You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராக்கி - திரை விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் 'ராக்கி' படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிருந்தால் முழுப் படமும் எப்படியிருக்கும் என்ற எண்ணமே அச்சமூட்டியது.
படத்தின் கதை இதுதான்: சிறையில் இருந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய பகைவனான மணிமாறன் (பாரதிராஜா) இவனைப் பழிவாங்கத் துடிக்கிறான். இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை குருதி கொப்பளிக்கச் சொல்கிறது இந்த 'ராக்கி'.
படத்தின் துவக்கத்தில் நாயகன் சிறையில் இருந்து வெளிவந்ததைத் தொடர்ந்து வரும் காட்சிகள், 70களிலும் 80களிலும் வெளிவந்த 'கலைப்' படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு வந்து விட்டோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், படம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கும்போது அட்டகாசமான உணர்வை ஏற்படுத்துகிறது.
கதை என்று பார்த்தால், ஒரு கடத்தல் கும்பல், அவர்களுக்குள் நடக்கும் மோதல், பழிவாங்கல் என்ற சாதாரணமான கதைதான். ஆனால், அதனைப் படமாக்கியிருக்கும் விதத்திலும் கதையைச் சொல்லியிருக்கும் விதத்திலும் வேறு ஒரு உயரத்திற்குப் படத்தைக் கொண்டுபோயிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
ஒரு திரைப்படத்தில் 'நான் லீனியர்' பாணியில் கதை சொல்வது வழக்கமானதுதான். ஆனால், இந்தப் படம் ஒரு நான் - லீனியர் நாவலைப் படிப்பதைப் போல அமைந்திருக்கிறது. சில தருணங்களில் ஒரு கவிதையைப் படிப்பதைப் போல இருக்கிறது. ஒரே காட்சியில் அத்தனை அடுக்குகள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் ரத்தத்தின் வாடை வீசுகிறது.
இந்தக் கதையின் முக்கியமான முடிச்சுகள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ஃப்ளாஷ் - பேக் மூலம் அவிழ்ந்துகொண்டே வருவது சிறப்பாக இருக்கிறது.படத்தின் கடைசிக் காட்சிவரை ஆச்சரியத்தைத் தக்கவைக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்தில் காட்டப்படும் வன்முறை, சாதாரண மனம் கொண்டவர்களால் சகித்துக்கொள்ளத் தக்கதல்ல. சுத்தியலால் மண்டை ஓடு நொறுங்கும்வரை அடித்துக் கொல்வது, குத்தூசியால் குத்திக் கொல்வது, ஆணியால் கண்களில் குத்துவது, சடலத்தை வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றுவது, குடலை உருவி மாலையாகப் போடுவது என வன்முறையை ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல இந்த வன்முறை பார்வையாளர்களுக்கு பழக ஆரம்பிக்கிறது. கூடுதல் வன்முறையை மனம் எதிர்நோக்குகிறது. ஒரு வகையில் வன்முறையின் வாசனையையும் சுவையும் இந்தப் படத்தில் பழகத் தந்திருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக வரும் வசந்த் ரவியின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் தென்படுவதில்லை. ஆனால், பாத்திரத்திற்கு பொருத்தமான நபராகவே இருக்கிறார். மணிமாறனாக வரும் பாரதிராஜா, கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவைப் போலவே தூள் கிளப்புகிறார் (டைட்டிலில் முதலில் இவர் பெயர்தான் வருகிறது). தன் மகனை வழிக்குக் கொண்டுவர துருப்பிடித்த பிளேடால், விரலை நறுக்கச் சொல்லும் காட்சியில், அவர் குரலை உயர்த்தும்போது திரையரங்கே அமைதியாகிவிடுகிறது.
படத்தில் தன்ராஜ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. சடலங்களின் மீது புல்டோசர் ஏற்றி சகதியாக்கும் பாத்திரம் அது. சமீப காலத்தில் வேறு எந்தப் படத்திலும் இப்படி ஒரு பாத்திரத்தைப் பார்த்ததாக நினைவில்லை.
இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் Old Boy போன்ற பல திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றன. முதலில் செய்த ஒரு கொலைக்காக பல ஆண்டுகள் சிறியிலிருந்துவிட்டு வரும் நாயகன், வெளியில் வந்ததும் கொடூரமாக பல ஆட்களைக் கொன்று குவிக்கிறார். காவல் துறையே கண்ணில் படுவதில்லை. அதேபோல, ஒரே நபர் 20, 30 பேரை அடித்துத் துவம்சம் செய்வதும் சற்று அதீதமாகப்படுகிறது.
ஆனால், படத்தின் உச்சகட்ட காட்சி இருக்கிறதே, அந்தக் காட்சி இந்தக் குறைகள் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது. அந்த ஒரு காட்சியில்தான் எத்தனை விஷயங்கள் தெரியவருகின்றன?
இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு இணையாகப் பாராட்டத்தக்கவர், ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் க்ருஷ்ணா. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார் மனிதர். அதேபோல, தர்புகா சிவாவின் இசை, காட்சிகளுக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கிறது. ஒரு சண்டைக் காட்சியில் மிருதங்கம் ஒலிக்கிறது. வேறு பல காட்சிகளில் மௌனமே இசையாக அமைகிறது.
ராக்கி - வன்முறையின் அழகியலை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறது.
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்