நடிகர் சலீம் கெளஸ்: மணிரத்தினம் படம் முதல் ஷேக்‌ஸ்பியர் நாடகம் வரை

நடிகர் சலீம் கெளஸ் நேற்று காலமானார். மும்பையில் வசித்து வந்த அவருக்கு வயது 70. தமிழ் மற்றும் மலையாளத்தில் மிக சிறந்த நடிகராக கருதப்படும் சலீம் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவரது இறப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் படித்து விட்டு புனே திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயின்ற சலீம் 'சின்னக்கவுண்டர்', 'வெற்றி விழா', மலையாளத்தில் நடிகர் மோகன் லாலுடன் 'தாழ்வாரம்', இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய 'திருடா திருடா', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவருக்கு மேடை நாடகங்களின் மீது தீராத காதல் இருந்தது. மேடை நாடகங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கதாப்பாத்திரங்கள், அவரது வசனங்கள் மீது தீராத காதல் இருக்கும். சலீமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஃபீனிக்ஸ் பிளேயர்ஸ் என்ற நாடக்குழுவை மும்பையில் நடத்தி வந்தவர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அதிகம் இயக்கியுள்ளார்.

கோஜூ ரியு கராத்தே, வர்மக்கலை என பல தற்காப்பு கலைகளை பயின்றவர். இயக்குநர் பரதன் இயக்கத்தில் 'தாழ்வாரம்' என்ற மலையாள படத்தில் ராஜூ என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறந்த நடிப்பை வழங்கி இருந்தார். பாலிவுட்டில் 'ஸ்வர்க் நரக்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அதன் பிறகு 'சக்ரா', ஷாருக்கான், மாதுரி தீட்சித்தின் 'கொய்லா', 'சோல்ஜர்', 'மிஸ்டு கால்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சென்னையை பூர்வீகமாக கொண்ட சலீம் அதிக பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ராமர், கிருஷ்ணர், திப்பு சுல்தான் வேடங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இவரை இந்தியில் நடிகராக ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது 1980களின் பிற்பகுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'சுபாஹ்' என்ற நாடகம் தான். தமிழில் 'ஒரு மனிதனின் நாடகம்' என்ற பெயரில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் ரகுவரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தை தான் சலீம் இந்தியில் ஏற்று நடித்தார். இவரது அந்த கதாப்பாத்திரம் இந்தி ரசிகர்களிடையே பரவலான அறிமுகத்தை கொடுத்தது.

தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு 'வேட்டைக்காரன்' படம் வெளியானது. அதில் வேதநாயகம் வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடித்திருந்தார் சலீம். இதுமட்டுமல்லாது, ஆண்ட்ரியாவின் இனி வெளிவர இருக்கும் 'கா' திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சலீம்.

நேற்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட சலீம் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது மனைவி அனிதா சலீம் வட இந்திய ஊடகங்களில் உறுதி படுத்தி இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சலீமின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :