You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித்: ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்களும், சுவாரசிய செய்திகளும் #30YearsOfAjith
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் அஜித் திரையுலகிற்குள் நுழைந்து 30 வருடத்தை நிறைவு செய்கிறார். 1990களில் சினிமாவில் அறிமுகமாகி, 'ஆசை' நாயகனாக வலம் வந்து, 'காதல் கோட்டை'யில் மன்னனாக பரிணமித்து, இப்போது சினிமா துறையில் அஜித்தின் 'வலிமை', ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அவர் விடுத்த செய்தியில் ''ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும் வெறுப்பாளர்களின் வெறுப்பையும் நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். வாழு & வாழவிடு!நிபந்தனையில்லாத அன்பு எப்போதும்!!" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாக இருக்கிறது 'வலிமை' திரைப்படம். மேலும், அஜித் சினிமாவிற்குள் நுழைந்து 30 வருடத்தில் நுழைவதை அடுத்து படத்தின் முதல் பாடலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியானது. அவரது 30 வருட திரையுலக பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
• 'வாழு, வாழ விடு' என்பதுதான் நடிகர் அஜித்தின் தாரக மந்திரம். சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'வலிமை' படத்தின் முதல் பாடலான 'நாங்க வேற மாதிரி'யில் இந்த வரியை மறக்காமல் இணைத்திருக்கிறார் பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்.
• தமிழில் முதன் முதலில் 'அமராவதி'யில் அறிமுகமானாலும் அதற்கு முன்பே தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அஜித்.
• அவரது ஆரம்ப காலக்கட்ட சினிமா பயணத்தில் 'ஆசை', 'காதல் கோட்டை' ஆகிய படங்கள் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதில் சமீபத்தில் 'காதல் கோட்டை' திரைப்படம் வெளியாகி 25 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது. இது குறித்து இயக்குநர் அகத்தியனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம்.
"கதைப்படி நாயகனும் நாயகியும் சந்திக்க மாட்டார்கள் என்பது எல்லாருக்கும் வித்தியாசமாக இருந்தது. வழக்கமான காதல் கதையில் இருந்து இது வேறுபட்டு இருந்ததால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. 'ஆசை' படத்தில் அப்போது அஜீத் நடித்து கொண்டிருந்தார். 'வான்மதி', 'காதல் கோட்டை' இரண்டிற்குமே இளமை மற்றும் துடிப்பான நாயகன் தேவைப்பட்டபோதுதான் அஜித் உள்ளே வந்தார். இரண்டு படங்களிலும் நல்ல நண்பரை போலதான் அவர் பழகினார். இன்று சினிமாவில் அவர் அடைந்திருக்கும் உயரத்திற்கு நிச்சயம் தகுதியானவர்.
'காதல் கோட்டை' என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது மழைதான். படம் முழுக்க செயற்கை மழைதான் பயன்படுத்தி இருப்போம். ஆனால், எங்களுக்காகவே மழை வந்தது போல ஒருநாள் மழை பெய்தது. கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் சில காட்சிகளை மழையோடு படமாக்கினோம்.
அதனால், எப்போது மழை வந்தாலும் 'காதல் கோட்டை'தான் முதலில் நினைவுக்கு வரும். அதேபோல, இந்த படத்தில் பிடித்த கதாபாத்திரம் என்றால் கதாநாயகியின் அக்கா கணவர்தான். வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் கதாபாத்திரம் போன்று அல்லாமல் அதை உடைத்து, கதாநாயகிக்கு உதவி செய்வது போல அமைந்திருக்கும். அதேபோல, 'இசை' படத்தின் பெரிய பலம். கதையின் தன்மையை புரிந்து கொண்டு தேவாவும் அருமையான இசையை படத்தில் கொண்டு வந்தார். படத்தின் 25வது வருடத்திற்காக சமீபத்தில் அனைவரும் சந்தித்தோம். இன்றும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவது புது அனுபவமாக இருக்கிறது" என்றார் மகிழ்ச்சியாக.
• 'காதல் கோட்டை' படத்திற்கு பிறகு 'ராசி', 'காதல் மன்னன்', 'வாலி' போன்ற காதல் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டிருந்தவருக்கு 'அமர்க்களம்' படம் ஆக்ஷன் ஹீரோ என்ற புதிய அவதாரத்தையும் தந்தது.
• நடிகர்களுக்கு பெரும் பலமே அவர்களது ரசிகர்கள்தான். நடிகர் அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம், அதற்கான மன்றங்கள் முன்பு இருந்தன. ஆனால், கடந்த 2011ம் வருடம் தனது பிறந்தநாளுக்கு முன்பே ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார் அஜித். மேலும் 2013வது ஆண்டுக்கு பிறகு மீடியாக்களுக்கு பேட்டி தருவதை எல்லாம் முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தார்.
ரசிகர் மன்றங்களை கலைக்கும் போது, 'திரைப்படங்களுக்கு அப்பால், பொதுமக்களின் பார்வைக்கு கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே அந்த நடிகனுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெருமை' என்பதையும் தெரியப்படுத்தினார்.
• பைக் பிரியர், கார் ரேஸ், ஏரோ மாடலிங் துறைகளில் ஆர்வம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதைத்தாண்டி அஜித்திற்கு புகைப்படங்கள் எடுப்பதிலும் அதிக ஆர்வம் உண்டு.
• ஒவ்வொரு வருடமும் தேர்தல் சமயத்தில் ஓட்டுப்பதிவின் போது பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்கும் வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகும். அதேபோல, நடிகர் அஜித் இந்த வருடம் அணிந்து வந்த கறுப்பு- சிவப்பு நிறத்திலானான ''மாஸ்க்', ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி அவர் அணிந்து வந்தது என ரசிகர்கள் மத்தியில் பேச்சு கிளம்ப, வழக்கம் போல இந்த வருட தேர்தல் சமயத்தில் அஜித் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரல் ஆனது.
• எஸ்.ஜே. சூர்யா, சிம்ரன் நடிப்பில் கடந்த 2004-ல் வெளியான படம் 'நியூ'. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'தொட்டால் பூ மலரும்' பாடலின் ரீமிக்ஸ்தான் 'பில்லா' படம் ரீமேக் செய்வதற்கான இன்ஸ்பிரேஷன் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அஜித்.
• படப்பிடிப்பு முடிந்தவுடனோ அல்லது படப்பிடிப்புக்களுக்கு இடையிலோ பைக் பயணம் மேற்கொள்வது அஜித்தின் வழக்கம். 'வீரம்' படம் முடிந்ததும் புனேவில் இருந்து சென்னைக்கும், 'வலிமை' படப்பிடிப்புகளுக்கு இடையில், ஹைதராபாதில் இருந்து சிக்கிம் வரை நண்பர்களுடன் பைக்கிலேயே பயணம் செய்தார் அஜித். இந்த புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
• ஆளில்லா சிறிய விமானங்களை உருவாக்குவதில் சென்னை, எம்.ஐ.டி. மாணவர்களுக்கு ஆலோசகராகவும், டெஸ்ட் பைலட்டாகவும் அஜித் இருந்தார்.
• இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுதல் முதல் நிலை போட்டியில் 'சென்னை ரைஃபிள் கிளப்' அணிக்காக பங்கேற்று 6 பதக்கங்களை வென்றார் அஜித்.
• படப்பிடிப்பில் அஜித் பிரியாணி சமைத்து கொடுப்பார் என்பது தெரியும். பிரியாணி போலவே, மீன் குழம்பும் சமைப்பதில் அஜித் கைதேர்ந்தவர்.
• 'அமராவதி' அறிமுகத்துக்கு பிறகு 'ஆசை' திரைப்படம் அவரை வெகுஜன மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்த்தது. அந்த படத்தில் முதன் முதலில் அஜீத் கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமியை நடிக்க வைக்கவே எண்ணியிருக்கிறார் படத்தின் இயக்குநர் வசந்த். ஆனால், அப்போது அரவிந்த் சாமியால் அந்த படம் நடிக்க முடியாமல் போக அவரை போல ஒரு கதாநாயகனை தேடிய போதுதான் ஒரு விளம்பரத்தில் பார்த்து அஜித்தை நடிக்க வைக்க முடிவு செய்தாராம்.
• வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் என்பதை எல்லாம் விட்டுவிட்டு கடந்த 2010-ல் இருந்து வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வருகிறார் அஜித். இதில் 'ஆரம்பம்', 'வீரம்', வேதாளம்' என படங்கள் அடுத்து ரசிகர்களிடையே வரவேற்பு பெறாமல் போக அதற்கடுத்து 'விவேகம்', 'என்னை அறிந்தால்' படங்கள் அவரது கரியரில் வெற்றி படங்களாக அமைந்தது.
• ஸ்ரீதேவிக்கு சிறந்த கம்பேக் படமாக அமைந்த 'இங்க்லீஷ் விங்க்லீஷ்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருப்பார் அஜித். இந்தி வெர்ஷனில் அமிதாப் நடிக்க தமிழில் அந்த கதாப்பாத்திரத்திற்கு அஜீத் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி. மறுக்காமல் உடனே நடித்து கொடுத்திருக்கிறார் அஜித்.
• சமீபத்தில் அவருக்கு பிடித்த இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் சிவாவும் ஹெச். வினோத்தும் இணைந்திருக்கிறார்கள். 'வலிமை' படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படத்தை மீண்டும் ஹெச். வினோத் இயக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
• இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறது 'வலிமை'. கொரோனா சூழல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலே படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட, தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.
• இன்னும் சில நாட்களில் அஜித் மற்றும் படக்குழுவினர் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறார்கள். இதில் படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா மற்றும் அஜித்திற்கு இடையிலான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்