அஜித், விஜய் ரசிகர்கள்: துணிவு - வாரிசு படங்களை வைத்து காவிய மோதலை தொடங்குவார்களா?

அஜித் நடிக்கும் துணிவு படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருப்பதோடு, ட்விட்டரிலும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் திரைப்படம் இது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கும் நிலையில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானபோது, #துணிவு என்ற ஹாஷ்டாகை அஜித் ரசிகர்கள் இரண்டு நாட்களுக்கு ட்ரெண்ட் செய்தனர். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், மதுரையில் இருந்த அஜீத் ரசிகர்கள் இப்போதே போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்தனர். ட்விட்டரில் #ThunivuPongal2023 என்ற ஹாஷ்டாகையும் ட்ரெண்ட் செய்தனர்.

அதேபோல, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருப்பதால், அந்தப் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் தவிர, பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 25ஆம் தேதி துவங்கும் நிலையில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களுமே மிச்சமிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும், பிரமாண்டமான வாரிசு பொங்கலுக்கு தயாராகுங்கள் என்றும் பதிவிட்டிருப்பதால், வாரிசு பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் இப்போதே ட்விட்டரில் யுத்ததைத் துவங்கி விட்டனர்.

இது ஒரு காவிய மோதலாக இருக்கும் என பதிவிட்டுள்ளார் மூத்த சினிமா செய்தியாளரான ஸ்ரீதர் பிள்ளை.

மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள், துணிவு வெளியாகும் திரையரங்குகள் என சில திரையரங்குகளின் பெயர்களையும் போஸ்டர் அடித்து ஒட்டி அதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டில்தான் விஜய் நடித்த படமும் அஜித் நடித்த படமும் பொங்கலின்போது ஒரே நேரத்தில் வெளியாகின. விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் 2014 ஜனவரி 9ஆம் தேதியும் அஜித் நடித்த வீரம் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதியும் வெளியானது. இந்த இரு படங்களுமே சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாகதாக அப்போது பேசப்பட்டது. ஆனால், வீரம் படத்தைவிட ஜில்லா படத்தின் தயாரிப்புச் செலவு அதிகம் என்பதால், வீரம் படத்திற்கே லாபம் அதிகம் என அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதற்குப் பிறகு, அஜித் நடித்த படமும் விஜய் நடித்த படமும் ஒரே நேரத்தில் வெளியாகவில்லை. சமீப காலமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களை ஒரே நேரத்தில் நகரில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்திருப்பதால், பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது தவிர்க்கப்படுகிறது. மீறி வெளியாகும் பட்சத்தில், பொதுவான ரசிகர்களின் கூட்டம் இரண்டாகப் பிரிவதால், வசூல் குறையும் வாய்ப்பு இருக்கிறது.

பொங்கலுக்கு இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களும் வெளியாவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: