கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி: இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள்

பட மூலாதாரம், Madankumar
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியில் இளங்கவின் கலைப் பட்டப் படிப்பில் (பி.எப்.ஏ) காட்சி வழித் தொடர் வடிவமைப்பு (விஷூவல்ஸ் கம்யூனிகேசன் டிசைன்), வண்ணக் கலை (பெயிண்டிங்), சிற்பக்கலை (ஸ்கல்ப்சர்) ஆகிய 3 பிரிவுகளில் படிப்புகள் நடைபெறுகின்றன. முதுகலைப் பட்ட (எம்.எப்.ஏ) படிப்புகளும் உள்ளன.
காவிரிக் கரையோரம் மேலக்காவேரி பகுதியில் உள்ள இக்கல்லூரி, சுமார் 150 ஆண்டுகள் பழைமையானது. ஓவியப் பள்ளியாக தொடங்கப்பட்டு, கல்லூரியாக உயர்ந்தது.
ஓவியர் கோபுலு, கலை கங்கா, வீர சந்தானம், என்.எஸ்.மனோகரன், இளையராஜா, சிவபாலன் உள்ளிட்ட பலர் இதன் முன்னாள் மாணவர்கள். தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து சிதிலமடைந்துள்ள கட்டடங்களை, உடனே சீரமைக்கக் கோரி மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடிப்படை வசதிகள் கூட இல்லை

பட மூலாதாரம், Madankumar
கல்லூரி வளாகத்தில் போராட்டத்திற்கிடையே இறுதியாண்டு மாணவர் மதன் குமார் கூறுகையில், ''கல்லூரி சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால், கட்டடங்களை விட புதர்தான் அதிகம் உள்ளது. கட்டடங்கள், வகுப்பறைகள் சிதிலமடைந்துள்ளன. இது குறித்து 2 மாதங்களுக்கு முன்னர் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது வகுப்பறையின் சிமெண்ட் பூச்சு எங்கள் மேல் விழுகிறது. கல்லூரியின் முதன்மை கட்டடம் உட்பட பல இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆகையால்தான் மாணவர்கள் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்'' என்றார்.

பட மூலாதாரம், Harini
மேலும், ''வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் என எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் ஒரு பாழடைந்த கட்டடத்திற்குள் செல்வது போல், மரண பயத்துடன் கல்லூரிக்கு சென்று வருகிறோம். மாணவர்களுக்கு மட்டும் விடுதி உள்ளது. அங்கும் உணவு, குடிநீர் வசதியில்லை. வெளியில்தான் உணவருந்தி வருகிறோம்.'' என்கிறார் மதன்குமார்.
வகுப்பறைக்கு வரும் பாம்புகள்
பிஎப்.ஏ பட்ட மாணவி ஹரிணி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கல்லூரி வளாகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய, சிதிலமடைந்த கட்டடத்தைச் சுற்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இவற்றிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்கே வருகின்றன.
மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பில்லை. உடைந்த கதவுகளைக் கொண்ட கழிவறைகளையே பயன்படுத்தி வருகிறோம். அதுவும் ஒன்றிரண்டுதான் உள்ளது. கல்லூரிக்குள் எப்போது, எங்கே இடிந்து விழும் என்கிற அச்சமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Harini
கலையின் மீதான ஆர்வத்தில் இங்கு வருகிறோம். ஆனால், இங்குள்ள சூழலால் படிக்கவே வேண்டாம். பாதுகாப்பாக வீட்டுக்கு போனால் போதும் என்று ஓட்டம் எடுக்க வேண்டியுள்ளது. அமர்ந்து வரைவதற்கு போர்டுகள் கூட சரியாக இல்லை. படைப்பாற்றல், கலைப் பார்வையோடு படைப்பாளிகளை உருவாக்கும் இடம், இப்படி இருக்கலாமா...?" என்கிறார் மாணவி ஹரிணி.
சான்றிதழ்கள் கேள்விக்குறி ?

பட மூலாதாரம், Madan
இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் படித்து பெறும் பட்டமும் கேள்விக்குறியாக உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லூரி இறுதியாண்டு மாணவர் மார்ட்டின் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் படித்து நாங்கள் பெறும் பட்டம் செல்லுமா? என்கிற சூழலும் ஏற்பட்டது. இந்த கல்லூரி தற்போது இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது.
ஆனால், நான்காண்டு பட்டப்படிபான பி.எப்.ஏவிற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் அங்கீகாரம் அளிக்கவில்லை. இதனால், நாங்கள் பெறும் சான்றிதழ் செல்லுமா? வேலை வாய்ப்பும் கிடைக்குமா? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.'' என்றார்.
7 ஆண்டுகளாக போராட்டம்

பட மூலாதாரம், Saimon
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் உரிய பராமரிப்பு இல்லாததால், வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இதை அவ்வப்போது சீரமைப்பதை விட, புதிய கட்டங்களைக் கட்டித் தருவதே சரியான தீர்வாக இருக்கும்.
பெயரளவிற்கு மீண்டும் மீண்டும் சீரமைப்பதால் பலன் இல்லை. அரசுக்கு நிதியிழப்புதான் மிச்சம். புதிய வகுப்பறைகளைக் கட்டி, தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை என்கிறார் இளைஞர் அரண் அமைப்பைச் சேர்ந்த சைமன்.
அரசின் கவனத்திற்கு கோரிக்கைகள் - கல்லூரி முதல்வர்

பட மூலாதாரம், Arularasan
இது குறித்து கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி முதல்வர் அருளரசனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''போராட்டம் நடத்தி வரும் மாணவர்களோடு கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் நீலமேகம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புக்கு சென்றுள்ளனர்.'' என்றார்.
சிதிலமடைந்த கட்டடங்கள் குறித்து கேட்டதற்கு, ''இது குறித்தும் அதிகாரிகள் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளனர். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். ஆகையால், புதிய கட்டடம் கட்டுவது. மாணவர்களின் சான்றிதழ் விவகாரம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












