ரட்சன் (The Ghost): நாகார்ஜுனா படத்தின் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: நாகார்ஜுனா, சோனல் சவுஹான், குல் பனாக், அனிகா சுரேந்திரன்; இயக்கம்: பிரவீண் சட்டரு.

பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் துணிந்து The Ghost படத்தை களமிறக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதை இதுதான்: இன்டர்போல் அதிகாரியான விக்ரமிற்கு (நாகார்ஜுனா) ஒரு தொந்தரவுசெய்யும் கடந்த காலம் இருக்கிறது. ஒருவரைக் காப்பாற்ற எவ்விதமான வன்முறையிலும் இறங்கத் தயங்க மாட்டார். இதனால், ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட வேண்டியிருக்கிறது. சில நாட்களுக்குப் பிறகு விக்ரமின் சகோதரி அனுவிடமிருந்து (குல் பனாக்) ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன்னையும் தன் மகள் அதிதியையும் (அனிகா) காப்பாற்ற வேண்டுமெனக் கேட்கிறாள். அதற்குப் பிறகு விக்ரம் என்ன செய்கிறார் என்பதே கதை.

நம்முடைய பொறுமையை மிகவும் சோதிக்கும் படம் என இந்தப் படத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் இணையதளம்.

"இந்தப் படத்தில் பல பிரச்னைகளைத் தொட்டுச் செல்லும் இயக்குநர் எந்தப் பிரச்னையையும் தீவிரமாக ஆராயவில்லை. விக்ரமின் குழந்தைப் பருவம் மிக மோசமானது என்கிறார்கள். யாராவது கட்டளையிட்டால், அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய மாட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விரும்புகிறார். இதில் எந்த விஷயத்திற்குள்ளும் தீவிரமாகச் செல்லாமல், கார்ப்பரேட் அரசியலில் கவனம் செலுத்தியிருக்கிறார். அதிலும் புதிதாக ஏதும் இல்லை.

விக்ரமிற்கும் கதாநாயகிக்கும் இடையில் உறவும் வேகவேகமாக உருவானதாகக் காட்டப்படுகிறது. குழந்தை அதிதியை வளர்ப்பதாகக் காட்டப்படும் விதமும் மிக மோசமாக இருக்கிறது. கோவாவில் எடுக்கப்பட்டிருக்கும் பாட்டு தேவையில்லாத ஒன்று.

இதையெல்லாம்விட இந்த படத்தை மிக மோசமாக ஆக்கியிருப்பது சொதப்பலான திரைக்கதைதான். சில தருணங்களைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருந்தால், நன்றாக இருக்குமென நினைக்கும்போது அந்தத் தருணங்கள் வேகமாக முடிந்துவிடுகின்றன. தேவையில்லாத காட்சிகள் மிக நீளமாக வந்துகொண்டிருக்கின்றன. விக்ரம் எப்படி வன்முறையைக் கையாளுவார் என்று காட்டுவதற்குப் பயன்பட்டிருக்கும் ஒரு சண்டைக் காட்சியைத் தவிர பிற சண்டைகள் ஏதும் தனித்துவமாக இல்லை. மார்க் கே ராபினின் பின்னணி இசை மட்டும் பரவாயில்லை.

நாகார்ஜுனாவைப் பொறுத்தவரை சில காட்சிகளில் மோசமாக இருந்தாலும் பெரும்பாலான காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். சோனல் சௌகான் முழு முயற்சி எடுத்து நடித்திருக்கிறார் என்றாலும், நாகார்ஜுனாவுக்குத் துணையாக வந்துபோவதைத் தவிர, அவருக்கு வேறு வேலை ஏதும் இல்லை.

பல தருணங்களில் இந்தப் படம் பொறுமையைச் சோதிக்கிறது. சிறப்பாக எடுத்திருக்க வேண்டிய கதையை மோசமாக்கிவிட்டார்களே என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால், நாகார்ஜுனாவின் ரசிகராக இருந்தால், அவருக்காக மட்டும் இந்தப் படம் பிடிக்கலாம்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இந்தப் படத்தின் கதை கேட்க நன்றாக இருந்தாலும் திரைப்படமாக பார்க்கும்போது படுமோசமாக இருக்கிறது என்கிறது இந்தியா டுடே இணைதளத்தின் விமர்சனம்.

"கதை அரேபியாவிலிருந்து துபாய், துபாயிலிருந்து கோவா, கோவாவிலிருந்து மும்பை, மும்பையிலிருந்து ஊட்டி எனத் தாவுகிறது. இப்படிப் பல இடங்களுக்கு பயணம் செய்தாலும் எந்த இடத்திலும் முத்திரை பதிக்கவில்லை. திடீர் திருப்பம் என்று நினைத்து வைத்திருக்கும் காட்சிகள் எல்லாம் படு சாதாரணமாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது எவ்வித உணர்வும் ஏற்படுவதில்லை.

இந்தப் படம் நிறைய சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். பல சண்டைக் காட்சிகள் சண்டைப் படம் என்பதற்கு நியாயம் செய்யும் வகையில் இருக்கின்றன. சில சண்டைக் காட்சிகள் கோரமாக இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகுந்த வன்முறை நிறைந்த படம் இதுவாகத்தான் இருக்கும்.

படத்தின் உச்சகட்ட காட்சி படு வேடிக்கையாக முடிவடைகிறது. எவ்விதத்திலும் உணர்வுரீதியான தொடர்பை ஏற்படுத்தாமல், கேலிக்குரியதாக அமைந்திருக்கிறது இந்த க்ளைமாக்ஸ்.

சுருக்கமாகப் பார்த்தால், நல்ல அம்சங்களைவிட சொதப்பல்களே அதிகமுள்ள படம் இது. நல்ல திரைக்கதை அமைந்திருந்தால், சிறப்பாக ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியிருக்கும்" என்கிறது இந்தியா டுடே.

இரண்டரை மணி நேரத்திற்கு நமது பொறுமையைச் சோதிக்கும் திரைப்படம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்.

"வேலை பார்க்க மிகச் சிறந்த இடங்களின் பட்டியலில் இன்டர்போல்-உம் ஒன்று என்று தோன்றும் அளவுக்கு அந்த அமைப்பைக் கவர்ச்சிகரமாகக் காட்டுகிறார்கள். இன்டர்போல் அதிகாரி என்றால், கெட்டவர்களைத் துரத்தித் துரத்திக் கொல்வதுதான் வேலை. காலை 9 மணியிலிருந்து ஐந்து மணிவரை இந்த வேலையைப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, ரிலாக்ஸாக அமர்ந்து குடிப்பார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்ற காட்சிகள். அடுத்த நாள் காலையில் எழுந்து, இதே போல வேலை. பிறகு, இன்டர்போல் அதிகாரிகள் தங்களுடன் பணிபுரியும் அழகான அதிகாரியுடன் விலை உயர்ந்த படகுகளில் ஓய்வெடுக்கச் செல்வார்கள் என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தப் படம்.

சகோதரி உதவி கேட்டவுடன் கதாநாயகன் களத்தில் இறங்குகிறார். ஒரு புதுமையான பாணி ஆக்ஷன் த்ரில்லரை எடுக்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டரை மணி நேரத்திற்கு நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள்" என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: