சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' விமர்சனம்: கமர்ஷியல் ஃபார்முலாவில் வென்றதா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் முதல் படைப்பாக இன்று வெளியாகியுள்ளது 'டான்' திரைப்படம். இந்த படத்தின் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். சமுத்திரகனி, எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் குறித்து தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் என்ன சொல்கிறது?

நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்

ஓர் எளிமையான கதையை எவ்வளவு சுவாரஸ்சியமாக எடுத்து செல்லலாம் என்பதை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தெரிந்து வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளது 'இந்தியா டுடே' இணையதளம்.

"இந்த திரைப்படம் அனைவருக்கும் தங்களின் கல்லூரி காலத்தை நினைவுப்படுத்தும் ஒன்றாக இருக்கும். பாட்ஷா, வாலி போன்ற திரைப்படங்களில் இருந்து சில முக்கிய காட்சிகளை மறு உருவாக்கம் செய்திருப்பது ரசிக்க வைக்கிறது.

தனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பெண் கூறிய பிறகு, அவளை பின் தொடர்வது தவறு என ஒரு காட்சி இந்த படத்தில் இடம்பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் இறுதியாக இது நடந்திருக்கிறது.

நல்ல பாடல்கள், உணர்வுப்பூர்வமான காட்சிகள், காமெடி என ஒரு கலவையாக ரசிக்க வைக்கிறது டான்", என்கிறது 'இந்தியா டுடே' .

நோக்கம் சரி - ஆனால்?

"இந்த படத்தின் நோக்கம் சரியே. இயந்திரம் போல இயங்கும் நம் கல்வியின் கட்டமைப்பு குறித்து பேச நினைக்கிறது படம். ஆனால், கமர்ஷியலான திரைக்கதையுடன் யதார்த்ததை பேச முடியாமல் திணறுகிறது.

அங்கயற்கண்ணி கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள் மோகன், சற்றே தைரியமான பெண்ணாக நடித்திருக்கிறார் என்று கூறலாம். ஏனென்றால், ஒரு காட்சியில் தன் தோழியை காப்பாற்றும் அவர், மற்றொரு காட்சியில் தன்னை ஹீரோ காப்பாற்றுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார். கமர்ஷியல் படங்களில், ஹீரோயின், சண்டை காட்சிகள், பாடல்கள் எல்லாம் சற்று தேவையற்றதாகவே தோன்றுகிறது.

சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு நேர்த்தியாக உள்ளது. நண்பன், சந்தோஷ் சுப்ரமணியன் திரைப்படங்களுடன் கொஞ்சம் 'விண்ணைத் தாண்டி வருவாயா" சேர்ந்தால் எப்படி இருக்கும் - அதுதான் டான்", என்று ஆங்கில இணையதளமான 'ஃபர்ஸ்ட் போஸ்ட்' விமர்சித்துள்ளது.

'ஹீரோயிசம் ஓவர் டோஸ்'

"சிவகார்த்தியேனை மட்டும் முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது டான்" என்கிறது தமிழ் இந்துவின் முதல் பார்வை விமர்சனம்.

"படிப்புதான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பதை தீர்க்கமாக நம்பும் தந்தைக்கு, படிப்பைத் தவிர வேறு எதையாவது இலக்காக கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என தேடி அலையும் மகனாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். வேறு வழியில்லாமல் தந்தை சேர்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக இன்ஜினியரிங் படித்துக்கொண்டே வாழ்வின் இலக்கைத் தேடி அலைகிறார் சிவா.

அந்த கல்லூரியில் 'டிசிபிளின் கமிட்டி' தலைவராக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, 'நீ எப்டி டிகிரி வாங்குறன்னு பாத்துட்றேன்' என சவால் விடுக்கிறார். இறுதியில் தன் தந்தையின் விருப்பமான இன்ஜினியரிங்கை சிவகார்த்திகேயன் முடித்தாரா? தான் தேடிய இலக்கை எட்டிப்பிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை" என்கிறது தமிழ் இந்து.

சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப், கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, கல்லூரி சேர்மன் சிவகார்த்திகேயன் பேச்சைக் கேட்பது என நம்ப முடியாத காட்சிகள் திரையிலிருந்து நம்மை அந்நியப்படுத்துகின்றன. படம் முழுக்க சிவகார்த்திகேயனை மையப்படுத்தியே ஹீரோயிசம் ஓவர் டோஸாக இருப்பது அலுப்பைத் தருகிறது என்கிறது தமிழ் இந்து.

"படம் முழுக்க சிவகார்த்திகேயனை மையப்படுத்தியே ஹீரோயிசம் ஓவர் டோஸாக இருப்பது அலுப்பைத் தருகிறது. ஒரு கட்டத்தில் தந்தை குறித்து சிவகார்த்திகேயனும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியும் பாடம் எடுப்பது போல் தோன்றுகிறது.

அனிருத் இசையில் முதல் 'ஜலபுல ஜங்' பாடல் ஜாலி ரகம். 'பிரைவேட் பார்டி' பாடலில் நடனம் கவனிக்க வைக்கிறது என்கிறது அந்த நாளிதழ்.

'வழக்கமான பாணி'

பெரும்பாலான காட்சிகளில், சிவகார்த்திகேயனுக்கும், எஸ் ஜே. சூர்யாவுக்கும் இடையே நடக்கும் போட்டியில்தான், படத்தின் சுவரஸ்சியம் அடங்கி இருக்கிறது என்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் உறுதி படத்தை இறுதிவரை எடுத்துச் செல்கிறது. படத்தின் பல பகுதிகள் வழக்கமான ஃபார்முலாவாக இருந்தாலும் படத்தின் பெரும்பகுதி ரசிக்கும்படியே இருந்தது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் இணையதளம்.

"படத்தின் பெரும் பகுதி கல்லூரியின் டானாக வரும் சக்கரவர்த்திக்கும் (சிவகார்த்திகேயன்) பூமிநாதனுக்கும் (எஸ்.ஜே. சூர்யா) இடையிலான மோதலைச் சுற்றியே படத்தின் பெரும்பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்ஜே சூர்யாவின் சிறப்பான நடிப்பு இந்தப் பகுதியை கலகலப்பாக நகர்த்துகிறது. ஒருவரை ஒருவர் வீழ்த்த மேற்கொள்ளும் முயற்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. டானுக்கும் அங்கயற்கண்ணிக்கும் (பிரியங்கா மோகன்) இடையிலான காட்சிகள் சில சமயங்களில் க்யூட்டாக இருக்கின்றன. சில சமயங்களில் நெளியவைக்கின்றன" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

சில உணர்வுப்பூர்வமான காட்சிகள் ஒட்டாமல் இருக்கிறது. படம் முழுவதும் தன் மகனிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் அப்பா கதாபாத்திரம், கடைசியில் அன்பான கதாபாத்திரமாக மாறுவது அவ்வளவு நம்பும்படியாக இல்லை.

முதல் பாதி இளைஞர்களையும், இரண்டாம் பாதி பெரியவர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. அதை சரியாக கையாளுவதில் வென்று இருக்கிறார் இயக்குநர் சிபி.

வழக்கமான கமர்ஷியல் பாணியில் காமெடி கலந்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இறுதியில், தனது முத்திரையை பதிக்க தவறவில்லை இயக்குநர் என்று ' தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.

கலகலப்பான உணர்ச்சிப்படம்

"ஒரு கலகலப்பான படத்தை எடுக்க வேண்டுமென முடிவெடுத்த பின் கதையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கலகலப்பாக நகர்த்தி, கடைசியில் எமோஷனல் காட்சிகளை உணர்ச்சிக் குவியலாக்கி இந்த டானை, டான் டான் ஆக்கிவிட்டார்கள்" என்கிறது தினமலர் நாளிதழ்.

"சிவகார்த்திகேயனின் நண்பர்களாக பால சரவணன், ஆர்.ஜே. விஜய், ஷிவாங்கி ஆகியோர் படத்தின் கலகலப்புக்குப் பொறுப்பேற்று அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி. எங்கே அட்வைஸ் செய்வாரோ என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு சாதாரண அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். 

சில பல முந்தைய படங்களை சில காட்சிகள் ஞாபகப்படுத்துகின்றன. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தின் பிரகாஷ் ராஜ், நண்பன் படத்தின் சத்யராஜ் கதாபாத்திரங்களின் மறுவடிவமாக சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரங்கள் தெரிகின்றன." என்கிறது தினமலர் நாளிதழ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: