பா.இரஞ்சித் நேர்காணல்: "சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது"

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சிக்கு இது இரண்டாவது ஆண்டு.

கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கோவை, மதுரை மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியின் முதல் நாளில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பறை இசை, ஒப்பாரி, கானா, கிராமிய பாடல்கள் என மக்கள் ஆராவாரத்தோடு அரங்கம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்களுக்கான இசையையும், கலைஞர்களுக்கான வாய்ப்பையும் ஏற்படுத்துவதே நோக்கம் என்று கூறிய இயக்குநர் இரஞ்சித்திடம் இந்த நிகழ்வு குறித்தும் அவருடைய திரைப்பயணம் குறித்தும் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

மார்கழி மாத இசை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கர்நாடக இசைதான். அதைத்தாண்டி 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் பறை, கானா, ஒப்பாரி என மக்களிசை நிகழ்ச்சியாக இதை முன்னெடுத்போது தொடக்கத்திலும், இப்போதும் வரவேற்பு எப்படி இருக்கிறது?

"மக்கள் கிட்ட வரவேற்பு ரொம்ப நல்லா இருக்கு. நிறைய பேர் இதில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள். அதை முடிந்த அளவுக்கு நாங்களும் நிறைவேற்ற தேவையான முயற்சிகளை செய்து வருகிறோம். பொது வெளி, சமூக வலைதளங்கள், அச்சு, காணொளி ஊடகத்திலும் மக்களின் நல்ல வரவேற்பை காண முடிகிறது"

அடுத்த ஆண்டு மக்களிசை தமிழ்நாடுமுழுதும் நடக்குமா? இங்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

"இது ஒரு கொண்டாட்டமான மன நிலைக்கு மக்களை அழைத்து சென்றிருக்கிறது என்று நினைக்கிறேன். மதுரை, கோவை நகரங்களில் எல்லாம் நாங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு கூட்டம் வந்தது. கோவை, மதுரை நகரங்களில் எல்லாம் பரிசோதனை முயற்சியாகவே இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம்.

ஏனென்றால், இந்த நகரங்களில் எல்லாம் ஏற்கனவே நிறைய கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால், இது போன்ற நிகழ்வு நடந்தது இல்லை என்பதால் மக்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என காத்திருந்தபோது எதிர்பாராத அளவில் மக்கள் கூட்டம் வந்தது, எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. இன்னும் சரியான திட்டமிடுதலோடு நிகழ்ச்சியை நடத்தியிருந்தால் இன்னும் அதிக மக்கள் வந்திருப்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. அங்கிருந்த மக்களும் அதைத்தான் சொல்லியிருந்தார்கள். அடுத்த ஆண்டு இன்னும் பெரிதாக திட்டமிட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், பல கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்கள். மக்களும் இதில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தார்கள்."

இதற்கான கலைஞர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

"இதற்கான கலைஞர்கள் தேர்வுக்கு தனியாக ஆடிஷன் என்பது எல்லாம் இல்லை. இதற்காக சிறிய ஆய்வு நடத்துவோம். மேலும் பலரது இசை கேட்பது மூலமாகவும் இந்த தேர்வு நடக்கும். உதாரணமாக, மதுரை பகுதியில் நிகழ்ச்சி ஒப்பாரியோடுதான் தொடங்கினோம். இந்த ஒப்பாரி பாட்டு நிகழ்வு வழக்கமாக மதுரையில் உசிலம்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதியில் நடக்க கூடியதுதான். இப்படி அந்த வட்டாரத்தில் நடக்கக்கூடிய ஒப்பாரியை நிகழ்ச்சியில் வைத்தோம். இப்படி ஆராய்ச்சி மூலம்தான் கலைஞர்களை தேர்ந்தெடுப்போம்".

இசை வடிவம் சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

"மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். ஏனெனில், தமிழ்ச்சமூகத்தில் இசை என்பது மனிதர்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக நான் பார்க்கிறேன். பொழுதுபோக்கு மட்டும் என்றில்லாமல் மக்களுடைய உணர்ச்சிகளிலும் கலந்த வடிவமது. இசை மக்களை அழ வைக்கும், கோபப்பட வைக்கும் அப்படி உணர்ச்சிகளோடு கலந்தது. அந்த அளவுக்கு முக்கியமானது இசை.

அதன் வீரியத்தை உணர்ந்தே உலக நாடுகள் பலவற்றிலும் இசையை தடை செய்யும் அளவிற்கு அரசுகள் யோசித்துள்ளன.

பாப் மார்லியிலிருந்து பல இசைக்கலைஞர்கள் தங்களது நிலைப்பாட்டை சொல்லவும், எதிர்ப்பை பதிவு செய்யவும் இசையையே வலுவான ஆயுதமாகப் பயன்டுத்தினார்கள். இதில் பாப் மார்லியை மிக முக்கியமான உதாரணமாக பார்க்கிறேன். அவர்களுடைய பாடல்கள் எல்லாம் கேட்கும்போது அவ்வளவு உணர்வெழுச்சியாக இருக்கும். ஏனெனில் நிறத்தின் அடிப்படையில் அவர்களை ஒடுக்கும்போது அது குறித்தெல்லாம் பாடி இருக்கிறார்கள். எனக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள். இவர்களது இசையையும் நான் படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன்.

இசை என்பதைப் பொருத்தவரை மக்களிடம் ஏற்று கொள்ளப்பட்ட வடிவம் என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத வடிவம் என்று சில இருக்கின்றன. ஏற்றுக்கொள்ளாத வடிவத்திற்கு மக்களிடம் நெருக்கம் இல்லையா என்று கேட்டால் நிச்சயமாக நெருக்கமிருக்கிறது.

அப்போது அதன் முக்கியத்துவத்தை உணரச் செய்தால் போதுமானது. அந்த இசை அவர்களிடம் எந்த அளவுக்கு உணர்ச்சிப் பூர்வமாக தொடர்பு கொண்டுள்ளது, அதன் முக்கியத்துவம் என்ன, சமூக பிரதிபலிப்பாக அது எப்படி இருக்கிறது, கலாசாரத்தில் அதன் பங்கு என்ன... என்பதை புரிய வைத்தால் போதுமானது. நாம் பேசும் அரசியலை இன்னும் வலுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம்".

ஓவியக்கல்லூரி மாணவரான உங்களின் படக் கதைகளில் ஓவியங்களின் தாக்கம் குறித்து கவனிக்கப்பட்டு வருகிறது. மக்களிசை, கூகை போல ஓவியங்களுக்கான நிகழ்ச்சியோ அல்லது வேறு திட்டமோ இருக்கிறதா?

"ஓவியத்துக்காக தனியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதற்காக கலை - பண்பாட்டு மையம் கொண்டு வர வேண்டும். அதில் இசை, ஓவியம் என அனைத்தும் இருக்கும். இது குறித்து என் ஓவிய நண்பர்களுடனும் நான் பேசியிருக்கிறேன். விரைவில் அதற்கான வேலையை தொடங்குவேன். எனக்கு இதுபோல நிறைய ஆசைகள் உண்டு. ஆனால், அதற்கான வேலையை சேர்ந்து செய்வதற்கான நண்பர்களும் அதற்கான இடமும்தான் அமைய வேண்டும். இதில் நான் பேசும், விரும்பும் அரசியலும் உண்டு. இதெல்லாம் புரிந்து ஒன்றாக அமையும்போது நிச்சயம் ஆரம்பிப்பேன்".

சாதி பாகுபாடற்ற சமூகம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் இது போன்ற நாட்டுப்புற பாடல்களை எடுத்து செல்ல வேண்டும் என சொல்லியிருந்தீர்கள். அதற்கான பயணம் இன்னும் எவ்வளவு தூரம் எனக் கருதுகிறீர்கள்?

"இந்த காலக்கட்டத்தில் அது சாத்தியம் என்று நினைத்தே அனைத்தும் விரும்பி செய்து கொண்டிருக்கிறேன். இது புத்தருடைய காலத்தில் இருந்தே தொடங்கியது.

வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ள இந்த பாகுபாடுகளுக்கு எதிரான இந்த போராட்டம் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல பரிமாணங்களை கடந்தே தற்போதுள்ள நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் நாம் வாழும் சூழ்நிலையில் நானும் என்னை சார்ந்தவர்களும் எங்களுடைய சக்திக்குட்பட்டு என்ன செய்ய முடியுமோ அவற்றை செய்து கொண்டு இருக்கிறோம்.

சிலருக்கு அது அபரிமிதமாக தெரியலாம். ஆனால், என் இருப்பின் நிலையே எதிர்க் குரல்தான். அதனால், இந்த தளத்தில் என்னால் முடிந்ததை செய்கிறேன். என்னுடைய கருத்தை பயன்படுத்தி எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அதை செய்கிறேன். மாற்றத்துக்காகத்தான் நாம் அனைவரும் வேலை செய்கிறோம். அது நாம் வாழும் காலத்திலேயே நடந்தால் மகிழ்ச்சி".

'அட்டக்கத்தி' தவிர நீங்கள் இயக்கிய மற்ற படங்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு முழு திருப்தி இல்லை என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். அப்படி இருக்கும்போது 'சார்பட்டா பரம்பரை' இந்த ஆண்டில் பரவலான கவனம் பெற்ற ஒரு திரைப்படம். அது குறித்து உங்கள் மனநிலை என்ன?

"'சார்பட்டா பரம்பரை' எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்தான். ஆனால், அதை இன்னும் சரியாக எடுத்திருக்க வேண்டும் என தோன்றும். பொதுவாக அது கலைஞர்களுக்கே உரிய ஒரு பிரச்சனை. எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். இப்போது என்னுடைய பல படங்கள் பார்த்தாலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என தோன்றும்.

அந்த வகையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தை பார்வையாளர்கள் சரியாக புரிந்து கொண்டார்கள். என்னுடைய பல படங்கள் தொடர்ந்து பார்வையாளர்களிடம் சரியாக சென்று சேரவில்லையோ என்று நினைப்பேன். நான் பேசக்கூடிய கருத்துகள் தளத்தில் எதிரொலிக்கிறது என்பது எல்லாம் சரி. ஆனால் என்னுடைய திரைப்படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதில் எனக்கு கேள்வி இருந்தது.

அந்த வகையில் 'சார்பட்டா பரம்பரை' பெரும்பாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி. அதில் எனக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. தொடர்ந்து சரியாக வேலை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சார்பட்டா கொடுத்துள்ளது".

முழுவதும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் எடுக்க விருப்பம் உண்டா?

"தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' படம் முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதைதான். அதுதான் நீங்கள் எதிர்ப்பார்ப்பது போல, 'Heroine Centric' படமா என்பது இனிதான் தெரிய வரும். இன்னும் படத்தொகுப்பில் நான் உட்காரவில்லை".

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல் சினிமாவில் சாதி, மதம் பாகுபாடுகள் கிடையாது என கூறினார். இன்னொரு பக்கம் நீங்கள் சினிமாவில் சாதிய பாகுபாடுகள் இன்னமும் இருக்கிறது என கூறியிருந்தீர்கள்...

"என்னுடைய வாழ்வில் எனக்கு நடந்த நிகழ்வுகள் அடிப்படையில்தான் சில விஷயங்கள் பேசினேன். சினிமாவில் சாதி பார்க்கிறார்கள் என்று நான் பேசியது உண்மைதான். அது இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கிறது. படம் வெளிவரும்போது தியேட்டர் தரப்பு என சாதி இங்கு நவீன வடிவில் எதிராக நிற்கிறது. சாதி என்பது கிராமப்புறங்களில் வெளிப்படையாகவும் நகர்ப் புறங்களில் நவீனமாகவும் இருக்கும். அதேபோலதான், திரைத்துறையினரிடமும் சாதி நவீனமாகவும் அதன் அணுகுமுறை மாறியும் இருக்கிறது. அதை நடைமுறையில் எதிர்கொள்பவர்களுக்கு தான் பிரச்னை. அதை நான் அனுபவித்து இருக்கிறேன் என்பதால் அதை பேசுவேன்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: