You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மன்மதலீலை: "கமல்ஹாசன், சிலம்பரசன் இருவரும் என்னை தவிர இந்த கதைக்கு பொருத்தமான தேர்வு!"- நடிகர் அசோக்செல்வன் பேட்டி
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ் சினிமாவில் புதிய கதைக்களங்களை தேடி தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் அசோக்செல்வனும் இணைந்திருக்கிறார். 'ஓ மை கடவுளே', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என இவரது சமீபத்திய படங்கள் கவனம் ஈர்க்கின்றன. 'மாநாடு' படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் 'மன்மதலீலை' படத்தில் இணைந்திருக்கிறார்.
''ஓடிடிக்கு என எடுக்கபட்ட இந்த திரைப்படம் ஏப்ரல் முதல் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. " ஓடிடி வெளியீடு என முன்பு திட்டமிட்டதால் படத்தில் பாடல்கள் எதுவும் வைக்கவில்லை. மற்றபடி கதை நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும்" என உற்சாகம் குறையாமல் பேச ஆரம்பித்தார் அசோக் செல்வன்.
அவருடைய பேட்டியில் இருந்து,
கேள்வி:
'ஓ மை கடவுளே', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என உங்கள் கதை தேர்வில் இருந்து 'மன்மதலீலை' படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என படத்தின் முன்னோட்ட காட்சிகளில் தெரிகிறது. கதை கேட்கும் போது முதலில் என்ன தோன்றியது?
வித்தியாசமான கதைகள் செய்ய ஆசை
பதில்: முதல் லாக்டவுன் முடிந்த நேரம். இயக்குநர் வெங்கட்பிரபு என்னை அழைத்து, 'டேய், பரிசோதனை முயற்சியாக ஒரு படம் பண்ணலாம்ன்னு இருக்கேன். நீ செய்றியா?' என கேட்டார். வெங்கட்பிரபு படங்களுக்கு நான் பெரிய ரசிகன்.
அவருடைய படங்களில் எப்பொழுதுமே எதாவது ஒரு பரிசோதனை முயற்சியை பார்க்கலாம். எனக்கும் வித்தியாசமான கதைகள் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை. இல்லை என்றால் எனக்கே அயர்ச்சியாகி விடும்.
ஒரு நடிகராக எதெல்லாம் முயற்சி செய்ய முடியும் என்பதை நோக்கிதான் இப்போது போய் கொண்டிருக்கிறேன். ஸ்லாப்ஸ்டிக் காமெடி (Slapstick Comedy) இந்த ஜானரில் செய்யலாம்.
மேலும் வெங்கட்பிரபுவுடன் இணைந்து வேலை பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. 'மன்மத லீலை' கதையை கேட்டவுடன் நிறைய சிரித்தேன். எனக்குமே இது புதிதாக இருக்கும்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தின் கதை தீவிரமாக இருக்கும். ஆனால், 'மன்மத லீலை' படம் 100% எண்டர்டெய்ன்மெண்ட். என் தரப்பில் இருந்து வித்தியாசமான முயற்சி". என்கிறார்.
தலைப்பே பாதியை சொல்லிவிடும்
கேள்வி: 'மன்மதலீலை' படத்தின் தலைப்பே நீங்கள் தான் தேர்வு செய்தீர்களாமே?
பதில்:
"ஆமாம். நான் தான் தேர்வு செய்தேன். கடந்த 1976-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஒரிஜினல் 'மன்மத லீலை' படம் மிகவும் பிடிக்கும். அந்த காலக்கட்டத்திற்கு அந்த கதையை, எப்படி அவ்வளவு முற்போக்காக யோசித்து எடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும்.
நான் நடித்திருக்கும் இந்த 'மன்மத லீலை' கதையே கூட திருமணம் தாண்டிய உறவு வைத்துள்ள மன்மதனை பற்றிய கதை தான். படத்தில் இருந்து மக்கள் என்ன மாதிரியான விஷயத்தை எதிர்ப்பார்க்கலாம் என்பதற்கு டைட்டில் மிக முக்கியமான விஷயம்.
படத்தலைப்பே பாதியை சொல்லி விடும். கதைக்கான எதிர்ப்பார்பே என்னை பொறுத்த வரை தலைப்பில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதுதான் தேவையும் கூட. அப்படி தான் இந்த கதையை கேட்டதுமே எனக்கு தலைப்பும் தோன்றியது.
உண்மையில் எனக்கு பழைய 'மன்மத லீலை' படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்பது ஆசை. அப்படி இருக்கும் போது இந்த கதைக்குமே தலைப்பு பொருத்தமாக இருந்தது.
கேள்வி:
இயக்குநர் வெங்கட்பிரபு படங்களின் படப்பிடிப்பு தளங்கள் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். 'மன்மதலீலை'க்கு எப்படி இருந்தது?
உங்களுக்கும் இயக்குநருக்குமான கெமிஸ்ட்ரி குறித்து சொல்லுங்கள்?
பதில்:
சூப்பராக இருந்தது. நாங்கள் இருவருமே படப்பிடிப்பு முடியும் வரை சிரித்து கொண்டே தான் இருப்போம். 'மன்மதலீலை' படத்தை நினைத்தாலே நாங்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
குறிப்பாக ட்ரைய்லரின் கடைசியில் இடம்பெற்றுள்ள நான் பொய் சொல்லி மாட்டி கொள்ளும் காட்சி படமாக்கும் போது மொத்த யூனிட்டுமே சிரித்து கொண்டே தான் இருந்தார்கள்.
மறக்க முடியாத பாராட்டு
கேள்வி: படத்தின் முன்னோட்ட காட்சி பார்த்து விட்டு, திரையுலகில் யார் தந்த பாராட்டு மறக்க முடியாதது?
பதில்:
நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதில் குறிப்பாக அர்ஜூன் சாருடைய பாராட்டு மறக்க முடியாதது. 'மரக்கர்' மலையாள படத்தில் நாங்கள் அண்ணன் தம்பியாக முன்பு நடித்திருந்தோம்.
அந்த சமயத்தில் எல்லாம் அவருக்கு நான் தொலைபேசியில் அழைத்து, 'ஓ மை கடவுளே', 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என என்னுடைய பல படங்களை பார்க்க சொல்லி கேட்டு கொண்டே இருப்பேன். 'பாக்கறேன் தம்பி' என்று சொல்லி கொண்டே இருப்பார். ஆனால் இன்னும் பார்க்கவில்லை.
ஆனால், 'மன்மதலீலை' ட்ரைய்லர் பார்த்து விட்டு அவரே என்னை அழைத்து 'எப்படா ரிலீஸ்?' என கேட்டார். அது எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
கமல் அல்லது சிம்பு
கேள்வி: இந்த கதையில் எதோ ஒரு காரணத்தால நீங்கள் நடிக்க முடியாமல் போகிறது, வேறு ஒருவரை இந்த கதைக்கு பரிந்துரைக்கலாம் என்றால் எந்த நடிகரை தேர்ந்தெடுப்பீர்கள்?
பதில்:
நிச்சயம் கமல் தான். அவரின் மிகப்பெரிய ரசிகன் நான். அதனால், இது போன்ற கதையில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும். கமல் சார் தவிர்த்து சிம்பு நடித்தாலும் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும்.
மீம் கிரியேட்டர்கள் கிரேட்
கேள்வி: மன்மதலீலை' படத்தை ஒட்டி நிறைய மீம்ஸ் எல்லாம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இதை பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
கேள்வி: மீம் கிரியேட்டர்கள் உண்மையாலுமே கிரேட். குறிப்பாக இந்த படத்திற்கு நிறைய மீம்ஸ் எல்லாம் பகிர்ந்து இருந்தார்கள். அதிலும் ஒரு மீமில் பள்ளிக்கூடத்தில் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் எல்லாம், என்னை வரவேற்று, 'வா தம்பி! வந்து என் பக்கத்துல உக்காரு' என அழைப்பது போல இருக்கும். அதெல்லாம் வேற லெவல்.
அடுத்து யாருடன் ?
கேள்வி: நிறைய புதுப்புது ஜானரரில் படங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த கதை தேர்ந்தெடுத்ததாக சொன்னீர்கள். இப்பொழுது தமிழில் சினிமாவில் அப்படி வித்தியாசமான கதைக்களங்களை கையாளும் எந்த இயக்குநருடன் இணைந்து பணியாற்ற விருப்பம்?
பதில்:
நிறைய பேர் இருக்கிறார்கள். முதலில் எனக்கு கமல் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும். நளனுடன் மீண்டும் இணைய வேண்டும். நிச்சயமாக இந்த பட்டியலில் இயக்குநர் வெற்றிமாறனும் உண்டு.
சமீபத்தில் 'மண்டேலா' படம் இயக்கிய மடோன் அஸ்வின், 'ஓ மை கடவுளே' இயக்கிய அஷ்வத்துடன் மீண்டும் என பட்டியல் மிக பெரியது. அனைத்து இயக்குநர்களுடனும் நடிக்க வேண்டும் என பேராசை கொண்ட நடிகன் நான். என்கிறார் அசோக்செல்வன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்