1983 உலக கோப்பையில் ஒரு முறையல்ல, இரு முறை மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்த இந்தியா - வெற்றி வாகை சூடியது எப்படி?

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமே இந்தியாவில் பார்க்கப்பட்டு வந்த காலம் அது. 1983இல் இன்று போல எந்தவொரு தனி வீரரும் கிரிக்கெட்டின் கடவுளாக இந்தியாவில் போற்றப்படவில்லை.

கபில்தேவ் ராம்லால் நிகன்ச் என்கிற 25 வயது இளம் வீரர் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 60 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் உலக கோப்பை போட்டியில் மூன்றாவது முறையாக கலந்து கொண்டது. இன்று இந்திய கிரிக்கெட்டின் பிதாமகர்களாகப் போற்றப்படும் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, கபில்தேவ் ஆகியோர் அந்த அணியில் அங்கம் வகித்தனர்.

இருப்பினும், இங்கிலாந்தில் நடந்த 1983ஆம் ஆண்டு உலக கோப்பையில், இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? என பேச்சளவில் கூட இடமில்லாத சூழல் இருந்தது. காரணம் முந்தைய உலக கோப்பை தொடர்களில் இந்தியாவின் செயல்பாடு அத்தனை மோசமாக இருந்தது.

மோசம் என்றால்?

1975இல் தொடங்கப்பட்ட முதல் ஐசிசி உலக கோப்பை (அப்போது புரூடென்ஷியல் கோப்பை என்றழைக்கப்பட்டது) தொடரில், முதல் போட்டியே லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையில் நடந்தது. அதில் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி படுமோசமாகத் தோற்றது.

60 ஒவர்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 334 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. இந்தியாவோ 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்களை மட்டுமே குவித்தது. சுனில் கவாஸ்கர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை, ஆனால் 174 பந்துகளுக்கு 36 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

அடுத்த போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்க அணியை துவம்சம் செய்துவிட்டு, மூன்றாவது போட்டியில் நியூசிலாந்திடம் போராடி தோற்று உலகக் கோப்பை தொடரிலிருந்து குரூப் சுற்றிலேயே வெளியேறியது இந்தியா.

துரத்திய தோல்வி - துவளாத இந்தியா

1979 உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் தொடங்கியபோது, முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான இந்தியாவும், கடோத்கஜனான மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.

இந்த முறை ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன் தலைமையிலான அணியில், கபில்தேவும் இருந்தார். முதலில் பேட் செய்த இந்தியா முழுமையாக போராடி 60 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைக் குவித்தது. குண்டப்பா விஸ்வநாத்134 பந்துகளில் 75 ரன்களைக் குவித்து நம்பிக்கையூட்டினார்.

ஆனால் அஜானுபாகுவான தோற்றம், அசகாய தீரம், முந்தைய (முதல்) உலகக் கோப்பையை முத்தமிட்ட தெறிக்கும் நம்பிக்கையோடு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டர்கள் 51.3 ஓவரில் வெறும் 1 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களைக் குவித்து, இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தனர். கார்டன் க்ரீனிட்ஜ் 173 பந்துகளுக்கு 106 ரன்களைக் குவித்த ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிட்டத்தட்ட நியூசிலாந்து மற்றும் இலங்கையோடும் அதே கதிதான். மூன்று குரூப் போட்டிகளில் விளையாடிய இந்தியா, ஒரே ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் திணறியது. இந்த தொடரில் இந்தியா பெற்ற புள்ளிகள் எவ்வளவு தெரியுமா... 0. ஆம், குரூப் பிரிவில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் பூஜ்ஜிய புள்ளிகளோடு வெளியேறியது இந்தியா. மூன்று குரூப் போட்டிகளிலும் இந்தியா தனது 10 விக்கெட்டுகளை இழந்ததும் நினைவுகூரத்தக்கது.

சரி 1983-க்கு வருவோம்.

1983 ஜூன் 9ஆம் தேதி, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் மூன்றாவது உலக கோப்பையின் முதல் போட்டி தொடங்கியது.

ஒருபக்கம் இரு உலக கோப்பைகளை வென்று கொடுத்த க்ளீவ் லாய்ட்ஸ் தலைமையின் கீழ், கோர்டன் கிரீனிட்ஜ், விவயன் ரிச்சர்ட்ஸ் ஆகிய பேட்டர்கள், மால்கம் மார்ஷல், மைக்கெல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் போன்ற அபாயகர பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது.

மறுபக்கம் கபில்தேவ் தலைமையின் கீழ் சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், யஷ்பால் ஷர்மா போன்ற பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி ஆகியோரோடு களமிறங்கியது.

ம்ஹூம்... இந்தியாவெல்லாம் மேற்கிந்தியத் தீவுகளை வெல்லாது, அடுத்த வேலையைப் பார்ப்போம் என பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் ஆரூடம் கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால், களத்தில், இந்தியா தன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சியையும், மேற்கிந்தியத் தீவுகள் ரசிகர்களின் தலையில் இடியையும் இறக்க காத்திருந்தது.

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் டாஸை வென்ற மேகிந்தியத் தீவுகள், இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது.

கடந்தமுறை உலகக் கோப்பை போட்டிகளில் 200 ரன்களைக் கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த இந்தியா, இந்த முறை 60 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 262 ரன்களைக் குவித்தது. இந்தியா சார்பில் யஷ்பால் ஷர்மா 120 பந்துகளுக்கு 89 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார்.

மேற்கிந்தியத் தீவுகள் பேட் செய்யத் தொடங்கிய போது, 263 ரன்கள் என்பது மேற்கிந்தியத் தீவுகளுக்கு அல்வா சாப்பிடுவது போல என பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளணி 49 ரன்களில் இருந்த போது டெஸ்மாண்ட் ஹேன்ஸ் ரன் அவுட் ஆனார்.ஒரு விக்கெட் தானே பரவாயில்லை என ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் கார்டன் கிரீனிட்ஜ் விக்கெட்டை வீழ்த்தினார் பல்விந்தர் சந்து. ஆட்டம் மெல்ல இந்தியாவின் பக்கம் திரும்பத் தொடங்கியது.

இரண்டு விக்கெட் போனால் என்ன, இதோ விவியன் ரிச்சர்ட்ஸ் இருக்கிறார் என மேற்கிந்தியத் தீவுகளளின் ரசிகர்கள் நம்பிக்கையோடிருந்தனர். ரோஜர் பின்னி வீசிய பந்தில் சையது கிர்மானியிடம் கேட்ச் கொடுத்து உலகின் ஆதர்ச கிரிக்கெட் நாயகர்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ் வீழ்ந்தார். அவ்வளவு தான் அடுத்தடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் மிடில் ஆர்டர் பேட்டர்களை சடசடவென வீழ்த்தியது இந்திய பந்துவீச்சாளர்கள் படை. அதுவரை சாத்தியப்படாத, மனித கண்களால் நம்ப முடியாத ஒரு விஷயம் நடந்தது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ந்து போனார்கள்.

54.1 ஓவர்களில் 228 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் 10 விக்கெட்டுகளையும் இந்தியா வீழ்த்தியது. ரோஜர் பின்னி மற்றும் ரவி சாஸ்திரி தலா 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சந்து, மதன் லால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருந்தனர்.

கிரிக்கெட் உலகக் கோப்பையில் வீழ்த்த முடியாத சூரர்களைக் கொண்ட அணியையே, இந்தியா சரித்துவிட்டதால் மற்ற அணிகள் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி மீது ஒரு கண் வைத்தன.

குரூப் போட்டிகளில் இந்தியா அடுத்து ஜிம்பாபே உடன் மோதியது. 51.4 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைக் குவித்தது ஜிம்பாபே. இந்தியா 37.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 157 அடித்து வெற்றிக் களிப்போடு பெவிலியன் திரும்பியது.

பழி தீர்த்த மேற்கிந்திய தீவுகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மீண்டும் இந்தியா படுமோசமாகத் தோற்றது. 60 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 320 ரன்களைக் குவித்தது. ஆனால் இந்தியாவோ 37.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களுக்குள் சுருண்டது.

1983 உலக கோப்பை ரவுண்ட் ராபின் முறையில் நடந்ததால், ஒவ்வொரு அணியும் தங்கள் குரூபில் உள்ள அணிகளோடு இரண்டு முறை மோதின. அப்படி இந்தியா மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது.

முதல் தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்கக் காத்திருந்த உலக சாம்பியன்கள், இந்த முறை இந்தியாவிடம் உஷாராகவே விளையாடினர். முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 60 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்களைக் குவித்தனர். இந்தியாவோ 53.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 216 ரன்னில் சுருண்டது.

இந்தியாவின் இரு தோல்விகளுக்குப் பின், அதிர்ஷ்ட தேவதை இந்தியாவை கைவிட்டதாக ஒரு பெருங்கூட்டம் கருதியது. ஆனால் அசல் ஆட்டம், இந்த இரு பெரும் தோல்விகளுக்குப் பிறகு தான் காத்திருந்தது. அது உலகம் கபில் தேவையும், இந்தியாவையும் நினைவு கூரும் அற்புத ஆட்டமாக பரிணமித்தது.

நிமிருடா, திமிர திமிர நிமிருடா - இப்ப வந்து மோதுடா...

மீண்டும் ஜிம்பாபே உடன் லீக் போட்டி. டாஸ் வென்ற இந்தியா பேட் செய்யத் தீர்மானித்தது. சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர், அடுத்தடுத்து வந்த மோஹிந்தர் அமர்நாத், சந்தீப் பாட்டீல், யஷ்பால் ஷர்மா முறையே 5, 1, 9 ரன்களில் வெளியேறினர்.

அணியைத் தலைமைத் தாங்கி வழி நடத்திக் கொண்டிருந்த கபில் தேவ் களமிறங்கினார். ஆட்டத்தை மெல்ல மெல்ல இந்தியாவின் பக்கம் திருப்ப வேண்டியவர், பவுண்டரி மழை பொழிந்தார். கபில் தேவ் 138 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்களைக் குவித்தார். அதில் 6 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடக்கம். கடைசி வரை ஜிம்பாபே வீரர்களால் கபில்தேவை வீழ்த்த முடியவில்லை.

கபில்தேவின் இந்த 175 ரன்கள் தான், அவரது ஒருநாள் போட்டிகளிலேயே அவர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அணித்தலைவனின் அதிரடியால் இந்தியா 60 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைக் குவித்தது.

அடுத்து பேட் செய்த ஜிம்பாபே 57 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களுக்குள் சுருண்டது.

மீண்டும் ஆஸ்திரேலியா புன்னகை முகத்தோடு இந்தியாவை செல்ஸ்ஃபோர்டில் எதிர்கொண்டது. இந்த முறை முதலில் பேட் செய்த இந்தியா 55.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களைக் குவித்தது.

248 அடித்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்டர்களை ரோஜர் பின்னியும், மதன் லாலும் சடசடவென பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்தனர். இரு பந்துவீச்சாளர்களும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். 38.2 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா.

குரூப் பி பிரிவிலிருந்து மேற்கிந்தியத் திவுகளும், இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்தியா அரையிறுதிப் போட்டியில் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 60 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது. 214 அடித்தால் வெற்றி என களமிறங்கிய இந்தியா 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களைக் குவித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறம், பாகிஸ்தானை வெளியேற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றாவது முறையாக கோப்பையை முத்தமிட வந்தது. ஆனால் அதற்கு கபில்தேவின் படை, தடையாக இருந்தது.

1983 ஜூன் 25ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி துவங்கியது. டாஸை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.

சுனில் கவாஸ்கர் மற்றும் ஸ்ரீகாந்த் களமிறங்கினர். இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சுனில் கவாஸ்கர் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். நிதானம் காட்டிய ஸ்ரீகாந்த் இந்தியா 59 ரன்கள் குவித்திருந்த போது பெவிலியன் திரும்பினார். மோஹிந்தர் அமர்நாத் 26 ரன்கள் குவித்து போல்டானார். சில முக்கிய போட்டிகளில் இந்தியாவின் தடுப்பரணாக இருந்த யஷ்பால் ஷர்மாவும் சொற்ப ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்தடுத்து இந்திய பேட்டர்கள் சரிய இந்தியா 54.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களைக் குவித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அனுபவம் வாய்ந்த சூரர்கள் நிறைந்த அணிக்கு, இதெல்லாம் ஜுஜுபி என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டர்களை பந்தாடப் போகிறார்கள் என்பதை உலகம் அப்போது அறிந்திருக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக கார்டன் மற்றும் டெஸ்மண்ட் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

ஐந்து ரன்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் கார்டனின் விக்கெட்டை வீழ்த்தி, மேற்கிந்தியத் தீவுகளின் ரசிகர்கள் தலையில் பேரிடியை இறக்கினார் பல்விந்தர் சந்து. சுதாரித்துக் கொண்டு விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடிக் கொண்டிருந்த டெஸ்மண்டை, அவர்கள் அணி 50 ரன்கள் குவித்திருந்த போது வீழ்த்தினார் மதன் லால். பந்துகளை பவுண்டரிகளுக்கு தெறிக்கவிடும் விவியன் ரிச்சர்ட்ஸையும் வீழ்த்தி வெளியேற்றினார் மதன் லால்.

லாரி கோம்ஸை மதன் லாலும், மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் க்ளீவ் லாய்டை ரோஜர் பின்னியும் வீழ்த்தி எதிரணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். ஜெஃப் டுஜான் (விக்கெட் கீப்பர்) மற்றும் மால்கம் மார்ஷல் மட்டுமே முறையே 25, 18 ரன்களைக் குவித்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர்.

52 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு மேற்கிந்தியத் தீவுகள் 140 ரன்களுக்குள் சுருண்டது.

ஆம், இரு உலகக் கோப்பைகளை தன் வசப்படுத்திய க்ளீவ் லாய்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியை, கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

மோஹிந்தர் அமர்நாத், மதன் லால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டுகளையும் கபில்தேவ் மற்றும் ரோஜர் பின்னி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி, 140 ரன்களுக்குள் மேற்கிந்தியத் தீவுகள் எனும் சூரர்களை வீழ்த்தினர்.

உலோகத்தில் மணம் தெறிக்க, உலகக் கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டது இந்தியா.

அந்த முத்தம், அடுத்த பல தலைமுறைகள் மனதில் கிரிக்கெட் எனும் விருட்சம் வளர விதையிட்டது. இன்று இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் அந்தஸ்து, புகழ், மரியாதை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கொடுக்கப்படும் மரியாதை என எல்லாம்... எல்லாம் அந்த ஒரு பிரமாண்ட வெற்றியில் தொடங்கியதுதான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: