You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியா கன மழை: கோலாலம்பூர் முடங்கியது; மீட்புப்பணியில் ராணுவம் - மிரளவைக்கும் காட்சிகள்
மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது.
ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி அன்று பருவ மழைக்குரிய காரணிகளுடன் தென் சீனக் கடலில் கடற்பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையும் சேர்ந்து கொண்டதால், இந்த அடைமழை பெய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் இவ்வாறு நிகழும் என்று மலேசிய சுற்றுச்சூழல் அமைச்சின் தலைமை இயக்குநர் ஸைனி உஜாங் (Zaini Ujang) தெரிவித்துள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக, 2,400 மில்லிமீட்டர் மழை பொழியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் 363 மில்லிமீட்டர் மழை பதிவானதாக தெரிவித்துள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் 380 மில்லிமீட்டர் மழை பதிவானதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.
மோசமாக பாதிக்கப்பட்ட எட்டு மாநிலங்கள்: 60 ஆயிரம் பேர் மீட்பு
இந்த அடைமழை காரணமாக மலேசியாவின் எட்டு மாநிலங்களில் மோசமான அளவில் உயிருடற் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அறுபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்கள் மூலம் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படக் கூடாது என்பதால் அனைவருக்கும் கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல்வேறு பகுதிகளில் வீட்டின் முதல் தளம் வரை மழை வெள்ளநீர் தேங்கியுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் காவல்துறையைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் மஸ்லான் லஸிம் (Mazlan Lazim) தெரிவித்துள்ளார்.
வழக்கத்துக்கு மாறாக பெய்த மழை
மலேசியாவில் பருவமழைக் காலத்தில் அதன் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு அந்நிலை மாறி, ஒட்டுமொத்த தீபகற்ப மலேசியாவிலும் குறிப்பாக, மத்திய கிழக்கு கடலோர மற்றும் வடக்கு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்ந்துள்ளது என்று ஸைனி உஜாங் கூறியுள்ளார்.
எனினும், பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், மலாக்கா ஜலசந்தியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மலேசியாவை விட்டு விலகி அந்தமான் கடற்பகுதியை நோக்கிச் சென்றுவிட்டது என்றும், இதன் காரணமாக மழைத்தாக்கம் வேகமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கோலாலம்பூரை முடக்கிய மழை
இம்முறை மழையின் கோரத்தாண்டவத்தால் சிலாங்கூர் மாநிலமும், தலைநகர் கோலாலம்பூரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூரின் 21 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் முழங்கால் அளவுக்கும் மேல் தேங்கி நின்றதால் அச்சாலைகள் மூடப்பட்டன.
பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்களும் பதிவாகி உள்ளன. இதையடுத்து, மீட்பு மற்றும் துப்புரவுப் பணிகளில் வடிகால் மற்றும் பாசனத்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 1,275 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரதமர் மருமகன் மீட்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை
இதற்கிடையே, மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பின் மருமகன் ஜோவியன் (Jovian Mandagie) வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அரசு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமரின் மருமகனுக்கு மட்டும் சலுகையா? என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தாம் சொந்த செலவில் தனியார் ஹெலிகாப்டரை வாடகை அடிப்படையில் பயன்படுத்தியதாக ஜோவியன் விளக்கம் அளித்துள்ளார்.
மீட்புப் பணியில் களமிறக்கப்பட்ட ராணுவம்
மீட்புப் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்துவது தொடர்பாகவும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் முன்பே, ராணுவத்தினர் களமிறங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள் என மூத்த தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.
வெள்ளப்பெருக்கு மோசமாக உள்ள பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், சிறார்களை ராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்கப்படுவது தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாநிலங்களுக்கு எச்சரிக்கை
இதற்கிடையே, அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும், இதன் காரணமாக நாட்டின் வட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது, கிழக்கு திசையில், மலாக்கா நீரிணை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் குறைவு என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் ஹெல்மி அப்துல்லாஹ் (Helmi Abdullah), வட மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, பிப்ரவரி மாதம் வரை மலேசியா முழுவதும் கனமழை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, இதுபோன்ற மோசமான மழை அனுபவங்களை மீண்டும் எதிர்கொள்ள நேரிடுமோ எனும் கவலை மலேசியர்கள் மத்தியில் நிலவுகிறது.
பிற செய்திகள்:
- நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார்
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு?
- ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி தமிழ் கள நிலவரம்
- மியான்மர்: பொதுமக்களை சித்ரவதை செய்து கொன்ற ராணுவம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்