பாண்டியன் ஸ்டோர்ஸின் அடுத்த 'முல்லை' யார்?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி அந்தத் தொடரிலிருந்து விலகியிருக்கும் நிலையில், அடுத்த முல்லை யார் என்ற கேள்வி விவாதிக்கப்படுகிறது.

விஜய் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்தத் தொடர். ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவியா, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சகோதரர்கள் நான்கு பேர் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். தனது கணவரின் தம்பிகளை தன் குழந்தைகள் போல கவனிக்கிறார். இந்த நிலையில், இந்தக் குடும்பத்திற்கு மீனா, முல்லை என மேலும் இரண்டு மருமகள்கள் வருகிறார்கள். குடும்பத்தின் அமைதி நீடிக்கிறதா என்பதுதான் இந்தத் தொடரின் அடிப்படையான கதை.

இப்போது கதிர் - முல்லை ஜோடி குடும்பத்திலிருந்து தனியாகப் பிரிந்து ஹோட்டல் ஒன்றை நடத்திவந்தனர். அந்த ஹோட்டல் சரியாக ஓடாத நிலையில் என்ன செய்யலாம் என யோசித்து வருகின்றனர்.

இது மிக வெற்றிகரமான தொடராக அமைந்ததால், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இந்தத் தொடரில் முக்கியப் பாத்திரங்களில் ஒன்றாக உள்ளது முல்லையின் பாத்திரம். அந்தப் பாத்திரத்தில் சித்ரா நடித்துவந்தார். இவரையும் இவருக்கு ஜோடியாக நடித்த கதிரையும் பார்ப்பதற்காகவே பலரும் இந்தத் தொடரைப் பார்த்தனர். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு டிசம்பரில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.

இதனால், முல்லையின் பாத்திரத்தில் நடிக்க காவ்யா அறிவுமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் அதற்கு முன்பாக பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோவின் தங்கையாக நடித்துவந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவர் நடிக்க ஆரம்பித்த புதிதில், இவரது நடிப்பு குறித்து ரசிகர்கள் விமர்சித்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவர் முல்லையாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இந்த நிலையில்தான் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார். இரு நாட்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்ட அவர், "14.09.2022 பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் முல்லையின் கடைசி நாள். இந்த அழகான பயணத்திற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.

அவர் விரைவில் திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்துவந்த லாவண்யா, முல்லையின் பாத்திரத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: