மகளிர் தினம்: "குஷ்புவே கோயில் கட்டுவேன் என சொன்னது என் அம்மாவுக்குதான்' - இயக்குநர் பிருந்தா

பிருந்தா

பட மூலாதாரம், BRINDHA

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"என்னை பொருத்த வரை எல்லா நாட்களுமே மகளிர் தினம்தான். ஏனென்றால் பெண்கள் வெளியே வந்து எல்லா துறைகளிலும் சாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆண், பெண் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. 'Human' என்ற ஒன்றுக்குள் சேர்த்து விடலாம். யாருமே யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கைதான். கவலை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷமாக இருப்போம். நான் பெண்ணாக இருப்பது என்றுமே பெருமைதான். பெண்கள் தினத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள்" என உற்சாகமாக தொடங்குகிறார் நடன இயக்குநர் பிருந்தா.

இருபது வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் நடன இயக்குநராக கோலோச்சி கொண்டிருப்பவர் இப்போது 'ஹே சினாமிகா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். நடன இயக்கத்திற்காக தேசிய விருது, தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் மாநில விருதுகள் என வாங்கி குவித்தவருக்கு திரைப்பட இயக்குநர் அனுபவம் முற்றிலும் புதிது.

மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் இல்லத்தில் சந்தித்து பேசினேன். நடன இயக்குநராக சந்தித்த போராட்டங்கள், குடும்பத்தின் ஆதரவு, ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தது, இயக்குநராக தன்னை கண்டறிந்த தருணம் என பலவற்றை பகிர்ந்து கொண்டார் பிருந்தா.

பல உச்ச நட்சத்திரங்கள், இயக்குநருடன் வேலை பார்த்திருந்தாலும், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சினிமாவில் நடன இயக்குநராக நுழைந்த ஆரம்ப காலத்தில் உங்களை நிலை நிறுத்தி கொள்ள சந்தித்த போராட்டங்கள் என்ன?

"நான் சினிமாவுக்குள் நுழைந்ததே எதிர்பாராத ஒரு விஷயம் தான். என் அக்காவுடைய கணவர் ரகு மாஸ்டர். அவரால்தான் பிருந்தா ஆகிய நான் இங்கு இருக்கிறேன். அது 'புன்னகை மன்னன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அதில் வேலை பார்த்து கொண்டிருந்த கலாவுக்கு அப்போது கால் வழுக்கியதால் அவரால் வேலை பார்க்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்த சமயத்தில் நான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தேன். ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த என்னிடம், 'ஊருக்கு போகலாம் வா, ஷூட்டிங் இருக்கு' என கூப்பிட்டார்கள்.

அந்த சமயத்தில் நான் மிகவும் தயங்கிய, பேசுவதற்கே வெட்கப்படக்கூடிய ஒருத்தியாகதான் இருந்தேன். அவர்கள் கூப்பிட்டதும் உடனே, 'நான் வர முடியாது' என்று சொன்னேன். அதைக்கேட்டதும் எனது சகோதரி, 'இல்ல, நீதான் நல்லா ஆடுவீல்ல, போய்ட்டு வா' என்று அனுப்பி வைத்தார்கள்.

இயக்குநர் பிருந்தா

நாகர்ஜுனா, ஷோபனா நடித்துக் கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தில் ஜான் பாபு மாஸ்டருடைய உதவியாளராக சேர்ந்ததுதான் என்னுடைய முதல் படம். நிறைய தயக்கம் எல்லாம் இருந்தது. பிறகுதான் 'புன்னகை மன்னன்' படத்தில் கமல் சாருடைய உதவியாளர் ஆனேன். முன்பெல்லாம், ஒரு பெண் அசிஸ்டெண்ட்தான் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் ஆண்கள்தான். அப்போதெல்லாம் கேரவன் எல்லாம் தனியாக கிடையாது. இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்றால் கூட சங்கடமாக இருக்கும்.

அப்படியான ஒரு காலக்கட்டத்தில் இருந்து விட்டு, இப்போது கலை இயக்கம், நடனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை சினிமாவில் வந்து விட்டதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பாதுகாப்பான இடம் சினிமாதான் எப்போதுமே".

குடும்பத்தில் ஏழு பெண்கள், அதில் பலருமே நடன இயக்குநர்கள். குடும்பத்திலேயே போட்டி இருக்கும் போது நடனத்தில் உங்களது தனித்துவம் என எதை நினைக்கிறீர்கள்? குடும்பம் தந்த ஆதரவு என்ன?

"எனக்கு குடும்பத்தின் ஆதரவு நன்றாகவே இருந்தது. ஏழு பெண்கள் எங்கள் வீட்டில். எங்கள் அம்மா மிகவும் தைரியமானவர். பேட்டி ஒன்றில் குஷ்புவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'உங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். உங்களுக்கு அது போன்ற வாய்ப்பு கிடைத்தால் யாருக்கு கட்டுவீர்கள்?' என கேட்ட போது கொஞ்சம் கூட யோசிக்காமல் குஷ்பு, 'பிருந்தாவுடைய அம்மாவுக்கு' என்று சொன்னார்.

அந்த மாதிரி ஒரு தைரியசாலி என்னுடைய அம்மா. வெளியே போக வேண்டும், வர வேண்டும் என்றால் எங்களையே வாகனம் ஓட்ட சொல்வார். என்னுடைய சகோதரிகளும் ஒருவருக்கொருவர் நன்றாக வரவேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள். ஆனால், குடும்பம் என்று வந்துவிட்டால் நாங்கள் ஒருவருக்கொருவர் வேலை குறித்து எதுவும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம்.

இயக்குநர் பிருந்தா

பட மூலாதாரம், BRINDHA

ஆனால், ஒரு முறை நீங்கள் சினிமாவுக்குள் நுழைந்து விட்டால் உங்களை நிலை நிறுத்தி கொள்ளவது என்பது நிச்சயம் சவாலான விஷயம்தான். முன்பு ஆண்கள் ஆதிக்கம் சினிமாவில் அதிகம் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டோம். அதனால், உங்களை நிலை நிறுத்தி கொள்ள நிச்சயம் நீங்கள் தினமும் புதிதாக எதையாவது ஒன்றை கற்று கொண்டு புதுப்பித்து கொண்டே ஆக வேண்டும்".

'இருவர்' படத்தில் தொடங்கி இயக்குநர் மணிரத்தினத்தின் அனைத்து படங்களிலும் நீங்கள் தான் நடன இயக்குநர். மணிரத்தினம் படங்களுக்கு நடனம் அமைக்கும் கதை சொல்லுங்கள்? நடனத்தில் அவருடைய வொர்க்கிங் ஸ்டைல் என்ன?

"இயக்குநர் மணிரத்தினம் என்னுடைய குரு. 'ஹே சினாமிகா' படம் பார்த்து விட்டு நிறைய பேர் அவருடைய படத்தின் சாயல் இருக்கிறது என்று சொல்கிறார்கள் என்றால் அதை விட எனக்கு பெருமை வேறு எதுவும் இல்லை. மணி சார் படப்பிடிப்பில் முதல் நபராக வருபவர் அவராகதான் இருப்பார். அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படத்தின் காட்சி, பாடல் ரெஃபரன்ஸ் இல்லாத படங்கள் குறைவுதான். 'மெளன ராகம்' படம் போலவும், 'சின்ன சின்ன ஆசை' பாடல் போன்று இப்போதும் நாம் எடுக்க முடியுமா என்பது நமக்கு தெரியாது.

வேலையை எப்பொழுதுமே விரும்பி மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். நிறைய கற்று கொள்ள வேண்டும்".

கமல்ஹாசன், ரஜினி, விஜய், சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்களுடன் வேலை பார்த்ததில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த படங்கள்?

"கமல்ஹாசனுடன் 'நம்மவர்' படத்தில் அவருடன் நடித்திருந்தேன். அவர் நான் நடித்துதான் ஆக வேண்டும் என சொல்லி இருந்தார். 'நான் நடிக்க வேண்டுமா?' என முதலில் யோசித்தேன். ஆனால், அதுவும் நன்றாகவே செய்தேன். அப்போதுதான் திரைக்கு பின்னால் இருக்கும் திறமையாளர்களை வாய்ப்பு கொடுத்து முன்னால் கொண்டு வர வேண்டும் என கமல் சாரிடம் இருந்து கற்று கொண்டேன். அதே போல, கமல்ஹாசனின் தீவிர ரசிகை நான். அவருடன் வேலை பார்த்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம்.

ரஜினி சார் உடன் அசிஸ்டெண்ட்டாக, நடன இயக்குநராக நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் 'அண்ணாத்த' படத்தில் கூட பயங்கர உற்சாகத்துடன் ஒரே டேக்கில் முடித்தார். அப்போது கூட எங்களிடம் வந்து, 'சரியாக செய்தேனா?' என்றெல்லாம் கேட்டார். எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். தொழில் பக்தி அதிகம்.

பிருந்தா

பட மூலாதாரம், BRINDHA

விஜய் சார் அமைதியாக இருந்து வேலையில் அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைப்பார். அஜித் சார் அவர் இருக்கும் இடமே தெரியாது.

நட்சத்திரம் என்ற எந்த ஒரு அலட்டலுமே இல்லாமல் அனைவருடனும் பழகுவார். சூர்யா நிச்சயமாக எனக்கு மிக பிடித்த நடிகர். பெண்களை மதிக்க கூடிய நபர். ஒரு முறை பொள்ளாச்சியில் படத்திற்காக சென்றிருந்தோம். நானும் பானுவும் படம் பார்த்துவிட்டு கீழே இறங்கி விட்டோம். சூர்யாவை பார்க்க கீழே கூட்டம் கூடி இருந்தது. கூட்டத்தில் எல்லாரும் இடிப்பார்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது சூர்யா முன்னாடி சென்று அனைவரையும் தடுத்து, 'அக்கா, நீங்க போங்க' என்று வழி ஏற்படுத்தி கொடுத்தார், அவர் நினைத்திருந்தால் உடனே வண்டி ஏறி முன்னால் போயிருக்கலாம். ஆனால் எங்களுக்காக ஒரு நிமிடம் யோசித்தார் இல்லையா? அந்த குணம் தான் சூர்யாவுடையது".

திரைத்துறையில் குஷ்பு, காஸ்ட்யூம் டிசைனர் அனுபார்த்தசாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் உள்ள நட்பு பற்றி?

"குஷ்பு என்னுடைய 35 வருட கால நண்பர். நாங்கள் எல்லாருமே சினிமாவில் ஒன்றாகதான் வளர்ந்தோம். நான் நன்றாக வர வேண்டும் என ஆசைப்படுபவர்களில் குஷ்புவும் ஒருவர். 'ஹே சினாமிகா' படம் வந்த போது கூட நிறைய அன்பும் ஆதரவும் கொடுத்தார். அவரை போல ஒரு நண்பர் இந்த காலத்தில் கிடைக்குமா என்பதை யோசித்து கூட பார்க்க முடியாது.

அனு பார்த்த சாரதியும் என்னுடைய நெருங்கிய தோழி. அவருக்கு வேலை என்றால் அது மட்டும்தான். படப்பிடிப்பு சமயத்தில் எல்லாம் என்னை நண்பராக கூட பார்க்க மாட்டார்".

நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்? இயக்குநராக உங்களை கண்டறிந்த தருணம் எது? நடன இயக்கத்துக்கும் பட இயக்கத்துக்கும் என்ன மாதிரியான வேறுபாடு இருந்தது? துல்கர், அதிதி, காஜலை சம்மதிக்க வைத்தது எப்படி?

"கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாகவே நான் படம் இயக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், அப்போது செய்ய முடியாததற்கு இருந்த வேலை கமிட்மெண்ட்டும் ஒரு காரணம். மேலும் நடன இயக்குநராக பாடல்களில் கதை சொல்ல முடிந்த என்னால் முழு கதையும் இயக்க முடியுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது. அதை எல்லாம் கடந்து வந்துதான் 'ஹே சினாமிகா' படம் இயக்கினேன்.

படத்தில் ஒவ்வொரு காட்சியையும், வசனத்தையும் மிகவும் ரசித்து இயக்கினேன். அதற்கு துல்கரும் பெரிய பலமாக இருந்தார். என்னதான் பெரிய நடன இயக்குநராக இருந்தாலும் முதன் முறையாக இயக்குநராக வரும் போது எந்த நட்சத்திரத்திற்கும் அவரை நம்புவதற்கு ஒரு சிறிய தயக்கம் இருக்கும். ஆனால், துல்கர் உடனே கதையை கேட்டு எனக்காக சம்மதித்தார். அவருடைய அன்புக்கு நன்றி. சூர்யாவை போலவே துல்கரும் பெண்களை மதித்து நடக்க கூடிய ஒரு நபர். அதிதி என்னுடைய மகள். படம் முடிந்ததும் கூட 'எப்படி இருக்கிறீர்கள், சாப்பிட்டீர்களா?' என்று இப்போதும் கேட்டு கொண்டேதான் இருப்பார். காஜலும் படத்திற்கு பெரிய ஆதரவு.

பிருந்தா

பட மூலாதாரம், BRINDHA

முதல் படத்தில் பெரும்பாலும் அழுத்தம் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், நான் மிக மகிழ்ச்சியாக வேலை பார்த்த்தற்கு காரணம் இவர்கள் மூன்று பேரும்தான். அதே போல, மதன் கார்க்கி, ரமேஷ் இவர்கள் இருவரும் என்னிடம் கதை இயக்க கேட்ட போது 'ஹே சினாமிகா' எனக்கும் பிடித்திருந்தது. இந்த தலைமுறையோடு பொருத்தி கொள்ளும்படி மிக இலகுவான கதையாக இருந்ததால் முதல் அடி எடுத்து வைத்துள்ளேன்".

பாடலில் கதை சொல்வதை விரும்புபவர் நீங்கள். அப்படி நீங்களே ரசித்து நடன இயக்கம் செய்த பாடல்கள் எது?

"நிறைய பாடல்கள் அது போல உண்டு. சமீபத்தில் குறிப்பிட வேண்டும் என்றால், 'காலா'வில் ரஜினி சாரை வைத்து இயக்கிய பாடல்கள் பிடிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 'கண்ணம்மா' பாடல். அதே போல, 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் 'முன்பே வா அன்பே வா' பாடல் மிகவும் பிடிக்கும்."

காணொளிக் குறிப்பு, 'ஹே சினாமிகா' எப்படி வந்திருக்கிறது?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: