பிரிட்டன் விவசாய நிலத்தில் பழங்கால மாளிகை, மொசைக் அடையாளங்கள் கண்டெடுப்பு

பட மூலாதாரம், HISTORIC ENGLAND
புகழ்பெற்ற இதிகாசக் கவிஞர் ஹோமர் எழுதிய பண்டைய கிரேக்க இலக்கியம் ஈலியாட்டில் இடம்பெற்ற ட்ரோஜன் போரை காட்சிப்படுத்தும் வகையிலான மொசைக் அடையாளங்கள் மற்றும் பழங்கால மாளிகை ரட்லாண்டில் உள்ள விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் இத்தகைய மொசைக் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது.
பிராயன் நேய்லோர் என்பவரது விவசாய நிலத்தில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவருடைய மகன் ஜிம் இர்வைன் தான் இதனை முதலில் கண்டெடுத்தார்.
2020 ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் நடைப்பயிற்சியின்போது, ஒரு வித்தியாசமான மண்பாண்டத்தைக் கண்டெடுத்தார் ஜிம் இர்வைன். பின்னர், அதுகுறித்து, லிஸ்டர்ஷர் நிர்வாகத்தின் தொல்லியல் ஆய்வுக்குழுவுக்குத் தகவல் அளித்தார்.
"இந்த நிலத்தில் எங்கள் குடும்பத்தினர் 50-60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு, கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின்போது, மண்பாண்டம் ஒன்றைக் கண்டெடுத்தேன். அது, வழக்கமான மண்பாண்டம் போல் இல்லை.
பின்னர், நான் மண்வெட்டியைக் கொண்டு அங்கு தோண்டினேன். அப்போது, நான் சரியான இடத்தில் இருந்தேன்.
1700 ஆண்டுகளுக்கும் மேலாக எதனாலும் பாதிக்கப்படாத ஒன்றை பார்ப்பது ஆச்சர்யமாக இருந்தது." என்றார் ஜிம் இர்வைன்.
"இந்த இடத்திலிருந்து அடுத்து என்ன வரப்போகிறது என்பதே என்னை ஆர்வம் கொள்ளச் செய்தது. ஏனெனில், இதுவரை இங்கு கண்டெடுக்கப்பட்ட அனைத்தும் ஆச்சர்யமானதே."
ஜிம் இர்வைன் இந்த இடம் குறித்துத் தகவல் அளித்ததும், லெஸ்டர் பல்கலைக்கழக தொல்லியல் வல்லுநர்கள் அங்கு ஆராய்ந்தனர். மொசைக் மற்றும் மாளிகையை பாதுகாக்கப்பட்ட இடமாக பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் டி.சி.எம்.எஸ். அறிவித்துள்ளது.
இந்த மாளிகை, ரோமானிய காலத்துக்குப் பிற்பகுதியில் வாழ்ந்த செல்வந்தர் ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

பட மூலாதாரம், HISTORIC ENGLAND
11 மீ*7 மீ அளவுள்ள இந்த மொசைக், உணவு உண்ணும் அறை அல்லது பொழுதுபோக்கு அறையின் தளத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ரோமப் பேரரசில் தனிநபர் மற்றும் பொது கட்டிடங்களுக்கு மொசைக்குகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த மொசைக்குகளில் பெரும்பாலும், இதிகாச கதாப்பாத்திரங்களே இடம்பெறும்.
எனினும், ஹெக்டருடனான அக்கில்லீஸின் ட்ரோஜன் யுத்தம், இந்த மொசைக்கில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால், இந்த மொசைக், ஐரோப்பாவில் தனித்துவமாக கருதப்படுகிறது.
"பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மொசைக்" என இது வர்ணிக்கப்படுகிறது.
பிபிசி நிருபர் பில் மேக்கி நிகழ்விடத்திலிருந்து அளித்த பகுப்பாய்வு
இந்த மாளிகை எங்கு கண்டெடுக்கப்பட்டது என எனக்குத் தெரியும். ஆனால், அதுகுறித்த அதிக தகவல்களை அளிக்க நான் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், இங்கு யாரும் வந்து, அவர்களின் சொந்த ஆய்வுகளை மேற்கொள்ளவும், அதனால் அவ்விடத்துக்குத் தொந்தரவை ஏற்படுத்தவும், தொல்லியல் ஆய்வுக்குழு விரும்பவில்லை.
தற்போது, மொசைக் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இது 2 அடி (0.6 மீ) அடுக்கு மண்ணுக்கு அடியில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது, மேலும், அது மீண்டும் நிலத்தடியில் இருப்பதால் இனி எந்தத் தீங்கும் வராது.
இங்கு மக்கள் நேரடியாக பார்க்கும் நாள் விரைவில் வரும் என நம்புகிறார் ஜிம் இர்வைன். எனினும், அதன் எதிர்காலம் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

அகழாய்வில் தோண்டப்படும் இந்த விவசாய நிலம் மிகப்பெரியது. ஆதலாம், மிகச்சிறிய அளவிலேயே இதுவரை தோண்டப்பட்டுள்ளது. வரும் காலத்தில், இன்னும் பல கண்டெடுக்கப்படலாம்.
இந்த மாளிகை களஞ்சியங்கள், வட்ட வடிவ கட்டமைப்புகள், குளியல் அறையைக் கொண்டிருப்பது அகழாய்வில் தெரியவந்துள்ளது.
கி.பி 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சங்க இலக்கியம் பற்றிய அறிவுள்ள ஒருவரால் இந்த மாளிகை கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

பட மூலாதாரம், HISTORIC ENGLAND
லெஸ்டர் பல்கலைக்கழக துணை இயக்குநரும் இந்த அகழாய்வின் திட்ட மேலாளருமான ஜான் தாமஸ், "கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்டவற்றில் இந்த மொசைக் மயிர்க்கூச்செறியும் கண்டெடுப்பாக உள்ளது.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குறித்தப் புதிய பார்வைகள், சங்க இலக்கியம் மீதான அவர்களின் தொடர்புகள், இதனை வடிவமைத்த தனிநபர் குறித்து இவை நமக்குச் சொல்கின்றன.
சங்க இலக்கியங்கள் குறித்து அறிந்த, அதனை இத்தனை நுணுக்கத்துடன் செயல்படுத்தும் அளவுக்குப் பணபலம் கொண்ட ஒருவராலேயே இது உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். இலக்கியங்களை இப்படி உருவகப்படுத்தும் வகையிலான கண்டெடுப்புகள், இதுவரை பிரிட்டனில் கண்டெடுக்கப்படவில்லை." என்றார்.

பட மூலாதாரம், HISTORIC ENGLAND
பிரிட்டன் அரசின் கீழ் இயங்கு ஹிஸ்டாரிக் இங்கிலாந்தின் முதன்மை செயல் அதிகாரி டன்கன் வில்சன், "இந்த அளவிலான அரிய மொசைக் மற்றும் சுற்றியுள்ள மாளிகையைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
வரலாறு குறித்து அறிய இத்தகைய கண்டெடுப்புகள் முக்கியம். இதனைப் பாதுகாப்பதன் மூலம், நாம் தொடர்ச்சியாக ஆராய முடியும். மேலும், இதிலிருந்து 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் குறித்து, வருங்கால அகழாய்வுகள் நமக்குக் கற்றுத்தருவதை எதிர்நோக்கலாம்."
இந்த நிலம், தனிநபருக்குச் சொந்தமானது. எனவே, பொதுமக்களால் பயன்படுத்த முடியாது. எனினும், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதை வேறொரு இடத்தில் காட்சிப்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பட மூலாதாரம், HISTORIC ENGLAND
இந்த இடத்தில் அடுத்து 2022-ம் ஆண்டில் அகழாய்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












