You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ் சினிமா செய்திகள்: வார இறுதியில் என்ன படங்களை பார்க்கலாம்?
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தாக்கம் தொடர்வதால் இந்த வாரமும் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால், வேறு சில படங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம்போல, ஓடிடியில் தொடர்களும், திரையரங்கில் ஏற்கெனவே வெளியான படங்களும் வெளியாகியுள்ளன.
காந்தாரா: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இந்தப் படம் ஏற்கெனவே கன்னடத்தில் பெரும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் நிலையில் தற்போது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 'டப்' செய்யப்பட்டு அக்டோபர் 16இல் வெளியாகிறது. காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் நிலத்துக்காக போராடுவதை தொன்மக் கதைகளின் பின்னணியில் சொல்லும் படம் இது.
ஆற்றல்: விதார்த், ஷிரிதா ராவ், சார்லி, ரமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கே.எல். கண்ணன் இயக்கியிருக்கிறார். தனது தந்தையின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து மகன் பழிவாங்குவதுதான் அடிப்படைக் கதை. அதனை ஒரு கொலை, கொள்ளை த்ரில்லராக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ரிபீட் ஷூ: கல்யாண் இயக்கத்தில் யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்த இந்தப் படம், 'ஷு' ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி த்ரில்லர் திரைப்படம்.
டாக்டர் ஜி: ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெஃபாலி ஷா ஆகியோர் நடித்த இந்தப் படம், மருத்துவக் கல்லூரியைப் பின்னணியாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படம்.
சஞ்சீவன்: வினோத் லோகிதாஸ், திவ்யா துரைசாமி நிடித்திருக்கும் இந்தப் படத்தை மணிசேகர் இயக்கியிருக்கிறார். ஸ்நூக்கர் விளையாட்டில் வெற்றிபெறும் நாயகன், நண்பர்களுடன் ஏற்காடு செல்லும்போது நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
Ends This Halloween: Halloween, Halloween Kills படங்களை இயக்கிய டேவிட் கார்டன் க்ரீனின் அடுத்த படம். ஹாலோவீன் வரிசை திரைப்படங்களில் மூன்றாவது மற்றும் கடைசி திரைப்படம் இது.
வரால் (மலையாளம்): சுரேஷ் கிருஷ்ணா, மாதுரி பிரகான்ஷா, அனூப் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கும் படம். 2024 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடக்கிறது கதை. பத்தாண்டுகளாக முதல்வராக அச்சுதன் நாயர் இருந்துவிட்ட நிலையில், டேவிட் ஜான் மேடையில் என்பவரை முதல்வர் பதவிக்கு அனுப்புகிறது தேசியக் கட்சி. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
முகமறியான்: கிரண்குமார், காயத்ரி, திலீப் குமார், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் நடித்த படம். பெண்களத் தேடித் தேடிக் கொலைசெய்யும் ஒரு சைகோ கொலைகாரனைப் பற்றிய படம்.
Code Name Tiranga: பரினீதி சோப்ரா, ஹார்தி சாந்து, ஷரத் கேல்கர், ஷெஃபாலி ஷா ஆகியோர் நடித்த இந்தப் படம், ஒரு ரா ஏஜென்ட் பற்றிய உளவு த்ரில்லர்.
ஓடிடிகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்ட பல படங்கள் இந்த வாரம் வெளியாகின்றன.
சிம்புவின் "வெந்து தணிந்தது காடு" பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கிறது. அதர்வா நடித்த Trigger ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Do Barra நெட்ஃப்ளிக்சில் வெளியாகியுள்ளது.
தெலுங்குப் படமான Nenu Meeku Baaga Kavalsinavaadini ஆஹாவில் வெளியாகியுள்ளது. வைபவ் நடித்த பபூன் நெட்ஃப்ளிக்சிலும் மலையாளப் படமான பல்து ஜான்வர் டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும் வெளியாகியுள்ளது.
லிமிட்டட் தொடரான The Playlist, Mismatched Season - 2 ஆகியவை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்