You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பருவநிலை மாற்றம்: இந்தியா கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையுமா?
- எழுதியவர், ஷ்ருதி மேனன்
- பதவி, உண்மை பரிசோதிக்கும் குழு, பிபிசி
பிரிட்டனில் ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் தனது திட்டத்தை இந்தியா அறிவிக்கவுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.
இந்தியாவின் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் பொருளாதாரம் ஆகிய காரணங்களால் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை குறைக்க உடனடியாக அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுவரை இந்தியா அளித்துள்ள உறுதி என்ன?
ஒட்டுமொத்த கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான இலக்கை நிர்ணயிக்க இந்தியா மறுத்துவிட்டது. பலகாலமாக தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் கார்பன் வெளியேற்றத்தில் பெரும் பங்கு வகித்ததால் அதனை குறைக்க அவை பெரும் பங்கை ஆற்ற வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் "உமிழ்வு தீவிர இலக்கு" ("emissions-intensity" target) பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்கான ஒரு சரியான அளவு கோலாக இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. வேறு விதமாகச் சொல்வதானால், யார் எந்த அளவுக்கு பருவநிலை மாற்றத்துக்கு காரணமான அளவில் கார்பனை உமிழ்ந்திருக்கிறார்களோ , அந்த தீவிரத் தன்மைக்கு ஏற்ற வகையில் அந்த நாட்டுக்கான இலக்கை நிர்ணயிப்பது 'உமிழ்வு தீவிர' இலக்கு எனப்படுகிறது.
2005ஆம் ஆண்டிலிருந்து 2030ஆம் ஆண்டிற்குள் உமிழ்வு தீவிர இலக்காக 33 - 35%ஐ இந்தியா நிர்யணித்துள்ளது. இருப்பினும் கார்பன் அளவு குறைந்தால் அதன்பொருள் ஒட்டுமொத்த உமிழ்வு குறைகிறது என்பது பொருள் இல்லை.
மேலும் புதைபடிம எரிபொருளை சார்ந்தே சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவே நாட்டின் பசுங்குடில் வாயு வெளியேற்றத்திற்கான முக்கிய காரணம்.
அரசுகளுக்கிடையேயான பருவநிலை மாற்ற குழுவான ஐபிசிசி, நாடு வெளியேற்றும் மொத்த பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்ற அளவை 2050ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியமாக கொண்டிருப்பதே, வெப்பநிலை அதிகரிப்பை, தொழில்புரட்சிக் காலத்தில் இருந்த அளவை விடக் கூடுதலாக 1.5 டிகிரி செல்சியசுக்கும் கீழ் வைத்திருக்க உதவும் என்கிறது.
இந்த இலக்கை அடைவோம் என 130 நாடுகள் வெளிப்படையாக உறுதியளித்துள்ளன. ஆனால் இந்தியா இன்னும் தனது உறுதியை அளிக்கவில்லை.
2015ஆம் ஆண்டு, இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாவது காற்றாலை, சூரிய சக்தி மற்றும், நீர் மின் ஆலைகள் மூலம் 175 கிகா வாட் வரை மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் என உறுதியளித்திருந்தது.
ஆனால் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெறும் 100 கிகா வாட் என்ற இலக்கை மட்டுமே அடைந்துள்ளது.
அதேபோன்று 2015ஆம் ஆண்டிற்குள் புதைப்படிமம் அல்லாத வகையில் 40% மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என உறுதியளித்திருந்தது என சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்திருந்தது. 2019ஆம் ஆண்டு இது வெறும் 23%ஆக உள்ளது.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட நாடுகளின் இலக்கு குறித்து கண்காணித்து வரும் CAT (Climate Change Acition Tracker)இந்தியாவின் இந்த இலக்கு போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளது.
இதற்கு வளரும் நாடான இந்தியாவுக்கு சர்வதேச நாடுகளின் உதவி தேவை என CAT-ன் சிண்டி பாக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.
மேலும் கார்பனை ஒழிக்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
"அதேபோன்று நாட்டிற்கு எவ்வளவு உதவி தேவை எங்கு தேவை என்பதற்கான எந்த இலக்கும் இல்லை," என்கிறார்.
இந்தியாவின் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறதா?
இந்தியாவின் தெற்கு பகுதியில் மரம் நடும் திட்டங்கள் பல நடைபெற்று வந்தாலும், வட கிழக்கு பகுதிகள் பல தங்களது காடுகளை இழந்து வருகின்றன.
2030ஆம் ஆண்டிற்குள் 2.5-3 பில்லியன் டன் கூடுதல் கரியமில வாயுக்களை கிரகிக்க போதுமான மரங்களை நட இந்தியா திட்டமிட்டுள்ளது.
மேரிலாண்ட் பல்கலைக்கழகம், கூகுள், அமெரிக்க புவியியல் கணக்கெடுப்பு மற்றும் நாசா ஆகியவற்றின் இணைந்த முயற்சியான சர்வதேச காடுகள் கண்காணிப்பு 2001 மற்றும் 2020ஆண்டுக்கு இடையில், இந்தியா தனது அடிப்படை காடுகளில் 18% இழந்துள்ளது மற்றும் 5% அளவில் மரங்கள் கொண்ட பகுதியை இழந்துள்ளது.
ஆனால் இந்தியாவின் கணக்கெடுப்பு தரவு 2001 மற்றும் 2019ஆண்டுக்கிடையே 5.2% அளவில் காடுகள் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
சர்வதேச காடுகள் கண்காணிப்பு 5 மீட்டரை காட்டிலும் உயரமான மரங்களை மட்டுமே கணக்கெடுப்பதால் இந்த வித்தியாசம் ஏற்படலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்