சீன குளிர்கால ஒலிம்பிக் பங்கேற்பாளர்களுக்கு My2022 செயலி கட்டாயம்: எச்சரிக்கும் சைபர் வல்லுநர்கள்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், சோஃபி வில்லியம்ஸ் & பிரான்செஸ் மாவ்
- பதவி, பிபிசி நியூஸ்
பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சீனாவின் பிரத்யேக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அது பயனர்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாக வழிவகுக்கலாம் என பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
My2022 என்கிற அந்தச் செயலியை, கொரோனா கண்காணிப்புக்காக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள், ஊடகத்தினர் என அனைவரும் பயன்படுத்துவர் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த செயலியில் குளிர்கால ஒலிம்பிக் தொடர்பான செய்திகள், வாய்ஸ் சேட்கள், கோப்பு பரிமாற்ற வசதிகள் அனைத்தும் இருக்கும்.
ஆனால் அச்செயலியில் உள்ள பல கோப்புகளுக்கு என்கிரிப்ஷன் வசதி வழங்கப்படவில்லை என சைபர் பாதுகாப்பு குழுவான சிட்டிசன் லேப் கூறியுள்ளது. சீனா அதை முழுமையாக மறுத்துள்ளது.
பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்க உள்ள பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க உள்ளவர்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் வெளியான போது செயலி குறித்த கேள்விகளும் எழுந்தன.
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க உள்ளவர்கள் பர்னர் ஃபோன்களைப் பயன்படுத்தவும், சீனாவில் தங்கி இருக்கும் காலத்துக்கு ஒரு தனி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுமாறு கடந்த செவ்வாய்கிழமை கூறியது சைபர் பாதுகாப்பு நிறுவனமான இன்டர்நெட் 2.0.
தங்கள் முக்கிய தொலைபேசிகளை தங்கள் நாட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லுமாறு, பல நாடுகள் தங்களின் விளையாட்டு வீரர்களிடம் கூறியுள்ளது.
தணிக்கை பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த செயலியில், தணிக்கை சொற்கள் அடங்கிய பட்டியலை கண்டுபிடித்ததாகவும் சிட்டிசன் லேப் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும் மற்றவர்கள் அரசியல் ரீதியில் கூறும் சர்ச்சைக்குரிய விஷயங்களை சுட்டிக்காட்ட அனுமதிக்கும் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
சீனாவின் பெருந்தலைவர்கள், அரசு முகமைகள், 1989ஆம் ஆண்டு ஜனநாயகத்துக்கு ஆதரவான தியானென்மென் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள், ஃபலுன் கோங் (சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது) என்கிற மதக் குழு என பல சொற்கள் அப்பட்டியலில் காணப்பட்டன.
இந்த பாதுகாப்பு குறைபாடுகள் சீனாவில் இருக்கும் செயலிகளில் காணப்படும் ஒன்று தான் என்றாலும், அது பயனர்களுக்கும் பெரிய அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது என பகுப்பாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'சட்ட விரோத சொற்கள்' என்கிற கோப்பு தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது போலத் தெரிகிறது, ஆனால் அது குறித்து இன்னும் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் அனைவரும் சீனாவுக்கு புறப்படுவதற்கு 14 நாட்கள் முன்பே அச்செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் கொரோனா குறித்த விவரங்களை தினமும் நிரப்ப வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வருபவர்கள், தங்களின் மிக முக்கிய தரவுகலான பாஸ்போர்ட் விவரங்கள், பயண விவரங்கள், தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருத்துவ விவரங்களை அச்செயலில் பதிவேற்ற வேண்டியுள்ளது. இவையனைத்தும் சீன அரசிடம் முன்பே சமர்பிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்செயலியில் உள்ள மென்பொருளில் பலவீனமான தகவல் பரிமாற்றங்கள் காணப்படுவதால், அச்செயலியைப் பயன்படுத்தும் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டால், ஹேக்கர்கள் எளிதில் தரவுகளைச் சுரண்டும் அபாயம் உள்ளது.
"தனி நபர்களின் அனைத்து தனிநபர் விவரங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய என்கிரிப்ட் செய்யப்படும்" என செவ்வாய்கிழமை சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது. மேலும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான எல்லா பிரச்சனைகள் மற்றும் கவலைகளையும் அப்பத்திரிகை நிராகரித்துள்ளது.
பரவலான பிரச்னைகள்

பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் காலத்தில் பாதுகாப்பு அபாயங்கள் இருக்கலாம் என சைபர் பாதுகாப்பு நிறுவனமான இண்டர்நெட் 2.0 ஏற்கனவே எச்சரித்துள்ளது.
பிபிசி கண்ட அறிக்கையில், பர்னர் போன்களைப் (குறைந்த காலம் பயன்படுத்திவிட்டு கைவிடும் போன்கள்) பயன்படுத்துமாறும், சீனாவிலிருந்து வெளியேறிய பின் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்பான்சர்களாக இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் தயாரிப்புகளைப் பார்க்க முடிந்தது. சீனாவில் பரவலாக கண்காணிக்கப்படும் கலாச்சாரம் இருப்பதையும், அதை மேற்கொள்வதற்கு போதுமான நவீன சாதனங்கள் இருப்பதையும் அது வெளிப்படுத்துவதாக இருந்தது.
க்வி- ஆங்ஷின் (Qi-Anxin) என்கிற ஒரு நிறுவனத்தின் விபிஎன் மென்பொருளால் கணிசமான அளவுக்கு பயனர்களின் தரவுகளைக் கைப்பற்ற முடிவதையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்களின் படி அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் அந்த தரவுகளைக் கேட்டுப் பெற்றலாம்.
"மேற்குலகத்தின் தனியுமை, சுதந்திரம் போன்ற மதிப்புகளை கருத்தில் கொண்டு சீனாவின் தேசிய தரவு பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே மேற்குலக நாடுகள் அளவுக்கு தரவு விஷயங்களில் சீன சட்டங்களில் பாதுகாப்பு கிடைக்காது" என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா சார்பாக சீனாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள், ஒரு புதிய சாதனத்தைப் பயன்படுத்த அமெரிக்கா ஊக்குவித்துள்ளதாக யூ.எஸ்.ஏ டுடே பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
அப்பத்திரிகை கண்ட செய்திக் குறிப்பு ஒன்றில், பர்னர் போன்கள், வாடகைக்கு பெற்ற அல்லது சில முறை பயன்படுத்திவிட்டு கைவிடும் கணினிகளை, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நபர்கள் பயன்படுத்த ஊக்குவிப்பதாக இருந்தது.
"கணினிகளைப் போலவே, போன்களில் பயன்படுத்தப்படும் தரவுகள், செயலிகள் ஆகியவை ஹேக் செய்யப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக" அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- "கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை " - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தலைவர் யார்? வரிசையில் திறமைசாலிகள், அனுபவஸ்தர்கள்
- உடற்பயிற்சி, வாழைப்பழம், திராட்சை மூலம் உடலுறவில் உச்சத்தை எட்ட முடியுமா?
- தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்கு: நோக்கம் நிறைவேறியதா?
- நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








