'விக்ரம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு: "தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை!"

    • எழுதியவர், ச. ஆனந்தப்ரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'மாஸ்டர்' படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய திரைப்படம் 'விக்ரம்'. வருகிற ஜூன் 3ம் தேதி அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இதை தயாரிக்கிறது. அனிருத் இசையில் படத்தின் முதல் பாடலான 'பத்தல பத்தல' கடந்த மே11ம் தேதி வெளியானது. கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற அதே சமயம் அதன் வரிகளுக்காக சர்ச்சையும் ஆனது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மிக பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (15.05.2022) நடைபெற்றது.

நிகழ்வின் முக்கிய தருணங்கள் இதோ:

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய்சேதுபதி, சிலம்பரசன், நரேன், உதயநிதி, இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. சாண்டி மாஸ்டரின் நடனத்தோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

கமலுடன் இணையும் பா.ரஞ்சித்

முதலில் இயக்குநர் ரஞ்சித் பேசினார். இளம் இயக்குநர்களோடு கலம்ஹாசன் இணைந்து பணியாற்றுவதை முக்கியமானதாக பார்ப்பதாக சொன்னவர், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முந்தைய படங்களில் தன்னை நிரூபித்து இருப்பதாக கூறினார். மேலும், "தமிழ் சினிமாவில் கண்டெண்ட் இல்லையா என்ற கேள்வியை சமீபகாலத்தில் அதிகம் எதிர்கொண்டேன். நிச்சயம் அப்படி இல்லை. நல்ல கதைக்களங்களுக்கு தமிழ் சினிமா முன்னோடி. 'விக்ரம்' அதை நிச்சயம் மறுபடியும் நிரூபிக்கும்" என்றார்.

இதுமட்டுமல்லாமல் விரைவில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதையும் மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கதைக்களம் குறித்து கேட்ட போது, "கமல் சாரை வைத்து மதுரை களத்தில் ஒரு படம் இயக்க ஆசை. மதுரை வாழ்க்கையை எடுக்க எனக்கு ரொம்ப நாள் ஆசை. மதுரையில் மடித்து கட்டிய வேட்டி சட்டை மட்டுமல்ல, அவர் படத்தில் கோட் சூட் கூட போடலாம்" என்றவர் சிலம்பரசனுடனும் நிறைய அரசியல் குறித்தான பேச்சுகள் நிறைய நடக்கும், அவருடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் நரேன் பேசும்போது, "நான் சினிமாவில் நடிக்க வர காரணமே கமல்ஹாசன் படங்கள் தான். வீட்டில் சண்டை போட்டு, சென்னை வந்து வாய்ப்பு தேடி, கமலின் ஆழ்வார்ப்பேட்டை ஏரியாவுக்குள் தான் வசித்து வந்தேன். அப்படியான எனக்கு அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன் என்றால் என் மனநிலையை விளக்க முடியவில்லை" என்றார்.

காளிதாஸ் ஜெயராம், இதில் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொன்னார்.

பின்னர் எட்டு மணிக்கு நிகழ்ச்சியில் 'விக்ரம்' படத்தின் ட்ரைய்லர் வெளியானது.

"விரைவில் இணைந்து நடிப்பேன்"

அடுத்ததாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கமல்ஹாசனின் ரசிகன் என்ற ஒரே தகுதியோடு மட்டும் தான் சினிமாவுக்குள் வந்ததாக தனது பேச்சை ஆரம்பித்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் 'விக்ரம்' படத்தோடு தன்னுடைய 'இரவின் நிழல்' திரைப்படமும் திரையிடப்படுவதை தெரிவித்தார்.

மேலும் பேசும்போது, "விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல நடிகர்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அப்படியான நடிகர்களை தான் கமலுக்கும் பிடிக்கும். ஆனால், இன்னும் அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொண்டு விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்.

இதே நேரு உள்விளையாட்டரங்கில் ஜூன் 5ம் தேதி என்னுடைய 'இரவின் நிழல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க இருக்கிறது. 'விக்ரம்' வெற்றி பெற வாழ்த்துகள்" என்று முடித்துக்கொண்டார்.

"கமலை யாரும் மிரட்ட முடியாது"

தமிழகத்தில் 'விக்ரம்' படத்தின் விநியோகஸ்த உரிமையை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட்' வாங்கி இருக்கிறது. விழாவில் பேசிய உதயநிதி, "கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போல தான் இந்த படத்தில் கடைசியில் இணைந்தேன். நிறைய பேர் என்னிடம் கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கி விட்டீர்களா என்று கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த நேரத்தில் அவருடைய ரசிகனாக கமல்ஹானுக்கு ஒரு கோரிக்கை. இப்போது பொது வாழ்க்கைக்கு வந்து விட்டீர்கள். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு படமாவது நடியுங்கள். குறிப்பாக லோகேஷ் போன்ற இளம் இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பு" என்று படத்திற்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

"கமல் இயக்கத்தில் நடிக்க வேண்டும்"

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் பேசும்போது, "கமல் சாருடன் நான் நடிப்பது என் கனவில் கூட நடந்தது இல்லை. நான் பேச ஆரம்பித்ததற்கு பிறகு தான் அவரது பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சில் ஒரு பொறுப்பும் ஆழமும் இருக்கும். மூன்று முறை அவரை நேரில் சந்தித்து பேசிய போது பேச்சில் இருக்கும் அறிவை பகிர்ந்து கொள்ளலாம் என்பார். அதில் நான் அனுபவசாலி என்ற தலைக்கனம் இருக்காது.

அவருடன் சேர்ந்து படப்பிடிப்புக்கு இடையில் அமர்ந்து பேசியதெல்லாம் என் பாக்கியம். 'கமல் 60' நிகழ்ச்சியில் அவருடன் படம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதே போல , உங்களுடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. உங்கள் எழுத்தின் மிக பெரிய ரசிகன் நான். அது நடக்க வேண்டும் என இயற்கையை வேண்டி கொள்கிறேன்" என்றவர் படக்குழுவை குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தவர் படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

"கமல் சாரின் ரசிகனாக லோகேஷின் சம்பவம்"

படத்தின் இசையமைப்பாளரும் நிகழ்ச்சியின் நாயகனுமான அனிருத், 'விக்ரம்' படம் எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம் என்பதை குறிப்பிட்டார். "நான் 11 வருடங்களாக இசையமைத்து வருகிறேன். 'இந்தியன்2' படத்தில் கிடைத்த வாய்ப்பும் முழுமை பெறாமல் போன வருத்தத்தில் இருந்த போது தான், லோகேஷ் இந்த வாய்ப்பு கொடுத்தார்.

'பத்தல பத்தல' பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் அனுப்பி விட்டார். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கின் வரிகளை பார்த்து இதில் பிழை இருக்கிறது என சொல்லி அவரே சரி செய்து உடனே பாடினார்.

'மாஸ்டர்' 50% லோகேஷ் படம். ஆனால், 'விக்ரம்' படம் முழுக்க முழுக்க கமல் சாரின் ரசிகனாக லோகேஷின் சம்பவம். எந்தவொரு இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு படத்தின் வெற்றி குறித்து பேச மாட்டேன். ஆனால், இந்த படம் நிஜமாகவே உலகம் முழுக்க வெற்றி பெறும்" என்றவர், படத்தில் இருந்து 'விக்ரம்' பாடலையும் பாடினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிலம்பரசன் கலந்து கொண்டார். "வாழ்க்கையில் என் அப்பா எனக்கு குரு. திரையில் கமல் தான் எனக்கு குரு. அப்போதெல்லாம் நான் ஐந்து மணிக்கு எழுந்திருக்க மாட்டேன். ஆனால் கமலின் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்னையின் போது அதிகாலையில் எழுந்து அன்று நாள் முழுக்க கமல் சாருடன் இருந்ததை மறக்கவே மாட்டேன். இந்த படத்தின் ட்ரைய்லரை பார்த்து விட்டு சொல்கிறேன். நிச்சயம் படம் வெற்றி பெறும். இத்தனை நடிகர்களை வைத்து படம் இயக்குவது எளிது கிடையாது. லோகேஷ் அதனை செய்திருக்கிறார். விஜய்சேதுபதி என் நண்பர். மலையாளத்தில்பகத் போல தமிழில் விஜய்சேதுபதி.

அனிருத் என் சிறு வயது நண்பன். அனி பாடல்கள் வெற்றி பெற பின்னால் அவருடைய பெரிய உழைப்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் பான் இந்தியா என பேசி கொண்டிருக்கிறார்கள். கமலுடைய 'மருதநாயகம்' பார்த்தால் அந்த பேச்சு வராது என நினைக்கிறேன" என்று முடித்துக்கொண்டார்.

'விக்ரம்' படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் மேடைக்கு வந்த போது தனது படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்து தனது உதவி இயக்குநர் அணியையும் மேடை ஏற்றி அவர்களை குறிப்பிட்டு பாராட்டினார். பகத் பாசிலின் பழகும் எளிமை குறித்து பேசியவர், இந்த படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரத்திற்காக முதன்முறையாக ஒருவர் நடிப்பு சொல்லி கொடுத்ததையும் குறிப்பிட்டார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ், கமல் ரசிகனாக தனது ஆரம்ப காலம் குறித்து பேசினார். "கமல் சார் வீட்டில் என்னுடைய ஆரம்ப காலத்தில் நின்று கைக்காட்டுவர் என்று எதிர்பார்த்து கடவுளை வேண்டி கொண்டேன். ஆனால், இப்போது ஆக்‌ஷன் கட்டே சொல்ல வைத்து விட்டார். அந்த ஆண்டவருக்கும் இந்த ஆண்டவருக்கும் நன்றி. அவரால் தான் நான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். எட்டு ஒன்பது வருடங்கள் சினிமாவில் என் உழைப்பு தான் அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போய் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு தேவைப்பட்ட காட்சி ஒன்றுக்கு 26 புஷ்ஷப்கள் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். படம் வெளியானதும் மேக்கிங் வீடியோவாக முதலில் அதை தான் வெளியிடுவேன். இந்த வயதில் கொரோனாவுக்கு பிறகு கமல் சார் உழைப்பை பார்க்கும் போது நாம் பார்ப்பதெல்லாம் வேலையே இல்லை என்று தான் தோன்றுகிறது. படம் பார்த்து விட்டு கமல் பிடித்திருக்கிறது என சொன்னதும் எனக்கிருந்த ஒரு வருட அழுத்தம் குறைந்தது.

இந்த படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதற்கு நன்றி. ஏன் அந்த நன்றி என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும்" என்றார்.

பிறகு அனிருத் மேடையில் இசையமைக்க 'அன்பே சிவம்' படத்தின் 'யார் சிவம்' பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடினார்.

"தாய் மொழியை விட்டுக் கொடுக்கக் கூடாது"

பிறகு கமல்ஹாசன் "உயிரே உறவே வணக்கம்" என தனது பேச்சை ஆரம்பித்தவர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய படத்தின் விழா நடக்கிறது என்றார். "தமிழ்நாட்டை பொருத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை.

நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டி பிடித்து கேவி கேவி அழுதார். 'எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?' என்று கேட்டார். என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.

நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் வெளியில் எல்லாம் சென்று நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரிதுதான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.

நான் poltical cultrist என்று என்னை குறிப்பிட்டு கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராக தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்று கொள்ள வேண்டும். ஆனால், தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது" என்றார்.

அடுத்து ஓடிடி வளர்ச்சி குறித்து பேசினார். "எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்த போது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்த போது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய் தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார்.

இயக்குநர் ரஞ்சித் உங்கள் எதிர்ப்பார்ப்புக்கான விதையை தூவி விட்டு தான் சென்றிருக்கிறார். நிச்சயம் அது நடக்கும். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். ஏன் நானும் ரஜினியும் திரையில் இருந்தாலும் நண்பர்களாக இல்லையா. இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது" என்று சொன்னவர், அடுத்து லோகேஷ் கனகராஜின் வளர்ச்சி, இந்த படத்தில் அவருடைய இயக்கம் பற்றி பேசினார்.

"என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும்.

விஜய்சேதுபதி நான் 22 வயதில் வேலை செய்தது போல அவர் இப்போது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ அது போல விஜய்சேதுபதி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் 'பத்தல பத்தல' வெற்றி எனக்கே இப்படி கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே பாடி இருக்கிறேன்.

இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்து கொடுத்த சூர்யாவுக்கு நன்றி" என்று படக்குழுவில் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னார். பிறகு மூன்று பாடல்கள், ஒரு டைட்டில் டிராக் என 'விக்ரம்' படத்தின இசை வெளியீட்டோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: