இலங்கையில் இன்று 7 1/2 மணி நேர மின் வெட்டு - தொடரும் நெருக்கடி

மின் தடை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் இன்றைய தினம் (2022மார்ச் 2) 7 1/2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, இன்றைய தினம் 7 1/2 மணி நேர மின்சார தடையை ஏற்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு தாம் வழங்கியதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், மின்சார உற்பத்திக்கு தேவையான ஏரிபொருள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

''மின்சார தடையை தவிர்ப்பதற்கான மாற்று திட்டங்கள் எதுவும் கிடையாது. இவ்வாறான நிலைமை உருவாகும் என அரசாங்கத்திற்கு பல்வேறு தடவைகள் கூறினோம். இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தடவைகள் வலியுறுத்தினோம். எனினும், அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எதிர்காலம் தொடர்பில் தற்போதைக்கு ஒன்றும் கூற முடியாது. இன்றைய தினமும் எரிபொருள் கிடைக்கவில்லை என்றால், இந்த நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையும். தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு அமைய, வார நாட்களில் 7 முதல் 8 மணிநேர மின்சார தடைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என அவர் தெரிவிக்கிறார்.

இந்த நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு தற்போதைய 150 மில்லியன் ரூபா இருந்தால் போதுமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கிறார்.

ஜனக்க ரத்நாயக்க

பட மூலாதாரம், PUCSL MEDIA

படக்குறிப்பு, ஜனக்க ரத்நாயக்க

இதேவேளை, மின்சாரத்தை வழமை போன்று வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி இந்த உறுதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய திறைசேரி மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கடந்த சில காலமாகவே தொடர் மின்சார விநியோகம் தடைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

இதன்படி, இன்று (2022மார்ச் 2) மின்வெட்டு அமல்படுத்தப்படும் நேரம் 7 1/2 மணி நேரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: