நரேந்திர மோதியின் காலநிலை மாற்றத்திற்கான வாக்குறுதி: இந்தியா நிறைவேற்றப்போவது எப்படி?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Pib india

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பிரிட்டனின் க்ளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் 2070ல்தான் இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜ்ய நிலையை எட்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருக்கிறார். ஆனால், பிரதமரின் உரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து சூழலியலாளர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.

க்ளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் காலநிலை மாநாட்டில் திங்கட்கிழமையன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி என்ன பேசப்போகிறார், என்ன வாக்குறுதிகளைக் கொடுக்கப்போகிறார் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா அதிகம் கார்பன் உமிழ்வை வெளியிடும் நாடாக இருக்கிறது. ஆகவே, இந்தியா காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு என்ன செய்யப்போகிறது என்பது தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, 2070ஆம் ஆண்டில், இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜ்யநிலையை எட்டுமெனத் தெரிவித்தார். உலக அளவில் கார்பன் உமிழ்வை 2050ல் பூஜ்ய அளவுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு மேலும் 20 ஆண்டுகள் கால அவகாசம் கோரியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் முக்கியமாக ஐந்து விஷயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதாவது,

1. 2070ல் இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜ்ய நிலையை அடையும்.

2. 2030ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகா வாட்டாக அதிகரிக்க இந்தியா உறுதியளிக்கிறது.

3. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும்.

4. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும்.

5. 2030ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் கார்பனின் சார்பை 45 சதவிகிதம் குறைப்போம்.

மேலும் தனது உரையில், காலநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, கார்பன் உமிழ்வு தொடர்பான உறுதியை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது என்று தெரிவத்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியா 4ஆவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மின் உற்பத்தியில் 70% நிலக்கரியை நம்பியே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மின் உற்பத்தியில் 70% நிலக்கரியை நம்பியே உள்ளது.

இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அடிக்கடி ஏற்படும் புயல், வெள்ளம், மழை காரணமாக பயிரிடும் முறைகள் மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் திட்டங்கள் இருந்தாலும், பாதிப்பின் அபாயத்தில் இருக்கும் நாடுகளுக்கான உதவிகள் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.

கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவர உலகிற்கு 2050ஆம் ஆண்டு என்ற கெடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா கூடுதலாக இருபது ஆண்டுகளைக் கோரினாலும் இது ஒரு முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. காரணம், இதற்கு முன்பாக இந்தியா கார்பன் உமிழ்வில் பூஜிய நிலை குறித்து எந்த வாக்குறுதியையும் தந்ததில்லை. முதல் முறையாக அந்த வாக்குறதியை இந்த மாநாட்டில் தந்திருக்கிறது.

வளர்ந்த நாடுகளின் தனிமனித கார்பன் உமிழ்வை ஒப்பிடும்போது, இந்தியாவின் தனிமனித கார்பன் உமிழ்வு என்பது மிகக் குறைவுதான். 2019ல் இந்தியாவில் தனிமனித கார்பன் உமிழ்வு 1.9 டன்கள். ஆனால், அமெரிக்காவில் இது 15.5 டன்களாகவும் ரஷ்யாவில் 12.5 டன்களாகவும் இருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பை அமலாக்குவதற்கான திட்டமிடல் இந்தியாவிற்கு இருக்கிறதா என கேள்வி எழுப்புகிறார்கள் சூழலியலாளர்கள்.

"2030ஆம் ஆண்டில் புதுப்பிக்க எரிசக்தித் திறனை 500 கிகா வாட்டாக அதிகரிக்க இந்தியா உறுதியளித்திருக்கிறது. ஆனால் இன்னும் 9 ஆண்டுகளில் ஐந்து லட்சம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எப்படி உற்பத்தி செய்யப்போகிறோம். அதற்கான திட்டமிடல் என்ன இருக்கிறது?" எனக் கேள்வியெழுப்புகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ. சுந்தர்ராஜன்.

கோ. சுந்தர்ராஜன்
படக்குறிப்பு, கோ. சுந்தர்ராஜன்

மேலும், 2030க்குள் இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்படும் என்றும் கார்பன் உமிழ்வு ஒரு பில்லியன் டன் அளவுக்குக் குறையுமென்றும் சொல்லியிருப்பது குறித்தும் சூழலியலாளர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

"இவ்வளவு பெரிய அளவுக்கு கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படுமென்றால், அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்து சொல்ல வேண்டும். அப்படி ஏதும் இல்லை. தவிர, நமது கார்பன் உமிழ்வை பூஜ்ய நிலைக்குக் கொண்டுவர 2070வரை பிரதமர் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால், அதிக உமிழ்வை வெளியிடும் சீனாவே 2050ல் பூஜ்ய நிலைக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இதையெல்லாம்விட முக்கியமான விஷயம், கார்பன் உமிழ்வில் நாம் எப்போது உச்சகட்ட நிலையை (Corban Peak)அடைவோம் என்பதைத் தெரிவித்திருக்க வேண்டும். அதைவைத்துத்தான் குறைப்பது குறித்து திட்டமிடமுடியும். அதைப் பற்றி இப்போதுவரை எந்தத் தகவலும் இல்லை" எனச் சுட்டிக்காட்டுகிறார் சுந்தர்ராஜன்.

ஆகவே இந்தியாவைப் பொறுத்தவரை, தான் அளித்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை உருவாக்குவது குறித்தும், கார்பன் உமிழ்வை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்பது குறித்தும் தெளிவான வழிமுறைகளையும் இலக்குகளையும் முன்வைக்க வேண்டுமென்கிறார்கள் சூழலியலாளர்கள்.

காரணம், உலகின் வெப்பநிலை யாரால் அதிகரித்தாலும் இந்தியாவுக்கான பாதிப்பு வெகு அதிகமாகவே இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :