'ஹே சினாமிகா' துல்கர் சல்மான்: "பட தலைப்புக்கு ராயல்டி கேட்டார் மணிரத்தினம்"

துல்கர் சல்மான்

பட மூலாதாரம், Insta@dqsalmaan

    • எழுதியவர், ச. ஆனந்த பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இருபது வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் பிருந்தா தற்போது 'ஹே சினாமிகா' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வால் என பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படம் தொடர்பாகவும் அவர்களுடைய சினிமா பயணம் குறித்தும் நடிகர் துல்கர் மற்றும் அதிதியை பிபிசி தமிழுக்காக நேர்காணல் செய்தேன்.

"கோவிட் காரணமாக தான் இந்த இடைவெளி. அதுவும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' கடந்த 2020-ல் பிப்ரவரி மாதம் வெளியானது. அதற்கு பிறகு நடந்தது என்ன என்று எல்லாருக்குமே தெரியும். அதனால், பெரிய இடைவெளியாக இதை எடுத்துக் கொள்ள மாட்டேன்" என்று உற்சாகமாக ஆரம்பித்தார் துல்கர் சல்மான்.

இருவருமே பிருந்தாவின் நடன இயக்கத்தில் வேலை பார்த்து இருக்கிறீர்கள். ஆனால், அவரை இயக்குநராக எதிர்பார்த்தீர்களா? முதலில் கதை சொன்ன போது என்ன தோன்றியது?

"பிருந்தா மாஸ்டர் படம் இயக்கப் போகிறார் என்றதும் அவருடைய முதல் தேர்வாக நானும் துல்கரும் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் மீண்டும் மாஸ்டருடன் இணைந்து பணியாற்ற நாங்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தோம். மாஸ்டரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மதன் கார்க்கியும் மிகவும் வலிமையான கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதியிருந்தார். முதலில் இது மியூசிக்கல் எமோஷனல் கதை, நடனத்தை சுற்றி இருக்கும் என்றே நினைத்தேன். ஆனால், இதில் காதல், நகைச்சுவை என பல அடுக்குகள் இருக்கின்றன" என அதிதி கூற அவரை தொடர்ந்து துல்கர் தமது அனுபவத்தை பகிர்ந்தார்.

அதிதி

பட மூலாதாரம், Insta@aditiraohydari

படக்குறிப்பு, அதிதி

"மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வரும்போது இரண்டு விஷயங்களை தான் நினைத்தேன். ஒன்று அவர் 'பட இயக்குநர்' ஆவார் என்பது நாங்கள் எதிர்பார்க்காதது. தனது கதைக்கு அவர் நினைத்திருந்தால் எந்த நடிகர்களை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். ஏனென்றால் பிருந்தா மாஸ்டருடன் எல்லாருக்குமே ஸ்பெஷலான அன்பு உண்டு. என் நடனத்தில் கூட எனக்கு பல சமயம் நம்பிக்கை குறைந்து போய் பயம் வந்த தருணங்கள் எல்லாம் உண்டு. அதை எல்லாம் பிருந்தா மாஸ்டர் தான் சரி செய்தார். மேலும் அதிதியும் நானும் நீண்ட கால நண்பர்கள். நாங்கள் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் வேலை செய்வது என்பது கூடுதல் சிறப்பு".

பிருந்தா

பட மூலாதாரம், Insta@brinda_gopal

படக்குறிப்பு, பிருந்தா

படத்தின் முன்னோட்ட காட்சிகளைப் பார்க்கும் போது, இது ஒரு முக்கோண காதல் கதை என்பது போன்ற எண்ணம் வருகிறது. இதைத்தாண்டி, இந்த படத்தில் எந்த விஷயம் உங்கள் இருவரையும் ஈர்த்தது?

துல்கர்: "படத்தின் கதையை தாண்டி, வசனங்களை சொல்வேன். முன்னோட்ட காட்சிகளை பார்க்கும் போது உங்களுக்கு இது முக்கோண காதல் கதை போன்று தோன்றினாலும் நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் நிறைய இருக்கிறது".

அதிதி: "இதில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கதையை தற்போதுள்ள இளம் ஜோடிகள் நன்றாக பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும். மேலும் திருமணத்திற்கு பிறகு வரும் காதல் என்பதும் எப்படியான சிக்கலை கொண்டு வருகிறது என்ற விஷயங்களும் பேசப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்கள்தான் துல்கர், மாஸ்டர் இவர்களை எல்லாம் தாண்டி இந்த கதையை நான் தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்தது".

ஹே சினாமிகா

பட மூலாதாரம், Insta@brinda_gopal

'ஓகே கண்மணி' படத்தில் 'ஹே சினாமிகா' பாடலும் அந்த வார்த்தையும் அந்த சமயத்தில் பலருக்கும் பிடித்திருந்தது. அந்த வார்த்தையே இந்த படத்திற்கு தலைப்பு எனும் போது உங்களுக்கு என்ன தோன்றியது?

துல்கர்: "மதன் கார்க்கிதான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார். இரு பெண்களின் கோபம்தான் இந்த படம். அதனால், இந்த கோபத்துடன் தொடர்புபடுத்தி தலைப்பு வேண்டும் எனும் போது இந்த தலைப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது. அவரும் மிகப்பெரிய மணிரத்தினம், ரஹ்மான் இவர்களுடைய விசிறி என்பதால் எல்லாமே சேர்ந்து வந்தது.

எனக்கு இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய முந்தின படமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தலைப்பும் மணி சாருடையது. இந்த படத்தலைப்பும் அவருடையதாகவே அமைந்து விட்டது. இதை மணி சாரிடம் சொன்ன போது இப்படியே தொடர்ந்து என்னுடைய தலைப்பாக வைத்துக் கொண்டிருந்தால் இனிமேல் உன்னிடம் ராயல்டி கேட்பேன் என விளையாட்டாக சொன்னார்."

'சைக்கோ', 'செக்க சிவந்த வானம்', 'காற்று வெளியிடை' என அதிதி மிகவும் கவனமாக உங்களுடைய கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுப்பது போல இருக்கிறது. உண்மையில் படத்தில் ஒப்பந்தமாகும் போது எந்த விஷயத்தை கவனத்தில் கொள்வீர்கள்?

அதிதி: "ஒரு படம் என்றால் கதை என்னுடைய கதாபாத்திரம் இரண்டுமே முக்கியம் இல்லையா? மேலும் அந்த படத்தில் இருந்து நான் என்ன கற்றுக் கொள்ள போகிறேன் என்பதையும் கவனத்தில் கொள்வேன். நான் கதாநாயகி ஆனதே மணிரத்தினம் படங்களை பார்த்துதான். 'செக்க சிவந்த வானம்', 'காற்று வெளியிடை' படங்களில் நான் நடித்தது அதற்காகத் தான். பிறகுதான் 'சைக்கோ', 'ஹே சினாமிகா' படங்கள். படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்வதையும் சவால்களையும் விரும்புவேன்".

'ஹே சினாமிகா' படத்தில் துல்கர் பாடியிருக்கிறார். அதிதியும் நன்றாக பாடக்கூடியவர் எனும் போது இருவரும் சேர்ந்து பாடாதது ஏன்?

துல்கர்: "அதிதி மிக சிறந்த பாடகர். அவருடன் என்னை ஒப்பிடும் போது நான் ஒன்றுமே இல்லை. இந்த படத்தில் கூட ராப் பாடல் தான் பாடியிருக்கிறேன். அதை பாடியிருக்கிறேன் என்பதை விட படித்திருக்கிறேன் என்பதுதான் சரியாக இருக்கும். அதனால், எனக்கு அது எளிதாக இருந்தது. எதிர்காலத்தில் அதிதி பாட அதில் நானும் சேர்ந்து இது போல படிக்கும்படியான பாடலாக இருந்தால் சரியாக இருக்கும்".

'ஓகே கண்மணி', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' போன்று கதையின் நாயகனாகவே இருக்கும்படியான படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். தமிழ்ல் மாஸ் ஹீரோவாக கதைகள் செய்ய விருப்பம் உண்டா?

துல்கர் சல்மான்

பட மூலாதாரம், Insta@brinda_gopal

துல்கர்: "என்னை பொருத்தவரை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படமே எனக்கு மாஸ் படம்தான். ஏனென்றால் எனக்கு அவ்வளவுதான் மாஸ் வரும். ஆனால், எனக்கு மாஸ் படங்கள், அதில் சூப்பர் ஹீரோக்கள் நடிப்பது இதை எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். விசிலடித்து, கைத்தட்டி அதை விரும்பி பார்ப்பேன்.

ஆனால், எனக்கு மாஸான படம் என்றால் அது நிச்சயம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தான். ஏனெனில் அதில் எனக்கென்று ஒரு ஸ்லோ மோஷன் இருக்கும், சண்டை இருக்கும். அந்த அளவுக்குதான் எனக்கு மாஸ் காட்ட முடியும். பறந்து, பறந்து சண்டை போட்டால் பார்வையாளர்களும் நம்ப மாட்டார்கள்.

தமிழில் இதுவரை நான் நடித்த படங்களில் பெரும்பாலும் காதல் சார்ந்த கதைகளே அதிகம் இருக்கும். இதை தமிழில் நான் மாற்றி கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இனி தமிழில் நான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் அதுவும் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமே தவிர, அது மட்டுமே கதையாக எடுப்பதை மாற்றி கொள்வேன்".

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: