராவுத் ஏற்கனவே லோகமான்ய: ஏக் யுக பருஷ், தான்ஹாஜி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
கிட்டத்தட்ட ஐநூறு கோடி ரூபாய் செலவில், இந்தியிலும் தெலுங்கிலும் எடுக்கப்படும் இந்தப் படம், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவிருக்கிறது. 2D, IMAX 3 D ஆகிய வடிவங்களில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.
ஓம் ராவுத் 1992ல் வெளிவந்த ஜப்பானிய் படமான Ramayana: The Legend of Prince Rama படத்தினால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் நவீன முறையில் ராமாயணக் கதையை எடுக்க விரும்பினார். அதன்படி படமும் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று வெளியானது.
அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சிகள்தான் தற்போது இந்தியா முழுவதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கின்றன.
மசாலாப் படங்களில் நடித்த பிரபாஸை வைத்து காமெடி செய்திருப்பதாக சிலர் கேலி செய்துள்ளனர்.
"மிர்சி கிர்சினு எதோ மசாலா படம் பண்ணி நல்லா இருந்தாங்க. அவர கூட்டிட்டு போயி பாகுபலி ஆக்கி இப்ப ஆதிபுருஷ் னு காமெடி பண்ணி வைச்சிருக்காங்க".
பிரபாஸ் நடித்த முந்தைய படங்கள் கடுமையாக விமர்சனத்திற்குள்ளான நிலையில், அதைவிட மோசமான ஒரு படத்தில் அவர் நடித்திருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.
"சாஹோ, ராதே ஷ்யாமையே கொடுமைன்னீங்களே இருங்கடா அதை விடக் கொடூரமா ஒண்ணை இறக்குறேன்..... பிரபாஸ் சவால்... ஆதிபுருஷ்.."
Game of Thrones படத்தைக் காப்பியடித்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
"ஆதிபுருஷ் #GameOfThrones தொடரின் பரிதாபமான காப்பி என நான் மட்டும்தான் நினைக்கிறேனா, இல்லை நீங்களும் உணர்கிறீர்களா? இந்தப் பாத்திரங்கள் நிச்சயமாக பாரதத்தைச் சார்ந்தவை அல்ல. கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் சில வீடியோ கேம்களில் வரும் பாத்திரங்களின் பெயர்களைச் சற்று மாற்றியிருக்கிறார்கள்," என்று கூறி, இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டுமெனக் கூறியுள்ளனர்.
வேறு சிலர் படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகள் மிக மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
"ஓம் ராவுத் இன்னும் ஒரு வருடம் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த VFXஐயும் திரும்பச் செய்ய வேண்டும். முடிந்தால் சாயிஃப் அலிகானை மாற்றிவிட்டு, வேறு நடிகர்களை ராவணனாக நடிக்க வைக்கலாம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர் இலங்கையைச் சேர்ந்த ராட்சசனாகத் தெரியவில்லை. முகலாயர் மாதிரி இருக்கிறார். சீதை எப்படி ராவணனைவிட உயரமாக இருக்க முடியும்?" எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் இந்தப் படத்தில் ஆட்சேபிக்கத்தக்க காட்சிகள் இருப்பதாக மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். "இந்த டீஸரில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருக்கின்றன. ஹனுமான் தோலால் ஆன ஆடைகளை அணிந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இம்மாதிரியான காட்சிகள், மத உணர்வுகளைப் புண்படுத்துகின்றன. இம்மாதிரி காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளர் ஓம் ராவுத்திற்கு எழுதியிருக்கிறேன். அவர் நீக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியிருக்கிறார்.
பா.ஜ.கவைச் சேர்ந்த திரைக்கலைஞர் மாளவிகா அவினாஷ் போன்றவர்களும் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"இலங்கையைச் சேர்ந்த ராவணன் ஒரு சிவ பக்தியுள்ள பிராமணன். 64 கலைகளும் அவனுக்குத் தெரியும். வைகுண்டத்தின் காவலனாக இருந்த ஜெயன்தான் ஒரு சாபத்தினால் ராவணனான பிறக்கிறான். இது (இந்தப் படத்தில் காட்டப்படும் ராவணனின் உருவம்) ஒரு துருக்கிய கொடுமைக்காரனாக இருக்கலாம். ஆனால், ராவணன் இல்லை. ராமாயணத்தையும் வரலாற்றையும் திரிப்பை பாலிவுட் நிறுத்திக்கொள்ளவேண்டும். என்.டி. ராமாராவ் என்ற மகத்தான மனிதரைப் பற்றித் தெரியுமா?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார் மாளவிகா.
அகில இந்திய இந்து மகாசபையின் தலைவர் சக்கரபாணியும் இந்தப் படத்தில் ராவணன் காட்டப்பட்டிருக்கும் விதத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுமென சில இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சமீப காலமாக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு எதிராக, அவற்றைப் புறக்கணிக்க வேண்டுமென்ற பிரசாரம் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தையும் புறக்கணிக்க வேண்டுமென சிலர் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். #BoycottAdipurush என்ற ஹாஷ்டாக் மூலம் இதற்கான ட்விட்டர் பதிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
இத்தனைக்கும் படத்தின் இயக்குநர் ஓம் ராவுத், தான்ஹாஜி போன்ற படங்களை இந்துததுவக் கருத்தியலோடு எடுத்ததாக விமர்சிக்கப்பட்டவர். ஆனால், அவருடைய ஆதி புருஷ் இந்துத்துவத் தொண்டர்களாலேயே கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்