வீட்டை விட்டு வெளியேறிய திருநங்கையை அழைத்து வந்து மஞ்சள் நீராட்டு நடத்திய குடும்பம்

(இன்றைய (மார்ச் 2) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.)
விருத்தாசலத்தில் திருநங்கை ஒருவருக்கு அவரது குடும்பத்தினரே மஞ்சள் நீராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளதாக, 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
திருநங்கைகள் பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி, மூத்த திருநங்கைளிடம் தஞ்சமடைவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் குடும்ப விவரத்தைக் கூட யாரிடமும் தெரிவிப்பதில்லை. அதேபோன்று திருநங்கைகளின் குடும்பத்தாரும் சமூக கிண்டல் காரணமாக திருநங்கையாக மாறும் தங்களது பிள்ளைகள் குறித்து யாருக்கும் தெரிவிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் (21). இவரது தந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், அவரது தாய் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். இவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவரது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து, அவர் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்துள்ளார்.
அவ்வாறு அங்கு நிஷாந்த் சென்றதை அறிந்து, அவரது பெற்றோர் சமரசம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துவந்து, உணர்வுக்கு மதிப்பளித்து, தனது மகன் பெயரை நிஷா என மாற்றியுள்ளனர். மாற்றியதோடு, அவரது பூப்படைந்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தி தனது மகனை பெண்ணாக அங்கீகரித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர். நிஷாவுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து, விருந்துண்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், முதன்முறையாக திருநங்கை ஒருவரை அங்கீகரித்து அவருக்கு விழா நடத்தியிருப்பது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்ததாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளமையின் ரகசியம் என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தான் இளமையாக இருப்பதற்கான காரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கியதாக 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
69ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள சிறுமலர் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:
"எனக்கு 69 வயது. இதைச் சொன்னால் சிலர் நம்ப மாட்டார்கள். 39 வயதுதான் இருக்கும் என்கிறார்கள். நான் இளமையாக இருப்பதற்குக் காரணம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சியை முறையாக கடைப்பிடிப்பதுதான்.
என்னதான் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும், மாணவர்களாகிய உங்களைச் சந்திக்கும் போது மேலும் 5 வயது குறைந்துவிடுகிறது. பொறுப்புகள் பதவிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. உங்களில் ஒருவனாக என்றைக்கும் இருக்கிறேன். அதுதான் யாராலும் பிரிக்க முடியாதது.
பதவி இன்றைக்கு வரும், போகும். பதவியை என்றைக்கும் பெரிதாக நினைத்ததில்லை. அதைப் பொறுப்பு என உணர்ந்து கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்" என பேசியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு தினங்களுக்கு முன், மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தகமான 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் இளமையாகக் காட்சியளிப்பதாகக் கூறினார். அவருக்கு 69 வயது ஆகிறது என தான் கூறியதை தனது தாய் சோனியா காந்தி நம்ப மறுத்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 11 சதவீதம் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
'நைட் பிராங்க்' என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவிலான சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் 3 கோடி டாலர் (ரூ.226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களை பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளது.
இவர்களின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு 12 ஆயிரத்து 287ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 637ஆக அதிகரித்தது. ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில், பெங்களூருவில்தான் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகபட்சமாக 17.1 சதவீதம் உயர்ந்துள்ளது. அங்கு 352 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். டெல்லி, மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பங்குச்சந்தையின் வளர்ச்சியும், டிஜிட்டல் புரட்சியும்தான் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்று 'நைட் பிராங்க்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரிக்கும் என்று அது கணித்துள்ளது.
இதுதவிர, உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா 748 பெரும் பணக்காரர்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீனா 554 பேருடன் 2-ம் இடத்திலும், இந்தியா 145 பேருடன் 3-ம் இடத்திலும் உள்ளன என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம் - நடைமுறையில் சாத்தியமா?
- கணினி மென்பொருள் மூலம் பங்குச் சந்தையில் லட்சங்களை சம்பாதிக்க முடியுமா?
- யுக்ரேனிய மருத்துவ படிப்பை இந்திய மாணவர்களால் மீண்டும் தொடர முடியுமா?
- யுக்ரேனில் கொல்லப்பட்ட நவீனின் கடைசி நிமிடங்கள் - அதிர்ச்சியில் நண்பர்கள்
- யுக்ரேன் Vs ரஷ்யா: போர் சூழலை விளக்கும் கள படங்கள்
- உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












