மு.க. ஸ்டாலினின் சமூக நீதிக் கூட்டமைப்பு முயற்சி பலன் கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயனாந்த்
- பதவி, பிபிசி தமிழ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக அகில இந்தியக் கட்சிகளிடம் இருந்து எதிர்வினை வராமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ` பா.ஜ.கவுக்கு எதிராக இதனை உருவாக்கியுள்ளனர். இது கூட்டமைப்பே அல்ல. நாங்கள் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை' என்கிறது அ.தி.மு.க. என்ன நடக்கிறது?
இந்திய குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி காணொளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ` நாடு முழுவதும் சமூகநிதிக் கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் `அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு' தொடங்கப்படும்' என அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டதுதான் சமூகநீதி. அனைவருக்கும் சமமான பொருளதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமைய வேண்டும் என்பதுதான் சமூகநீதி. அனைவருக்குமான சமவாய்ப்புகள் என்பதன் மூலம் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை அடைய முடியும்' என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்தக் கடிதத்தில், `வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்கள் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து பெரியார் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும். அசைக்க முடியாத இந்தத் தத்துவம்தான் கடந்த 80 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக விளங்கி அரசியலைப் பண்படுத்தி வந்துள்ளது. சமத்துவமின்யை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலத்தை முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூகநீதித் தத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம்தான்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், `தனித்தன்மைமிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆன நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
`இது அரசியல் ஆதாயம் பற்றியது அல்ல. மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்' எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவுக்கும் அழைப்பு
இக்கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்ல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, சி.பி.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகவுடா, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி என பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, பா.ம.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.கவுக்கு எதிரான அணி
ஆனால், இந்தக் கடிதம் தொடர்பாக மாநில கட்சிகளிடம் இருந்து எதிர்வினைகள் எதுவும் வெளியாகவில்லை. ``சமூகநீதியை வென்றெடுப்பதற்கு தனியாக தமிழ்நாடு மட்டும் இல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளையும் சேர்ப்பது என்பது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.கவின் விருது வழங்கும் விழாவில் பேசிய எங்கள் கட்சியின் தலைவர், `சமூக நீதியை வெல்வதற்கு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்' என்று முதலமைச்சரை கேட்டுக் கொண்டார். அப்போது பேசிய முதல்வர், `திருமாவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவன்' என்றார். இந்த இயக்கத்தை ஒருங்கிணைப்பதன் முதல்வரின் பொறுப்பு கூடியுள்ளது'' என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.

பட மூலாதாரம், VANNI ARASU/FACEBOOK
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்துக்கு எதிரான ஓர் அணியை முதலமைச்சர் கட்டமைக்கிறார். 1970 ஆம் ஆண்டில் மாநில உரிமை தொடர்பாக அனைத்து கட்சிகளையும் கருணாநிதி ஒருங்கிணைத்தார். மாநில சுயாட்சி, மாநில உரிமை ஆகியவற்றைப் பெருக்குவதற்காக இதனை ஒருங்கிணைத்தார். தற்போது இந்தியாவின் பன்முகத்தன்மை, மதசார்பின்மையை அழிப்பதற்கு தமிழ்நாடு எதிராக இருக்கும் என்பதைக் காட்டுவதற்கான முயற்சி இது. 2024 தேர்தலுக்கு முன்பாக இந்த வேலையைச் செய்வது என்பது இலக்கை நோக்கிய பயணத்தையே காட்டுகிறது'' என்கிறார்.
``இந்தக் கடிதத்துக்கு எதிர்வினைகள் வரவில்லையே?'' என்றோம். `` இது மிகவும் முக்கியமான ஒரு கடிதம். நீண்டகால செயல்திட்டத்தை முதல்வர் முன்னெடுக்கிறார். இதற்கு முதலில் யாரும் சரியென கூறிவிட மாட்டார்கள். அனைவரும் கூடி விவாதிப்பார்கள். இந்த அழைப்பாணை இந்திய ஒன்றியத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும். அதேநேரம், இந்தக் கடிதத்தை மறுத்து யாரும் பேசவில்லையே?'' என்றார்.
'ஏற்கனவே சட்ட வடிவில் உள்ள ஒன்றுக்கு புது வடிவமா?'
அதேநேரம், தி.மு.கவின் முயற்சி தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்னையன், ``மு.க.ஸ்டாலின் சொல்லும் சமூகநீதிக் கூட்டமைப்பைத் தொடங்கியது பெரியார். அதனை அண்ணா வளர்த்தெடுத்தார். அதற்குச் சட்டரீதியாக எம்.ஜி.ஆர் செயல்வடிவம் கொடுத்தார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டரீதியாக கொண்டு வந்து உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடியது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்தான். சமூக நீதி என்பது அதிலேலேயே முடிந்துவிட்டது. சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஜெயலலிதாவுக்கு, வீரமணி பட்டம் கொடுத்தார். சமூக நீதி என்றால் என்னவென்று ஸ்டாலினுக்குத் தெரியாது'' என்கிறார்.
மேலும், `` ஏற்கெனவே சட்ட வடிவில் உள்ள ஒன்றுக்கு இவர் புதுவடிவம் கொடுக்கப் பார்க்கிறார். மக்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்கிறார். இவரது தந்தைகூட இந்தளவுக்கு பொய் பேச மாட்டார்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய பொன்னையன், `` பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சவால் கொடுப்பதற்கு இந்தியாவில் எந்தக் கட்சிகளும் இல்லை. மதவாத கட்சியான பா.ஜ.ககூட, பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு 27 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டை ஒதுக்கியது. வடஇந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற பெயரை பா.ஜ.க வாங்கிவிட்டது. பா.ஜ.கவுக்கு எதிராக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.
ஏழு பேர் விடுதலைக்காக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும், அதனைக்கூட ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் பெற்று வாங்கி இவர்களால் அனுப்ப முடியவில்லை. இது கூட்டமைப்பே அல்ல. சுயபுராணம் பாடுகிற ஸ்டாலினின் அமைப்பு. ஏற்கெனவே உள்ள அமைப்பை, இவர் புதிதாகத் தொடங்குவதாகக் கூறுகிறார். நாங்கள் அந்தக் கூட்டமைப்பில் சேரவில்லை'' என்கிறார்.
பா.ஜ.கவின் விமர்சனம்
பா.ஜ.கவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தக் கூட்டமைப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க ஊடகப் பிரிவின் தலைவர் சி.டி.நிர்மல்குமார், `` சமூக நீதிக்கு உரிமை கொண்டாடுவதற்கு இந்தியாவில் பலர் உள்ளனர். ஆனால், இதுவரையில் அதனை யாரும் செயல்படுத்தவில்லை. இங்கு 70 ஆண்டுகளாக சமூக நீதி இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் அதனைச் சரிவர செயல்படுத்தாததால்தான் தமிழ்நாட்டில் தீண்டாமை அதிகமாக இருக்கிறது. அதேபோல் பாகுபாடும் அதிகமாக உள்ளது. தி.மு.கவுக்குள்ளேயே பாகுபாடு உள்ளது'' என்கிறார்.

பட மூலாதாரம், PIB INDIA
மேலும், ``பிரதமர், குடியரசு தலைவர் என பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவால் கொண்டு வர முடியும். சமூக நீதி என்பதற்கு நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி ஆகியோரும் உரிமை கொண்டாடுகின்றனர். ஸ்டாலினும் உரிமை கொண்டாடுகிறார். கட்சிக்குள்ளேயே 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்குவதையே இவர்களால் கொண்டு வர முடியவில்லை. இவர்களுக்கு அதில் தெளிவில்லை. இதனை வைத்து அரசியல் செய்யவே விரும்புகின்றனர்'' என்கிறார்.
யாரும் இணைய மாட்டார்கள்
`` ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அரசியல் செய்ய முனைகின்றனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலின்போது நான்கைந்து பிரதமர் வேட்பாளர்கள் இருப்பார்கள். அதில் ஸ்டாலினும் இணைந்து கொள்ள விரும்புகிறார். இதற்கு யாரும் பதில் அளிக்க மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்கள் மாநிலத்தின் அடையாளமாக இருக்கவே விரும்புவார்கள். உண்மையில் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அனைத்து சமூகத்தினருக்கும் பா.ஜ.க முக்கியத்துவம் கொடுக்கிறது.
பிற கட்சிகள் எல்லாம் சாதியை மையமாக வைத்து இயங்குகின்றன. இந்த இயக்கத்தை வைத்து ஸ்டாலினால் ஓர் கூட்டம் மட்டுமே நடத்த முடியும். அதற்கு மேல் இந்த இயக்கத்தை எந்த இடத்திலும் அவரால் கொண்டு போய் சேர்க்க முடியாது. காரணம், இவர்கள் எந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் அதற்கு மேல் பா.ஜ.க அரசு செய்து வருகிறது'' என்கிறார் சி.டி.நிர்மல்குமார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்வது என்ன?

பட மூலாதாரம், TWITTER
முதலமைச்சரின் கடிதம் தொடர்பாக, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். `` சமூக நீதி என்பதில் அனைவருக்கும் அக்கறை உள்ளது. இந்துத்துவம் என்பதன் அடிப்படையாக மனுதர்மமாக உள்ளது. அதனை வெளிப்படையாக அவர்களால் பேச முடியாது. அதனால் அவர்கள் அமைதியாக உள்ளனர். வடநாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மறுதலிக்கப்பட்டது. பத்து சதவீத உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவினை உருவாக்கினார்கள். இந்தக் கூட்டமைப்புக்கு பா.ஜ.க உடன்படாது. ஆனால், சமூகநீதிக் கொள்கையில் பல கட்சிகளுக்கு உடன்பாடு உண்டு. லாலு பிரசாத், முலாயம் சிங் ஆகியோர் இந்தக் கொள்கையில் உறுதியாக உள்ளவர். அதனையொட்டி இந்தியா முழுக்க ஓர் ஒற்றுமையை உருவாக்கி பா.ஜ.கவின் நோக்கத்தை சிதைக்க வேண்டும் என்பதுதான் தி.மு.கவின் நோக்கம்'' என்கிறார்.
மேலும், `` நாங்கள் மாநில சுயாட்சி மாநாடு நடத்தி அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்தோம். இது மக்கள் நலனுக்கான ஒரு திட்டம். மனுதர்மக் கோட்பாடு என்பது இதர சமூகத்தினருக்கு கேடுவிளைவிக்கும் ஒன்றாக உள்ளது'' என்கிறது.
``ஏற்கெனவே உள்ள இயக்கத்துக்குப் புதுவடிவம் கொடுப்பதாக அ.தி.மு.க விமர்சிக்கிறதே?'' என்றோம். `` இது பெரியாரின் சிந்தனைதான். பஞ்சாப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு என்பது நான்கு சதவீதம்தான். பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மண்டல் குழுவின் அறிக்கையைக்கூட பயன்படுத்தவில்லை. இதில் சமநிலை ஏற்பட வேண்டும். 49 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதனை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
அ.தி.மு.க சொல்வதைப் போல எம்.ஜி.ஆர் கொண்டு வந்தாரா என்பதெல்லாம் வேறு விஷயம். சமூகநீதி என்பது பெரியாரின் சிந்தனை. அதனை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது அ.தி.மு.க குரல் கொடுக்கவில்லை. நாங்கள் நீதிமன்றம் சென்று வாங்கினோம். இந்தக் கூட்டமைப்புக்கு அ.தி.மு.கவையும் அழைத்துள்ளோம். அகில இந்திய அளவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைய வேண்டும். அதில் தனிப்பட்ட பெருமையை அ.தி.மு.க தேடிக் கொண்டால் அதில் எங்களுக்குக் கவலையில்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
- உத்தர பிரதேசத்தின் முசாஃபர் நகரில் நீடிக்கும் கலவர தாக்கம் - கள நிலவரம்
- பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?
- "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - தேர்தல் குறித்து உ.பி கிராமப் பெண்கள்
- பூமியில் நினைத்ததை விட அதிக அளவில் மர இனங்கள் - எந்த நாடு முதலிடம்?
- யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?
- எளிய மக்களுக்கு பயனளிக்காத பட்ஜெட்டா இது? - ஓர் அலசல்
- நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய சிறுவயது கனவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












